|
பெருமா னடித்தாமரையல்லதில்லாது
அன்பு மூளப்பெற்றார் என மேல்வரும்
பாட்டில் இக்கருத்தைத் தொடர்ந்து கூறியதும் காண்க. "பற்றுக பற்றற்றான்
பற்றினை யப்பற்றைப், "பற்றுக பற்று விடற்கு" என்ற திருக்குறளும், "மற்றுப்
பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்" (நம்பிகள் -
தேவாரம்) "பற்றை யெறியும் பற்றுவரச் சார்பா யுள்ள" (சண்டீசர் -
புரா - 11) "பற்றையறுப்பதோர் பற்றினைப் பற்றிலப, பற்றை யறுப்பரென்
றுந்தீபற" (உந்தி - 25), "பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து,
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப், பற்றுவிடி லந்நிலையே
தானே பரமாகும்" (களிற்றுப்படி - 30) என்ற கருத்துக்களும்
சிந்திக்கத்தக்கன. அறுபான்மும்மை உண்மை நாயன்மார்களுள்
துறவுநிலைபூண்டு சிவனையடைந்த இருவரில் மூர்த்தியார் ஒருவராதலின்
அவரது துறவுக்குக் காரணமாகிய உள்ள நிலையை இவ்வாறு முதலிற்
கூறினார்.
விடாத
விருப்பின் மிக்கார் - விடாத - எஞ்ஞான்றும் பிறழாத.
விருப்பின் மீகுதல் - ஆசை மேன் மேல் அதிகரித்தல்.
இவ்வியல்புகளே
இச்சரித விளைவுக்குக் காரணமாயின என்பதனை 983 - 987 பாட்டுக்களிற்
கண்டு கொள்க. "விடாத அன்புடனென்றும் விருப்பால்" (அதிபத்தர் -
புரா. 11) என்ற கருத்தும் காண்க.
976.
(வி-ரை.) பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை -
விடாத
விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு
என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது என்க.
மனத்துள் அன்பு பெருகிப் படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினைக்
கூறியபடி. 751 பார்க்க.
கேளும்......இல்லார்
- கேள் - உயிர்ச்சார்பு. துணை - உயிர்ச்
சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் - பதமுத்திப்போகங்கள்.
ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில்
என்றுபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு
இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.
"அழிவில் மெய்வரம் பெற்றன மென்றனையதற்கு, மொழி தரும்பொருள்
கேண்மதி முச்சகந் தன்னுட், கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய் (சூரனமைச்சியல் - 139).
இறைவன் றாளிற் பெறும் அபரமுத்திப் பெரும் போகமொன்றே என்றும்
அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு. அல்லது
இல்லார் -
உறுதிப் பொருள் தர எதிர்மறை முகத்தாற் கூறினார். 934 முதலியவை
பார்க்க. "ஈச னேநீ யல்ல தில்லை யிங்கு மங்கு மென்பதும்" என்ற
திருவாசகம் காண்க. கேளும் துணையும் என்றவற்றால்
ஆன்மாக்கள்
இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில்
பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும்
குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள
எல்லாம் என்பது. "நெறியது வகையு மேலொடு கீழடங்க வெறும்பொயென
நினைந்திருக்க" என்பது சித்தியார். துணை - "துணையென்று நான்றொழப்
பட்டவொண் சுடரை" (கழுமலம் தக்கேசி - 3) என்ற நம்பிகள்
தேவாரங்காண்க.
ஆளும்
பெருமான் - "அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே"
(காந் - பஞ்ச. பஞ்சாக்கரப் பதிகம் - 6) என்று ஆளுடையபிள்ளையார்
அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும்
சிவபெருமான் என்பதாம். "இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்;
அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்; எம்மையாளு மிடைமரு தன்கழல்,
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே" (குறுந் - திருவிடை 4) என்ற
அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க.
மூளும்
பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் - அன்பு மூண்டு
பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பது. மூர்த்தி -
உடல் - திருமேனி
(வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான்.
ஆசனம் - மூர்த்தி- மூர்த்திமான்
|