பக்கம் எண் :


1068 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

      வரம்பெலாம் வளையின் முத்தம் - வளை- சங்கு. இன் - இனிய.
வளையும் அவை ஈன்ற முத்துக்களும். உம்மைத்தொகை. வளைகளீன்ற முத்து
என்றலுமாம். தண்டளரஞ் சொரிபணிலம் (63) என்றவிடத் துரைத்தவை
பார்க்க.

      அயலெலாம் வேள்விச்சாலை - இவை நகர்ப்புறத்தில் உள்ள
பொது யாகசாலைகள். 81-ல் உரைத்தவையும், சண்டீசர் புராணம் 3 - 4
திருப்பாட்டுக்களும் பார்க்க. வேதியர் மனைகளில் வளர்க்கும் ஆகுதிகள்
வேறு.

     அணை - ஒடுகின்ற நீரைத் தடுத்துத் தேக்கி வாய்க்காலில்
அணையவைத்தலால் அணை யெனப்படும். இங்கு அணை என்பது
ஆகுபெயராய் அதனாற் றடுக்கப் பெற்று ஓடும் நீரையும் நீர்க்கரையையும்
குறித்தது. கற்றை - செறிந்து முளைத்திருத்தலால் இவ்வாறு கூறினார்.
"விரிமலர்க் கற்றை" (73) என்றது பார்க்க.

     கமுகின்காடு எல்லாம் புயல் என மாற்றுக. காடு - மனிதர்
கைப்பட்டு விளைக்கப்படாது தானாக இயல்பிற்செழித்து விளையும்
தாவரக்கூட்டம் காடு எனப்படும். அவ்வாறல்லாது மனிதர் முயன்று
பயிராகவிளைப்பினும் இங்குக் கமுகுகாடுபோல நீர்வளத்தாலும்
நிலவளத்தாலும் செறிவாய் விளைந்திருத்தலினைக்குறிக்கக் கமுகின்காடு
என்றார். 67 பார்க்க. காடு - மிகுதி என்று கொள்வர் நச்சினார்க்கினியர்.

     அப்புறமெலாம் அதன்சீர் போற்றல் - அப்புறம் - அக்கமுகின்
சோலைப்பக்கம். அதன்சீர் - அதன்மேற்றவழும் மேகத்தின் சிறப்பு.
போற்றல்
- பாராட்டுதல். வான் முகில்வழாது பெய்தற்கேதுவாகிய
செயல்களைச்செய்தல். அதன் என்றதுகமுகின் காட்டினைச்
சுட்டுவதாகக்கொண்டு கமுகு சிறத்தலுக்குரிய தொழில்களைச் செய்தல்
என்றலுமொன்று. கமுகுப்பயிரினை எப்போதும் சீர்படுத்திப் பாராட்டுதல்
வேண்டும். சிறிது கவனம் குறையினும் அவ்வளவிற்கு அதன் பலன்குறையும்.
இதுபற்றியே "கடையாயார் நட்பிற் கமுகனையர்" (நாலடியார்) என்றது
நீதிநூலும்.

     செயல் எலாம் தொழில்கள் ஆறே - சீர் ஏய்ந்த மறையோர்
வாழும்பதியாதலின் தமக்குரிய ஆறு தொழிலே செய்தமைவர். உரியனவாகிய
அவ்வறுதொழில்களைத் தவிர இந்நாட் காணப்படும் வேறுவேறு
தொழில்களை அவர்கள் செய்வதில்லை என்பது அறியத்தக்கது. ஏகாரம்
பிரிநிலை. தேற்றமுமாம். ஆறு தொழிற்களாவன : (வேதம் ஒதுதல்,
ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. தொழில்களாறே
- என்பதற்கு நன்மார்க்கத்துக்குரிய செயல்கள் என்பர் மகாலிங்கையர்.

     செழுந்திருக்கடவூர் - செழுமை - வாய்ந்த நீர்வளத்தானும், திரு -
ஆறுதொழிலானும் ஆவன. முன்கூறிய அந்தக்கடவூர் எனச் சுட்டுவருவிக்க.
எலாம் என்றதனால் இவை இடத்தால் நிரப்பியதனையும், என்றும்
என்றதனால் எக்காலத்தும் எனக்காலத்தால் நிரப்பியதனையும் குறித்தார்.

     மலையின்முத்தம் - என்பதும் பாடம். 2

833.



குடங்கையி னகன்ற வுண்கட் கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறு மெழுவன மருதம் பாடல்;
வடம்புரி முந்நூன் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை யிடங்க டோறு மெழுவன சாமம் பாடல்.



3

     (இ-ள்.) வெளிப்படை. உள்ளங்கைபோல அகலமாகிய மைதீட்டிய
கண்களையுடைய பள்ளப்பெண்கள் கூடி ஆடுதற்கிடமாகிய இடமகன்ற
பண்ணைகள்தோறும் மருதப்பண்ணைப் பாடும் ஒசை எழுந்திசைப்பன;
வடமாகப்புரித்து முறுக்கிய முந்நூலணிந்த மார்பினையுடைய மறையவர்கள்
வேதச்சடங்குகள் செய்யும் இடங்கள்தோறும் சாமவேதத்தைப் பாடும் கானம்
எழுந்திசைப்பன.

     (வி-ரை.)வயல்களும் அவற்றின் அயலில் வேள்விச்சாலைகளும்
ஆகிய இவற்றின் சேய்மைக்காட்சியை மேற் பாட்டினாற் கூறினார்.
அவைகளிற் காணும் அணியைக் காட்சியினை இப்பாட்டினாற் கூறுகின்றார்.
அடுத்தடுத்துள்ள இவ்விரண்டினின்றும் இருவகைப் பாடல் எழுவன. ஒன்று
மருதப்பண்;