பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1081

 
843.




விடையவர் வீரட் டானம் விரைந்துசென் றெய்தி யென்னை
யுடையவ ரெம்மை யாளு மொருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற வொடுக்கி யெல்லா மயர்த்தெழு மன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி யிருந்தனர் தமக்கொப்
                                        பில்லார்.




13

     (இ-ள்.) வெளிப்படை. தமக்கு ஒப்பில்லாதவராகிய கலயனார்,
விடையினையுடைய சிவபெருமானது வீரட்டானத்திருக்கோயிலுக்கு
விரைவாகச் சென்று சேர்ந்து என்னையடிமைப் பொருளாக உடையவரும்
நம்மை ஆளுகின்ற ஒருவரும் ஆகிய இறைவருடைய பண்டாரத்திலே
அந்தப் பொதியினை முழுதும் சேமித்துப், பிற எல்லாவற்றையும் மறந்து
எழுகின்ற அன்பு பொங்க அந்தச்சடையவருடைய மலர் போன்ற
பாதங்களைத் துதித்துக் கொண்டு அங்கேயிருந்தனர்.

     (வி-ரை.) விரைந்து சென்று எய்தி - விரைவு அவரது
ஆர்வங்குறித்தது. மேற்பாட்டுப் பார்க்க.

     என்னை உடையவர் - எம்மை ஆளும் ஒருவர் - இது கவிக்கூற்று.
உயிர்ப்பொருள் உயிரில் பொருள், அறிவுப் பொருள் அறிவில் பொருள்
என்ற பகுப்புக்களிலே பட்ட எல்லாவற்றையும் தமது அடிமையாகவும்
உடைமையாகவும் கொண்டவர் இறைவர் என்பது. "எல்லாமுன் னுடைமையே
எல்லாமுன் அடிமையே" என்ற தாயுமானார் பாடலும் காண்க. ஒருவர் -
இவ்வாறுள்ள தலைவர் ஒருவரே என்பது வேத முதலாகிய எல்லா உண்மை
நூல்களின் துணிபு. "ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேகாண் ஒன்றேபதி"
என்பது (சிவஞானபோ - 2 - உதாரணம்) ஞானநூல்.

     பண்டாரம் - சேமம். பொக்கிஷம் என்பர். இறைவனது
பெருந்திருவாகிய முத்தி சாதனங்களை உபதேசிக்கும் தேசிகர்களைப்
பண்டார சன்னிதிகள் என்று வழங்கும் வழக்கும், "அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே" என்ற திருவாசக
முதலியனவும் காண்க. "பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து, நாளுக்கு
நாட்சகல ஞானத்து - மூள்வித்துக் கொண்டாளவாளக் கருவி கொடுத்
தொக்கநின்று, பண்டாரி யான படிபோற்றி" என்ற போற்றிப் பஃறொடைக்
கருத்து நோக்குக.

     அடைவுறை ஒடுக்கி - அப்பொதியிற் கொண்ட குங்குலியமுழுதும்
அமைவுபடும்படி சேமித்து.

     எல்லாம் அயர்ந்து - பிற எல்லாவற்றையும் மறந்து. அவை,
மனைவிமக்களும் சுற்றமும் தாமும் பசியால் வருந்துதலும், அதற்காக
நெற்கொள்ளத் தாலிகொண்டு வந்ததும் பிறவுமாம்.

     அயர்த்தல் - மறத்தல். "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு"
(திருஞான புரா - 1009), "எம்பிரான்றனை யெறியா தயர்த்தேன்" (சாக்கியர்
புரா - 15) முதலியவை காண்க. எல்லாம் ஆர்த்தெழும் என்பது
பாடமாயின் முற்றும் நிறைந்து மேலெழுகின்ற என்க. ஆர்த்தல் - கட்டுதல்;
அஃதாவது ஏனையவற்றைப் பந்தித்துத் தான் மேம்படுதல்.

     சடையவர் - 830 - 831 முதலியவற்றில் இதுபற்றி முன் உரைத்தவை
பார்க்க.

     தமக்கொப்பில்லார் (ஆதலின்) இருந்தனர் என்க. இவ்வாறு
செய்தலும், பின்னர் அன்பு பொங்க இருத்தலும் பிறர்க்கு அரிதாமாதலின்
ஒப்பில்லார் என்றார்.

     நம்மையாளும் - என்பதும் பாடம். 13

844.

அன்பரங் கிருப்ப நம்ப ரருளினா லளகை வேந்தன்
றன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமே னெருங்க வெங்கும்
பொன்பயில் குவையு நெல்லும் பொருவில்பல் வளனும்
                                       பொங்க
மீன்பெருஞ் செல்வ மாக்கி வைத்தனன் மனையி னீட.



14