பக்கம் எண் :


1084 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

குறைவிலா நிறைவுடய இறைவர் தமது தன்மைக் கேற்பக் கொடுத்தார் என்க.
காணும் - காணப்படும். படுவிகுதி தொக்க செயப்பாட்டு வினைப்பெயரெச்சம்.

     உள்ள - உள்ளவை அகரவீற்றுப் பலவின்பாற்பெயர்.
இரண்டனுருபுதொக்கது.

     அருளாம் என்றே கரங்குவித்துப் போற்றி - அந்தப் பொன் -
நெல் - அரிசி முதலியவற்றை அவ்வப்பொருள்களாகக்காணாது
எம்பெருமானுடைய அருளையே கண்டார். ஆதலின் கரங்குவித்துத் தொழுது
துதித்தார். இவை அருளால் வந்தன என்று அருளால் உணர்ந்து, அருள்
என்று போற்றினார். திருவருளாற்போந்த பொருள்களைத் திருவருட்
சொரூபமாகவே கண்டு வணங்குதல் பெரியோர் இயல்பு. திருவரத்துறையில்
முத்துச்சிவிகை இறைவனருளாற் போந்ததென்று கனவில் உணர்த்த உணர்ந்த
திருஞானசம்பந்தநாயனார் அதனை நனவிற் கண்டதும், "அரத்துறை
அடிகள்தம் மருளே" என்று திருப்பதிகம்பாடி வணங்கியதும் இங்கு
நினைவுகூர்க. நல்லாள் தன்பால் புகலிவேந்தர் கண்ணுதல் கருணை வெள்ள
மாயிர முகத்தாற் கண்டார்" என்ற ஆளுடைய பிள்ளையார் புராணம் (1109)
காண்க.

     தம்பெரும் கணவனார் - உலகர்களுள் உடம்போடொழியும்
ஏனைக்கணவர்கள் போலல்லாது, திருவருள் விளைவிலே கூட்டுவித்து
உயிர்க்குறுதி தரும் கணவர் நாயனார், என்று குறிக்கப் பெருங்கணவனார்
என்றும், கொழுநற் றொழுதெழும் பெருங்கற்பு வாய்த்தவரென்று குறிக்கத்
தம்
என்றும் கூறினார். 16

847.



காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை யடியவ ரறியு மாற்றாற்
"சாலநீ பசித்தா யுன்றன் றடநெடு மனைவி னண்ணிப்
பாலினின் னடிசி லுண்டு பருவர லொழிக" வென்றார்.



17

     (இ-ள்.) வெளிப்படை. காலனை உதைத்துருட்டிய சிவந்த
காலினையுடைய சிவபெருமான் கலயனாராகிய, திருஅடியில் நிறைந்த
அன்புபூண்ட சிந்தையுடையவவர் அறியும்படி "நீ மிகப்பசித்தாய்; உனது
விசாலமாகிய பெரிய வீட்டிற் சேர்ந்து பாலுடன் கலந்த இனிய உணவை
உண்டு பசித்துன்ப நீங்குவாயாக" என்றருளிச்செய்தார்.

     (வி-ரை.) காலனைக் காய்ந்த செய்ய காலனார் - 831 பார்க்க.
காலன் - காலனார் சொற்பின் வருநிலை. காலன் - இயமன் - கூற்றுவன்.
சிவபெருமானது ஆணையின்படி காலத்தை யளந்து அதன் கிரமப்படி
உயிர்களைக் கொண்டு சேர்ப்பவன். காலனார் - காலினை உடையவர்.
செய்ய காலனார்.
உதைத்தமையாற் சிவந்தது என்பதும் குறிப்பு. சிவப்பு
இராசதத்தின் நிறமாதலின், "காலனாருயிர் மாளக்கறுத்தன" என்றபடி அவரது
சினத்தைத் திருவடியின்மேல் ஏற்றிக் கூறினார் என்றலுமாம். "நின்போ
லமரர்கள் நீண்முடிச் சாய்த்து நினைந்துகுத்த, பைம்போ துழக்கிப் பவளந்
தழைப்பன
" என்ற திருவிருத்தத்தின் கருத்தும் காண்க.

     அடி ஆலும் அன்புடைய சிந்தையவர் - எனக் கொண்டு கூட்டுக.
திருவடியினில் நிறைந்த அன்பு கொண்ட சிந்தையாதலின் அதனுள் தமது
பசியும் மனைவி மக்கள் முதலியோர் பசி முதலிய எவையும் முளையா;
அதனால் அவர் அறியும்படி இறைவன் அறிவித்தார் என்பார் அறியும்
ஆற்றால்
என்றார். திருவடித் தியானத்தில் உறைத்து நிற்பார்க்கு உலகமும்
அதனுள் அனுபவங்களும் தோன்றா. இதனை "மண்டு காத லருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்" என்ற சண்டீசநாயனார் புராணத்திலும்
பிறாண்டும் காண்க. இதனை உணர்த்தவே "எல்லாம் அயர்த்தெழு மன்பு
பொங்கச், சடையவர் மலர்த்தாள் போற்றி யிருந்தனர்" (843) என்றது காண்க.