பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1355

 

     தில்லை போகும் விருப்பமும் ஒருப்பாடும் இருந்தும் தமது பிறப்பாகிய
குலத்தின் இழிவுகருதிப் போகத் துணியாராயும், பின்னரும் காதல் மிகவே
"நாளைப் போவேன்" என்று கருதியும் இவ்வாறு பலநாளும் கழித்த
காரணத்தால் இப்பெயர் போந்தது (1061). முதனூலிற்கண்ட இப்பெயராலேயே
புராணம் வழங்குகின்றது. இவரது இயற்பெயர் நந்தனார் என்பதாம். (1051).

     வகை :- பெரியோர்களாற் றுதிக்கப்பட்ட புகழினையுடைய
தில்லையம்பல வாணருடைய திருவருளைப் பெற்றுத், தில்லைக்கு
நாளைப்போவார் என்ற பெயர் பெறும், புறத்திருத் தொண்டராய்த் தமது
புன்மையுடைய புலைப்பிறவிபோய் நீங்கித் தில்லை மூவாயிரவரும்
கைகுவித்துத் தொழும்படி முனியாகியவருடைய பதி, மரங்கள் நெருங்கிய
பொழில்கள் சூழ்ந்த ஆதனூர் என்று இந்நிலவுலகத்து எடுத்துச் சொல்லுவர்.

     நாவார் புகழ் - ஆளுடையபிள்ளையார் முதலிய பெருமக்கள்
பலரும் தமது திருவாக்கினால் நிறைய எடுத்துச்சொல்லும் புகழ்.
இத்திருவந்தாதியருளிய நம்பியாண்டார் நம்பிகளுக்கு முன் போந்த சைவத்
தெய்வத் திருமுறைகள் பதினொன்றும் அருளிய எல்லாப் பெருமக்களும்
புகழ்ந்தவகை திருமுறைகளுட் காண்க. வேதங்களும் ஆகமங்களும்
புகழ்ந்தன. மக்கள் தம் நாவினாற் பேசத்தக்கன இப்புகழேயன்றி
வேறில்லை. இதனையே "பொருள்சேர் புகழ்" என்றது திருக்குறள்.
புகழ்த்தில்லை என்றும், புகழ் அம்பலத்தான் என்றும் கூட்டத்தக்கது.
நாளைப்போவான் அவன்ஆம் - தில்லைக்கு நாளைச் செல்வேன்
என்று பலநாள் கருதியதனாற் போந்த பெயர் என்பது குறிக்க அவன்
ஆம் என்றார். புறத்திருத் தொண்டன்- இதனால் அவரது மரபும்,
தொண்டராயின நிலையும், மரபுக்கேற்ப அவர்செய்த திருத்தொண்டின்
வரலாறும் குறிக்கப்பட்டன. இவை 1051-1059 திருப்பாட்டுக்களில்
விரிக்கப்படுவனவாம். புலைபோய் - முனியாய வரலாறு 1072-ல்
விரிக்கப்பட்டது. மாவார் பொழில்திகழ் ஆதனூர் - 1043,1044 பார்க்க.

     1041. (இ-ள்.) திகழ்ந்த....ஆதனூர் - விளக்கங்கொண்ட நீரினையுடைய
கொள்ளிடம் என்ற ஆறு, பொன்னையும் செழுமணிகளையும் அலைகளாகிய
கையினால் முகந்துதர இரு பக்கங்களிலும் உள்ள தாமரைகளின்
மலர்க்கையினாலே அவற்றை ஏற்றுக்கொள்கின்ற இடமகன்ற
வயல்களையுடைய நன்மை தருகின்ற நீர் நாட்டிலே மேற்கானாட்டின்
உள்ள ஆதனூர் என்பது; பகர்ந்து...பதியாகும் - உலகம் அதன் சிறப்பினை
எடுத்துச்சொல்லித் துதிக்கின்ற பழைமையாகிய வளத்தையுடைய வூர்.

     1041. (வி-ரை.) சீர்பகர்ந்து உலக போற்றும் என்க.
அத்திருப்பதியின் சீர் இந்நாயனாருக்கு முற்காலத்தில் போற்றப்படாமல்,
அவர் அருள்பெற்ற பின்னரே பேசப்படுவதனால் சீர் என்பதனை
முன்வைக்காது பின்வைத்தோதினார். சீர் - நந்தனார் அவதரித்து வாழ்ந்து
திருவருள் பெறநின்ற சிறப்பு.

     பழைய வளம்பதி - நந்தனார் அவதரித்ததன் பின், சீர்,
வந்ததேயாயினும் அதன் வளம் பழைமையுடைத்தென்பது. பழைய
வள
மாவது கொள்ளிடத் திருநதியின் நீர்வளத்தாலாவது என்பார் பொன் -
மணி - முளரி - பணை - நீர் - நன்னாடு என்றிவற்றால் விளக்கினார்.

     பதி ஆகும் - இதுவே உயிர்களுக்கு ஆகுவது; ஏனை வெறும் உலக
வளம்பதிகள் இத்தகையன ஆகா என்பதும் குறிப்பு.

     திகழ்ந்த புனல் கொள்ளிடம் - கொள்ளிடத் திருநதியானது
காவிரியினது மிக்க நீரினைக் கடலினுட் செல்ல விடுத்தற்கமைந்த வடிகால்
ஆறு, பெரிய அணையின்கீழ்