பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1069

 

மற்றது சாமப்பாடல். மருதப்பண் அந்நிலத்துக்கும் ஒழுக்கத்துக்கும் உரியது.
குறிஞ்சி முதலாகக் கூறப்பட்ட ஐந்திணைக்கும் ஐவகைப்பண்ணும் யாழும்
பாடலும் உண்டு. முல்லைக்குரிய முல்லைப்பண்ணும் கொடிப்பாலையும்
பிறவும் ஆனாயர் புராணத்துக் காண்க. சாமம் பாடல் தொழில்களாறே
என்ற அவ்வொழுக்கத்துக்குரியது. அப்பாடலைக் கூறியதோடு குழுமியாடும்
என வயலின் செயலும், சடங்குடை எனச் சாலையின்செயலும் கூறியதும்
காண்க. செயலும்பாட்டும் ஒருங்கு நிகழுந் தன்மையும் உடன்குறித்த சுவையும்
காணத்தக்கது.

     பாடல் - இரண்டும் சாதியொருமை. மருதப்பண் வகை நான்கென்றும்,
சாமம் அளவிறந்த பாடல்வகை யுடையதென்றும் கூறுவர். ஆதலின்
ஈரிடத்தும் எழுவன என்றார். வேள்விகளில் பிரமா என்ற ஆசிரியனும்,
ஹோதாக்கள், இருத்விக்கள், உத்காதாக்கள் என்ற மூவகைச் செயலாளர்களும்
உளர். இவர்களுக்கு இந்நான்கு உபகர்த்தாக்களாகப் பதினாறு உபகர்த்
தாக்கள் உளர். இவர்களுள் உத்காதாக்கள் சாமவேதம் பாடிக் கானம்செய்வர்.
இவரெல்லாம் கூடித் தத்தம் இடங்களில் இருந்து உரியசடங்குகள் செய்து
ஒன்றுசேர்ந்து பாடுதலானும் எழுவன என்றார்.

     குடங்கையின் அகன்ற - கண் விசாலமாக அகன்றிருத்தல்
பெண்களின் அழகிலக்கணங்களில் ஒன்றென்பர். விசாலாட்சி என்ற பெயர்
வழக்கும் காண்க.

     உண்கண் - மைஉண்ட - தீட்டிய - கண். மை என்பது வருவிக்க.
கடைசியர் - மருதநிலத்து மக்கள். இவர்கள் உழவுத்தொழிலுக்கு
இன்றியமையாது வேண்டப்படுவராதலின் அந்நிலத்தைச்
சொல்லுமிடங்களிலெங்கும் இவர்களையும் உடன் சேர்த்துக் கூறுவர்
புலவோர். 63 - 66 முதலியவை காண்க.

     மருதம்பாடல் - இத்திணைக்குரிய பண். இடம்படு - படுதல் -
உண்டாதல் என்னும் பொருளில்வந்தது. மலைபடுபொருள் என்புழிப்போலக்
காண்க. படுதல் - அகலமாதல். இடமுடைய - இடமகன்ற என்றலுமாம்.
"இடம்பட வீடெடேல்" என்றது காண்க.

     வடம்புரி முந்நூல் - பல இழைகளால் வடமாக முறுக்கப்பட்ட
பூணூல்.

     மறையோர் வைதிகச் செய்கை எனமாற்றுக. வைதிகச் செய்கை -
வேதவிதிப்படி செய்யும் சடங்குகள். சடங்குடை - இடங்கள் - வேள்விச்
சாலைகள்.

     சாமம் - நான்கு வேதங்களில் ஒன்று, வேதத்திற்குப் பொதுப்பெயராய்
வந்ததென்றலுமாம்.

     மருதம் பாடல் - சாமம் பாடல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை.
பாட்டால் எழும் ஒசை எழுவன என்க. இது மறையோர்வாழு மெயிற்பதி
என்றமையால் அவர்களும், அவராணையின் ஒழுகி அவர்களது நிலங்களை
உழுது பயிரிடும் மக்களும் கூறப்பட்டார்கள். ஏனைமரபினர் அருகியிருப்பர்.
இதுபற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்துரைத்தவையும் பிறவும் பார்க்க.

      நெடிய உண்கண் - என்பதும் பாடம். 3

834.



துங்கநீண் மருப்பின் மேதி படிந்துபால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக் கமலமுந் தீம்பா னாறும்; மங்
குறோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரு மாகுதிப் புகைப்பா னாறும்.



4

     (இ-ள்.) வெளிப்படை. நீண்ட கொம்புகளையுடைய பெரிய எருமைகள்
தோய்ந்து பால்சொரிந்த பொய்கைகளில் செங்கயல் பாய்தலால் அந்நீர்
தெறித்த மணமுடைய தாமரைகளும் தீம்பாலின் வாசமுடையனவாகும்;
மேகந்தவழுமளவும் உயர்ந்த மாடங்களையுடைய வேள்விச்சாலைகளின்
பக்கத்திற் சிறிது ஒதுங்கும் மேகங்களும் அங்கு அவை பொழிந்தநீரும்,
ஆகுதிகளின் புகைப் பகுதியின் மணமுடையனவாகும்.