(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு அன்பர் அங்கே திருவீரட்டானத்தில்
இருந்தாராக, நம்பரது திருவருளினாலே குபேரன் தனது பெருநிதியத்தைப்
பூமியில் நெருங்கும்படியாகக் கொண்டுவந்து அவரது திருமனையில்
எவ்விடத்தும் நீடியிருக்கும்படி பொன் நிரம்பிய குவைகளும் நெல்லும்
ஒப்பற்ற பிறவளங்களும் மேன்மேற் பொங்க நிலைத்த பெரிய செல்வமாக்கி
வைத்தனன்.
(வி-ரை.) அன்பர் அங்கு இருப்ப -
அன்பு பொங்கிய
நிலையினராதலின் அங்கிருந்தார் என்பது குறிக்க அன்பர்
என்ற
சொல்லாலும், தம்மை நம்புவார்க்கு எளியராய்க் காத்து நிற்கின்றவராதலின்
நம்பர் என்ற சொல்லாலும் கூறினார். "எம்பிரா
னெம்மை யாளு மிறைவனே
யென்று தம்மை, நம்புவார்க் கன்பர் போலு நாகவீச் சரவனாரே" என்ற
திருநேரிசையும் காண்க. இக்கருத்துப்பட மேற்பாட்டில் "என்னை யுடையவர்
எம்மை யாளும் ஒருவர்" என்றதும் காண்க. தினமும் ஆன்மார்த்தமாகத் தாம்
வழிபடுந் தலமாகிய திருநாகேச்சுரத்தினது மேற்கூறிய தேவார நினைவுக்
குறிப்பினால் ஆசிரியர் இவ்வாறு குறித்தனர் போலும். நம்புவார்க்கன்பர் -
நம்பர் என்ற தன்மை, மார்க்கண்டர்க்காக மறலியை உதைத்தவாற்றால்
இத்தலத்துக்குச் சிறப்பாக உரியதுமாம்.
அருளினால்
- ஆணையினால். "தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்,
என்கடன்பணி செய்து கிடப்பதே" என்ற திருவாக்குச் சிந்திக்க.
அளகை
வேந்தன் - குபேரன். திசைக்காவலாளர்க ளெண்மரில்
அடியார்களுக்கு நிதி கொடுக்கவென்று வடதிசைக் காவலனாகச்
சிவபெருமானால் நியமித்து வைக்கப் பட்டவன்; சிவபெருமான் தோழன்
எனவும், நிதிக்கிழவன் எனவும் பெறுபவன். 444 - 445 பார்க்க.
பொன்
பயில் குவை - குவை - குவி என்னும் பகுதி திரிந்து ஐ
விகுதிபெற்றது. பொற்குவைகள் இனி வேண்டும்
குங்குலியம், நெல்
முதலியவை கொள்ளவும், நெல் இப்போது வேண்டும்
குறைவறுத்தற்கும்,
பல்வளன் - பிற உணவுப் பண்ட முதலியவற்றுக்கும்
உதவும் பொருட்டு
இவ்வாறு பலவும் வைக்கப்பட்டன என்றபடி. பொன்னை மட்டில் வைத்தால்
அதுகொண்டு ஏனைய எல்லாம் பெறலாமாதலின் பிறவற்றை வைத்தல்
எற்றுக்கு? என்னின், பொன்கொண்டு நெல் முதலியவை பெறத் தாமதமாம்;
அதுவரை அன்பரும் குடும்பமும் பசித்திருப்பதனை இறைவர் பொறாராதலின்
உடனே சமைத்தற் பொருட்டு எல்லாம் வகைவகையாக வைக்க அருளினர்
என்க. நெல்லை அரிசியாக்கும் சிரமமும் தாமதமும் பொறாத இறைவர்
அரிசியும் வைத்தனர் என 846-ல் கூறியதும் காண்க. பசித்திப்போருர்க்குக்
காசு கொடுப்பதும், பொன்னொன்றே வேண்டுவதென்று தேடியலைவதுமாகிய
இந்நாள் வழக்குக்கள் சிறப்பிலவென்க.
மன்பெரும்
செல்வம் - சிவனுக்கு அடிமைசெய்ததனாற் போந்த
புண்ணியச் செல்வமாகலின், ஏனைச் செல்வங்கள்போல் அழிந்துபடாது
நிலைத்த பெரிய செல்வமாயிற்று என்றார். இவை புண்ணிய விளைவாதலாற்
பின்னர் ஆண்டானது பூசைக்கும், அடியார்க்கும் திருக்கூட்டத்துடன்
எழுந்தருளிய சைவசமய பரமாசாரியர்களிருவரின் பூசைக்கும் உதவின
என்பதும் குறிப்பு. 852 பார்க்க. "நின் பொரு ள்களெல்லா, மறத்தாற்றி
னீட்டப் பட்ட வனையவை புனித மான, திறத்தாலே நமக்கு நம்மைச்
சேர்ந்தவர் தமக்கு மார்வ, முறத்தாவில் வாத வூரனுதவினன்..." (மண்சும -
பட - 62) என்று திருவிளையாடற் புராணத்துட்கூறியபடி சிவதருமத்தாற்
போந்த பொருள்களே சிவதருமங்களுக்குதவுமென்க. 14
845.
|
மற்றவர்
மனைவி யாரு மக்களும் பசியால் வாடி
யற்றைநா ளிரவு தன்னி லயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக் கனவிடை நாத னல்கத்
தெற்றென வுணர்ந்து செல்வங் கண்டபின் சிந்தை
செய்வார், |
15 |
|