செந்நெலின்
அரிசி - முதன்மைபற்றி அரிசியைச் சொன்னவதனால்
உதவியுணவாகிய செங்கீரையும் மாவடுவும் இனம் பற்றி உடன்கொள்ளப்படும்.
அந்நிலை
- அவ்விடத்து - அப்பொழுதே. அரிசி சிந்த, முதல்வனார்
கமரே முன்னிலையாக அமுதுசெய்ய, அந்நிலை வடுவின் ஓசை
செவியுறக்கேட்ட தொண்டர் எனக் கூட்டிக்கொள்க.
முன்னிலை......தொண்டர்
- இவ்வாறு ஆசிரியர் எடுத்துக்காட்டிய
பெருமைபற்றியே "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை, ‘யைய! விதுவமுது
செய்' கென்று - பையவிருந், தூட்டி யறுத்தவர்க்கே யூட்டி யறுத்தவரை,
நாட்டியுரை செய்வதென்னோ நாம்" (20) எனவும், "கல்லிற் கமரிற்
கதிர்வாளிற் சாணையினில், வல்லுப் பலகையினில் வாதனையைச் -
சொல்லும், அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்கா ணையா, சகமார்க்கத்
தாலன்றே தான்" (50) - (திருக்களிற்றுப்படியார்) எனவும் விதந்து எடுத்து
ஞானசாத்திரம் ஓதியதும் காண்க.
மன்னும்
ஆனாயர் - இவ்வுலகத்திலிருந்து குழல் வாசித்தபடியே
அருளால் அந்நின்ற நிலையே ஐயர்மருங்கு அணைந்து,
அத்திருக்குழல்வாசனை முதல்வனார் எப்போதும் கேட்க அவர் மருங்கு
அணைந்து என்றும் உள்ளாராதலின் (964) மன்னும் -
நிலைபெறும் என்றார்.
இவ்வுலகத்தில் போந்த அந்நிலையே வீட்டுவகத்திலும் மன்னும் என்ற
குறிப்புக் காண்க.
ஆசிரியர்
தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரித்திரத்தின் சாரத்தை
வடித்து எடுத்து முடித்துக் காட்டி, இனிமேல் வரும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்கின்றார்.
செய்கை
- திருவைந் தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட
பண்ணிசையினை வேய்ங்குழலில் வாசித்து உலகெலாம் இசைமயமாக்கி,
அதுவே ஐயன்றன்றிருச் செவியினருகணையப் பெருக்கிய அருஞ்செய்கை
(960 - 961). திருக்குழல்வாசனை என்பர் ஆசிரியர். 23
சரிதச்
சுருக்கம் :- சோழர்களது காவிரிநாட்டில்
கணமங்கலம்
என்பது ஒரு பகுதி. அது நீர்வளம், நிலவளம், பயிர்வளம் முதலியவற்றாற்
சிறந்து விளங்குவது. அதில் மிக்க செல்வத்து வேளாளர் குலத்துத்
தலைமையராய், மனையறத்தின் வாழ்வாராய்ச், சிவபெருமானது
திருப்பாதங்களைத் தொடர்ந்து பற்றுகின்றவராய்த் தாயனார்
என்ற திருநாமம்
உடையவராய், ஒரு பெரியார் இருந்தார். அவர் சிவபெருமானுக்கு ஏற்றன
என்று செந்நெல்லரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு
வந்து திருவமுது செய்விப்பாராயினார்.
இத்திருத்தொண்டினை
அவர் வறுமைவந்த காலத்தும் விடாது செய்து
வருவார் என உலகுக்குக்காட்டி அதுகொண்டு உலகை உய்விக்கும்
பொருட்டு, இறைவர் அரவது, வழிவழி வந்த செல்வத்தை அறியாதவாறு
மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானையுண்ட விளங்கனி
போல
உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் தாயனார் பாவை பங்கருக்குத் தாம்
முன் செய்துவந்த திருப்பணியை முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு
நெல்லரிந்த செந்நெற் கூலியாகக் கிடைத்ததனை யெல்லாம் இறைவருக்குத்
திருவமுது ஆக்கினர்; கார் நெல்லரிந்த கார்நெற் கூலிகொண்டு தாம்
உண்டுவந்தனர். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுள்ளம் பற்றவே
வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லே யாகி விளைந்தன. அவற்றை
அறுத்த நெற்கூலியினைக் கொண்டு, "இஃது அடியேன்செய்த
புண்ணியமேயாகும்" என்று சிந்தைமகிழ்ந்து, தாயனார் அக்கூலியெல்லாம்
திருவமுதுக்கே யாக்கினர். குறையாத அன்பினையுடைய மனைவியார்
உணவுக்காக வீட்டுக்கொல்லையில் உள்ள கீரைவகைகளைக் கொய்து
சமைத்து இடப், பெருந்தகையார் அருந்தித், திருப்பணியை முட்டாது செய்து
|