பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1311

 

மீனாட்சியம்மையார் பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்கள் பாடப்பெற்றது.
இன்னும் இதன் விசேடங்களை ஆலாஸ்ய மாகாத்மியம், நீபவநமகாத்மியம்
முதலிய வடமொழிநூல்களாலும், திருவிளையாடற்புராணம் -
கடம்பவனபுராணம் - நம்பி திருவிளையாடல் முதலிய தமிழ் நூல்களாலும்,
சங்கப்பழந்தமிழ்களாலும் அறிந்து கொள்ளலாம். விரிவான வரலாறுகள்
திருஞானசம்பந்த நாயனார்புராணம், திருநாவுக்கரசுநாயனார் புராணம்,
கழறிற்றறிவார்புராணம், திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம்
என்பனவற்றினும், பிறாண்டும் கண்டு கொள்ளத்தக்கன.

     கோயில் - திருவாலவாய்; மதில் - கபாலிமதில்; தீர்த்தங்கள் -
பொற்றாமரை, எழுகடல், வையை முதலியன; தலமரம் - கடம்பு; சுவாமி -
சொக்கலிங்கப்பெருமான்; அம்மை - அங்கயற்கண்ணம்மையார்.

     இத்தலம் மதுரை என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே
கற்சாலைவழி 3/4 நாழிகையளவில் அடையத்தக்கது. 1வையையாற்றின்
தென்கரையில் உள்ளது.


     கற்பனை :- 1. சிறப்புடைய குடிகள் நிறைந்துள்ளது மாடங்களின்
சிறப்பு. அன்புடைய நல்லோர்களாற் போற்றப்படுவது நாட்டுக்குச்
சிறப்புத்தருவதாகும். (968)

     2. நன்னதிகள் பாய்தல் கடலில் முத்துவிளைதற்கு உதவி செய்வதாம்.
(969)

     3. உலகெலாமளக்கும் மேன்மையும் தெய்வத் தன்மையும் பொருந்தியது தமிழ் மொழியாகும். (970)

     4. மிக்க செய்யுள் அரங்கேறுதல் சங்கங்களுக்கு அழகு. (972)

     5. தமிழ்நூல் மெய்ப்பொருள் தருவது. அதனுள் விளங்கும் வாய்மை
செம்மைப் பொருளாம். அதனை இறைவர் தந்தருளினர். (974)

     6. உலகில் மனிதராற் பற்றப்படும் வேறு எவ்வகைப் பற்றுக்களும்
விடத்தக்கன. சிவனடிப் பற்றே விடாது பற்றத்தக்க உண்மைப் பற்றாகும்.
(975)

     7. உயிர்களுக்குச் சுற்றமும் துணையும் சிவபெருமான் றிருவடியல்லாது
வேறில்லை என்று தெளிந்து அதற்குத்தக ஒழுகுவது உயர்ந்தோர் தன்மை.
(976)

     8. சிவபெருமான் றிருமேனிக்கு மெய்ப்பூச்சாகிய சந்தனக்காப்புத்
தருதல் சிவனுக்குகந்த இனிய திருப்பணியும் சிறந்த சிவபுண்ணியமுமாகும்.
(977). சந்தனக் குழம்போடு பனிநீர், குங்குமப்பூ, கோரோசனை, கத்தூரி,
பச்சைக் கற்பூரம் என்பவற்றைக் கலந்து சாத்துதல் சிறந்தது. இது சிவனுக்குச்
சிறந்த உபசாரமாம் என்பது ஆகமநூற் றுணிபு.

     9. அற நூல்களில் விதித்தவாறன்றிப், படைவலிமை ஒன்றையே கருதிப்
பிற மன்னரின் நிலங்களை வலிந்து கவர்தல் நீதியன்று. செங்கோன் மன்னர்
இது செய்ய ஒருப்பட மாட்டார். (978)

     10. சிவனடிமைத் திறத்திற் பொருந்திய திருநீற்றுச்சார்புடைய சைவ
சமயத்திற்சாராது சமணம் முதலிய புல்லறிவிற் புறச்சமயத்திற் றாழ்வது
உயிர்க்குக் கேடு செய்வதாகும். சார்ந்து பிழைக்க நல்ல சிவசமய மிருக்கப்
பொல்லாப் புறச்சமயஞ் சார்வது பொய்யை மெய்யாக் கொள்வதாகும். அது
"விளக்கிருக்க


     1. குறிப்பு :- இடைக்காடர் பொருட்டு ஆலவாயுடையார்
வையையாற்றின் தென்கரையில்போய் வீற்றிருந்தார் என்று புராணங்கூறுகிறது.
அதனைக்காட்டும் கோயில் பழைய சொக்கநாதர் கோயில் என்று
வழங்கப்படுகின்றது. அது இப்போது நகரின் வடபகுதியில் வையைத்
தென்கரையில் உள்ளது. அதற்குத் தெற்கே பள்ளத்துத்தெரு என வழங்கும்
இடமும் முன்னர் வையையாறு ஓடிய இடமாகும் என்று கூறுகின்றனர்.