பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1067

 

     (தலவிசேடம் பார்க்க.) காசியினின்றும் கங்கை கடவூர்வரை நீர் எறிந்து
பரவுமாகில் இவரது சடையும் அவ்வளவும் நீண்டு இங்கு விளக்கமுறும் என்ற
உட்குறிப்பும் காண்க. இக்குறிப்பினையே இச்சரிதத்தில் பலவிடத்தும்
(835,837,841,848 முதலியவை) ஆசிரியர் காட்டுதலும் 830-ல், தேற்றம்பெற
முதலில் வைத்துக்காட்டியதும் காண்க.

     தொண்டர் - மார்க்கண்டேயர். மேல்வந்த கூற்று - பதினாறு வயது
என்ற அவர் வாழ்நாளின் எல்லை யணுகிற்று என்று அவருடைய உயிர்
கவரும் பொருட்டு வந்த காலன். கூற்று - காலன் - இயம தூதன்.
"தருமராசற்காய் வந்த கூற்றினை" என்ற திருத்தாண்டகம் காண்க. மேல்வந்த
- குறித்துவந்த என்ற பொருளில் வந்தது. பண்டு - முன். இது ஒரு கற்பத்திற்
காசியில் நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

     காய்ந்த சேவடியார் - சேவடியினால் உதைத்துக் காய்ந்தவர்.
காய்தல்
- உயிர் கவர்தல் - கொல்லுதல். இச்சரிதம் இத்தலத்
தேவாரங்களிலெல்லாம் போற்றப்படுதலாலும், இப்புராணத்தினுட் (847 முதலிய)
பல இடத்திலுங் குறிக்கப்படுதலும் காண்க. இத்தலத்திற் காலசங்கார மூர்த்தி
சிறக்க வழிபடப் பெறுகின்றதும், அவரது திருவிழா பெருஞ்சிறப்பாகப்
போற்றப்படுகின்றதும் காணத்தக்கன. (தலவிசேடம் பார்க்க.)

     நீடியிருத்தல் - இப்பெருமையுடன் என்றும் நீங்கா துவிளக்கமாக
வீற்றிருத்தல்.

     இருப்பது - இருப்பதாகிய அவ்வூர். கடவூர் - அமிர்தகடம் - கலயம்
- சிவலிங்கத் திருமேனியாக உருக்கொண்டு எழுந்தருளிய ஊர் ஆதலின்
கடவூர் - கடபுரி எனப்பட்டது என்பது புராண வரலாறு. கால பயத்தைக்
கடத்தற்குதவும் ஊர் என்றலுமாம்.

     இப்பாட்டினால் இப்புராணத்துக்குரிய ஆறு - நாடு - நகரம் - குடி
வளம் - மூர்த்தி - தலம் - தீர்த்தம் - சரிதம் முதலிய சிறப்புக்கள் பலவும்
ஒருங்கே கூறிய அழகு காண்க. 1

832.
வயலெலாம் விளைசெஞ் சாலி; வரம்பெலாம் வளையின்
                                        முத்தம்;
அயலெலாம் வேள்விச் சாலை; யணையெலாங் கழுநீர்க்
                                        கற்றை;
புயலெலாங் கமுகின் கா;டப் புறமெலா மதன்சீர் போற்றல்;
செயலெலாந் தொழில்க ளாறே செழுந்திருக் கடவூ ரென்றும்.



2

     (இ-ள்.) வெளிப்படை. செழுமையும் திருவுமுடைய அத்திருக்கடவூரில்
எக்காலத்தும் வயல்களிலெல்லாம் விளைகின்ற செந்நெல் உண்டு; வயல்
வரப்புக்களிலெங்கும் சங்குகளும் அவையீன்ற இனிய முத்துக்களும் உள்ளன;
வயல்களின் பக்கங்களிலெங்கும் வேள்விச்சாலைகள் உள்ளன;
அணைகளிலெங்கும் செங்கழுநீர்களின் தொகுதி உண்டு; காடுபோலச்
செழித்த கமுகுச் சோலைகளில் எல்லாம் மேகங்கள் உள்ளன; அவற்றின்
புற இடங்களில் எங்கும் அதன் சிறப்பைப் போற்றுதல் உள்ளதாம்; செய்வன
எல்லாம் ஆறு தொழில்களேயாகவுள்ளன.

     (வி-ரை.) எலாம் - என்ற ஏழிடங்களினும் உண்டு உண்டு என்னுங்
குறிப்பு வினைமுற்று விரித்துரைத்துக்கொள்க. இவ்வாறுவினையைத்
தொகவைத்து அழகு பொருந்த அடுக்கிக் கூறுதல் ஆசிரியரது
சிறப்பியல்புகளில் ஒன்றாம். 65-67, 76 - 83 முதலிய பாட்டுக்கள் பார்க்க.

     வயல் - பொன்னிநீரின் வளத்தால் ஒங்கியநாடு என்றதனால்
மருதத்திணைப் பகுதியிற் சேர்தல் தெரிவிக்கப்பட்டமையால் வயலின்
சிறப்பினைவிதந்தோதினார்.

     செஞ்சாலி - செந்நெல். இதுவே இறைவனது பூசைக்கும் உணவுக்கும்
சிறந்தது. கார்நெல் இங்கு விளைப்பதில்லை எனவும், அது சிறப்புடைத்
தன்றெனவும் உணர்த்தப்பட்டதும் காண்க. அரிவாட்டாய நாயனார் புராணம்
பார்க்க.