பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1271

 

     மேலும் அடியார்களிடத்து அபசாரப்படுதல் சிவாபராதத்தினும் பெரிய
பாதகமாய்ப் பற்றியலைக்குமென்பதறியாது அவர்களையும் என்ற குறிப்பும்
காண்க. அன்றியும், அடியாரிதயம் கலங்கச் செய்தால் அதனைச் செய்தோர்
விரைவில் நாசமுறுவர் என்பதும், அப்பர் சுவாமிகள் காலபாராயணத்
திருக்குறுந்தொகையுள் இயமன்றூதரை நோக்கி ‘அடியார்களின் பக்கத்திலும்
செல்லாதீர்கள்' என்று ஆணை தந்ததும் குறித்து அத்தன்மையினராகிய
அடியாரையும் என்றார். உண்மை உயர்வு சிறப்பு.

     ஆனால் வாதம் செய்து சமணர்புத்தர்களை நமது பரமாசாரியர்
களாகிய ஆளுடைய பிள்ளையாரும் திருவாதவூரடிகளும்
போக்கியருளினர்களன்றோ? அப்பர் சுவாமிகளும் ஆளுடைய நம்பிகளும்
சமணபுத்தர்களை இழித்துக் கூறியருளினார்களே? இச்சரிதத்திலும்
சமண்பாதகன் மாய்ந்திடவும் சமண்போகவும் உள்ள நாள் என்று வரும்
என மூர்த்தியார் எண்ணினாரன்றோ? எனின், அவை உண்மையே.
புறப்புறச் சமயிகளாகிய இவர்கள் தமது சைவ நாட்டினுட் புகுந்தோர்
தத்தம் அளவில் நின்றமைந்துபடாமல் சைவ நாட்டைக்கவர்ந்து கொண்டு
முதற் சைவத்துக்கு இடையூறு விளைத்தனர். அதன் பின்னே
அவ்விடையூறுகளை நீக்கித் தற்காத்துக்கொள்ளவும், உண்மைநிலை
நாட்டவும், இறைவனது நியமமாகிய திருவருள்பெற்று இச்செயல்களைச்
செய்தனரே யன்றிப், பகைமைபூண்ட இகலினாலன்றென்பது உண்மை.
"இகலில ரெனினும்" (திருஞான - புரா - 854) என்பதும், அப்புராணம் -
736 - 741 - ல் கூறியனவும் காண்க.

     வன்மை செய்வான் - தத்தம் நிலையில் நிற்கவொட்டாது
பலவாற்றாலும் வலிந்த செய்கைகளைச் செய்வானாகி. செய்வான் -
முற்றெச்சம். செய்வான் - எண்ணி (982), மிறை செய்யவும் என்று
முடித்துக்கொள்க. இக்கொடியோன் எண்ணிய அளவில்
நின்றுபட்டனவேயன்றி அத்தீவினைகள் முற்றுப்பெறாதொழிதலின்,
அது குறிக்கச் செய்வான் - எண்ணி - என்ற வினையெச்சங்கள்
செய்யவும்
என்ற குறிப்பு வினையெச்சத்துடன் முடியவைத்தார்.     14

     982. (வி-ரை.) செக்கர்ச்சடை - செக்கர் - அந்திச் செவ்வானம்.
அது போன்ற சிவந்த ஒளியுடைய சடை. "மாலையின் றாங்குருவே போலுஞ்
சடைக்கற்றை" (அற்பு - அந் - 65) என்றது அம்மையார் திருவாக்கு.

     விடையார் - அறத்தின் உருவமாகிய விடையினையுடையார்.
தருமமூர்த்தி என்ப.

     திருவாலவாயுள் முக்கட்பரனார்- சிறப்பாகிய கண்ணுடையார்
என்றது. நெருப்பாகிய நெற்றிவிழி. இருள்போக்குவதும் அஞ்ஞானத்தை
எரிப்பதுமாம்.

     இம்மூன்றும், பகைப்பொருள்களை ஒன்றுசேர வாழ வைப்பவர் என
முன்பாட்டிற் கூறிய சிறப்பும், அதுதான் அவ்வவற்றின் நிலைகளுக்கேற்பத்
தருமவழியின் நிறுத்துபவர் என்ற சிறப்பும், அந்நிலையிற் பிறழ்ந்தோரைப்
போக்கி விளக்கம் செய்வர் என்ற சிறப்பும் குறித்து நின்றன.

     திருத்தொண்டரை - அத்தன்மைகளையுடைய தலைவருக்குத்
தொண்டராதலின் இவரும் அச்சிறப்புக்களுக்குரியவர் என்பது. இவரது
அன்பின் உறைப்பினாலே கொடியவன் இறந்துபட்டுச் சமண்போகவும்,
சைவம் விளங்கவும் கூடிற்று என்பது இச்சரிதத்தாற் போந்த உண்மை.
985 - 1006 பார்க்க. தொண்டரை மூர்த்தியாரை என்றுகூட்டி உரைத்த
கருத்துமிது.

     மைக்கல்புரை நெஞ்சு - மை - கருமை. நெஞ்சுக்குக்
கருநிறமுடைமையாவது வஞ்சம் முதலிய தீக்குணமுடைமை. வஞ்சம்
பொறாமை முதலிய தீக்குணங்கள் தாமத குணத்தின்பாற்பட்டவை. தாமத
குணத்தின் நிறம் கறுப்பு என்ப. இத்தொடர்பு குறிக்கவே வஞ்சகன்
என்றார். "மை பொதி விளக்கேயென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து" (473)
என்றது காண்க. கல் - இங்கு அன்புக்கிணங்காத கடினத்தன்மை குறித்தது.
கற்களில் கருங்கல் மிகக் கடினமுடைத்தென்பர்.