பெண்ணாசையிற் சிறிதும்
படாத முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார்
ஐம்புலப் பகையாகிய உட்பகையும் சமணர் வேற்றரசர் முதலிய புறப்பகையும்
நீக்கி உலகத்தை நெடுங்காலம் தனிமுடி கவித்து அரசாண்டு எல்லா
வுயிர்களுக்கும் வரும் துன்பம்நீக்கிக் காத்தனர். பரமன்னவர் தம்மடி பணிந்து
போற்ற எவ்வகையாலும் உலகம் கேடுறாதபடி காத்துத் தமக்குரிய
திருத்தொண்டினையும் விடாது செய்து வாழ்ந்து இறைவனது திருவடி நீழல்
சேர்ந்தனர்.
தல
விசேடம் :- மதுராபுரி -
இது பெரும்பாலும் மதுரை என்று
வழங்கப்பெறும். கடம்பவனத்தில் முளைத்த சொக்கலிங்கப் பெருமானைத்
தேவர்கள் பூசித்ததனை ஒருநாளிரவிற் கண்டு ஒரு வணிகன் அறிவிக்க
அறிந்த குலசேகர பாண்டியன் கடம்பு அடர்ந்த காட்டைத்திருத்திக்
கோயிலும் திருநகரமும் செய்தான். அப்போது சிவபெருமான் தமது தலையிற்
சூடிய பிறையினிடத்துள்ள மதுவைத் (அமுதத்தை) தெளித்துப் புனிதமாக்கிய
காரணத்தால் இப்பெயர்பெற்றது. இதுபோலவே பற்பல அற்புதங்கள் பற்றிய
காரணங்களால், நான்மாடக்கூடல், திருவாலவாய், கடம்பவனம், துவாதசாந்தத்
தலம், பூலோக கயிலாயம், சிவராசதானி முதலிய பல பெயர்களையுடையது.
இதனைச் சுற்றி இன்றும் காணப்படும் பசுமலை, யானைமலை, நாகமலை,
பன்றிமலை முதலியவை இங்குச் சிவனது அருள்விளையாடல்களையும்
அருளின் எளிமைப்பாட்டினையும் விளக்கி நிற்கின்றன. வையையாற்றின்
இருகரைகளும் இவ்வாறே அற்புதத் திருவருள் நிகழ்ச்சிகளை
வெளிப்படுப்பன. இது பாண்டிநாட்டின் தலைநகராவதுடன் சிவபெருமான்
அம்மையப்பராக அரசு வீற்றிருந்து அரசு செலுத்திய சைவத் தலை
நகருமாகும். சிவபெருமானும் முருகக்கடவுளும் தலைவர்களாய்ச் சங்கம்
வீற்றிருந்து தமிழாராய்ந்த தலம். இத்தலத்தில் தமிழின்பொருட்டே இறைவன்
வெளி வந்து பல திருவிளையாடல்க ளியற்றியருளினர். அகத்தியர், நக்கீரர்,
பரணர், கபிலர் முதலிய பொய்யடிமையில்லாத புலவர்கள் சங்கமிருந்து தமிழ்
பரப்பிய தமிழ்த்தலைநகர். பொன், வெள்ளி, இரத்தினம், தாமிரம், சித்திரம்
என்ற மணி மன்றங்கள் ஐந்தனுள் வெள்ளியம்பலமாகிய
தலம். விராட்புருட
உருவத்தில் துவாதசாந்தத் தலமாகவுள்ளது. சமண்காடு மூடிச் சைவப்பயிர்
தழையவொட்டாது அமிழ்த்திநின்ற காலத்தில் திருஞானசம்பந்த நாயனார்
எழுந்தருளிச் சமண்காடு போக்கிச் சைவம் தழைத்தோங்கக்கண்ட தலம்.
அவருடைய விசயத்துக் காரணர்களாயிருந்த மங்கையர்க்கரசியம்மையார்,
குலச்சிறைமந்திரியார் இவர்களுடனே நின்றசீர் நெடுமாறராகிய கூன்பாண்டியர்
நெடுங்காலம் அரசியற்றிச் சைவ சமயக் காவல்செய்த தலம். இத்தலத்திற்
சிவனைப்பூசித்ததனால் இந்திரன் பழியும் வருணன் வயிற்று நோயும் தீர்ந்தன.
இன்னும் பல முனிவர் தேவர் இருடியர் முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர்.
இராமலட்சுமணர்கள் பூசித்து இராவண சங்காரத்துக்குரிய வரம் பெற்றனர்.
சிவபூசையின் பெருமையை உலகமறிந்து சிவபூசைசெய்து உய்யும்பொருட்டுச்
சோமசுந்தரக் கடவுள் தம்மைத் தாமே பூதித்த மூர்த்தியாகிய "இம்மையே
நன்மை தருவார்" எழுந்தருளி யிருக்கும் சிறப்புடையது. தம்மிடத்து அன்பால்
நிறைந்த அடிக்குடியாகிய பாண்டியர்கள் பொருட்டும், கௌரி -
பொன்னனையாள் - வந்தியம்மை - பாணபத்திரர் மனைவியார் முதலிய
அம்மையார்களின்பொருட்டும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் - பாணபத்திரர்
முதலிய பல அடியார்களின் பொருட்டும், திருவாதவூரர் - திருஞானசம்பந்த
நாயனார் என்ற எந்தம் பெருமக்களான சமயசாரியர்களின் -
திருஞானசம்பந்த நாயனார் என்ற எந்தம் பெருமக்களான சமயாசாரியர்களின்
பொருட்டும், பன்றிக்குட்டிகள் - கரிக்குருவி - நாரை முதலிய தாழ்ந்த
பிராணிகளின் பொருட்டும் கருணையுருவம் தாங்கிவந்து இறைவனார்
அநேகம் அருட்டிருவிளையாடல்களை யாவருங் காண இயற்றி யருளிய
சிறப்புடையது. திருச்செந்தில் வேற்பெருமான் றிருவருள்பெற்று விளங்கிய
குமரகுருபர சுவாமிகளால்
|