பக்கம் எண் :


1354 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
  18. திருநாளைப்போவார் நாயனார் புராணம்

தொகை

     "செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்"

                         - திருத்தொண்டத் தொகை

   

வகை

"நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே"

                      - திருத்தொண்டர் திருவந்தாதி (20)

விரி

1041. பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக
                            டிரைக்கரத்தான்
முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனூர்.   1

     புராணம் :- திருநாளைப்போவார் என்ற பெயருடைய நாயனாரின்
சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்தமுறையானே,
மும்மையாலுல காண்ட சருக்கத்து நான்காவது திருநாளைப்போவார்
நாயனாரது சரிதங் கூறத் தொடங்குகின்றார்.

     தொகை :- செம்மைபுரி சிந்தையராய்த், திருநாளைப்போவார் என்ற
பெயர்வாய்ந்த பெரியவர்க்கும் நான் ஆளாவேன். செம்மை இங்குச்
சிவனிடத்து ஓங்கி எழுந்த சித்தநிலையுடன் முன்னுணர்வினால், ஒழியாத
காதலுணர்ச்சியினைக் குறித்தது. "செம்மைபுரி சிந்தையராய்" (1052) என்றது
காண்க. 1051, 1060, 1061 பார்க்க.

     செம்மை - மனப்பண்பு; நேர்மை. அதனால் தமது குலதருமத்தின்
வழாது நின்றே திருப்பணியும் அதற்கேற்பச் செய்தனர். "வருபிறப்பின்
வழிவந்த அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டின் நெறிநின்றார்" (1052).
தில்லைக்குப் போவேன் என்று மனங்கொண்டவர் அன்று தமது குலத்தின்
இழிபு கருதிப் போக்கொழிந்தனர்; காதல் மிக்கு எழவே நாளைப் போவேன்"
என்பாராய்ப் பலநாள் கழிந்தன; நாள்கள் வீணே செல்லத் தரியாது, பிறவி
ஒழியுமாறு போகத் துணிந்தனர். இவ்வாறு போக நினைந்ததும், போக்கு
ஒழிந்ததும், பின்னர்த் துணிந்ததும் ஒவ்வோர் நிலையிற்கொண்ட மனச்
செம்மையினாலாகியன. தில்லை எல்லையிற் போயின பின்னரும்
உட்செல்லத் துணியாது ஊரெல்லைப்புறம் சுற்றிக் கவன்று நின்றதும்,
இறைவனாணையாற் றீயின் மூழ்கி மறை முனியாய் எழுந்ததும்செம்மை
நிலையாலுளவாயின; என்றிவ்வளவும் செம்மையே என்றதனால் அமைத்து
இச்சரித முழுமையும் காட்டநின்ற முதனூலின் மாண்பு மொழியின் மேம்பாடு
கருதுக. திருநாளைப்போவார் - நாயனாரின் பெயர்.