(2) இவ்வாறன்றி,
இத்தலம், திருச்சிராப்பள்ளிச் சில்லாவில், காவிரியின்
வட கரையில் உள்ள முசிறியினின்றும் வடக்கே
துறையூர்போகும்
கற்சாலையில் 8 நாழிகையளவில் உள்ள சம்புநாதபுரத்திற்குக் கிழக்கே
மட்சாலை வழி 3 நாழிகையில் உள்ளதாம் என்றதொரு வழக்குமுண்டு.1
முசிறியினின்று சம்புநாதபுரம் வரை மோட்டார் வசதியுண்டு. அவ்வழியில்
சம்புநாதபுரத்திலிருந்து தலையூருக்குப் பிரியும் கற்சாலையில் ஊருக்கு
வடக்கே 1/2 நாழிகையளவில் திருத்தலையூர்ச்சாலை என்று
விளம்பரப்
பலகை எழுதப்பட்டிருக்கிறது. திருச்சி - ஈரோடு கிளையில் குளித்தளை
நிலையத்தினிறங்கிக் காவிரியைப் பரிசினாற் கடந்தால் முசிறியை
அடையலாம். துறையூரிலிருந்து வருவதாயின், அங்கிருந்து முசிறிக்கு வரும்
கற்சாலை வழியில் துறையூரிலிருந்து 10 நாழிகையளவில்
திருத்தலையூர்ச்சாலை என்று விளம்பரப்பலகை
காணும் இடத்தில் இறங்கிக்
கிழக்கே மூன்று நாழிகை சென்றால் இத்தலையூரையடையலாம். முசிறிக்குச்
சேலம் திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களிலிருந்தும் மோட்டார் வசதியுண்டு.
பெரிய புராணத்தில் உள்ளபடியே இவ்வூருக்குத் திருத்தலையூர்
என்று பேர்
வழங்குவதும், கோயிலின் முன்பு உள்ள ஓமகுளத்தில் நாயனார் உருத்திரம்
ஓதினார் என்று வழங்குவதும், அதை ஒட்டிய இவ்வூர் தலபுராண வரலாறுமே
இது இந்நாயனாரது ஊர் என்பதற்குச் சான்றாவன. இங்கு நாயனாரது
திருவுருவம் 10 ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆதி சைவரால் செய்து
வைக்கப்பட்டுத் திருவிழாவும் கொண்டாடப்படுகின்றது. இராவணன் தலையை
அறுத்து இட்டு ஓமஞ் செய்ததனால் தலையூர் என்றும் ஓமகுளம் என்றும்
பெயர்கள் போந்தன என்பது தலபுராணம். பழைய கோயில் உண்டு. சுவாமி
- சப்தரிஷீசுவரர்; அம்பிகை குங்குமவல்லி. பக்கத்தில் ஐயாறு
என்ற ஆறு
உண்டு. சத்த இருடியர் பூசித்த தலமென்றும், ஐயாற்று மணலால் சிவலிங்கம்
அமைத்து இராவணன் பூசித்து யாகமும் செய்த இடமென்றும், புரூரவச்
சக்ரவர்த்தி ஆலயம் அமைத்தனர் என்றும் வழங்கப்படுகின்றது.
இலிங்கமும்
நந்தியும் மணலிறுகிய பாறையினாலாக்கப்பட்டன என்று
தெரிகிறது. ஆனால் இவ்வூர் மறையவரூராக இருந்ததாய்த் தெரியவில்லை.
துறை யூர்ச் சமீன்தாரின் மேற்பார்வையில் கோயில்காரியங்கள்
நடைபெறுகின்றன. தலபுராணம் தமிழில் உண்டு. அச்சாயிருக்கின்றது.
திருத்தலையூர் என்ற பேர் ஒற்றுமை கருதி
நாயனாரின் சரிதவழக்குக்கள்
தொடர்ந்து வழங்கப்படுவனவோ என்பது ஐயம்.
கற்பனை
:- (1) ஆற்றின்நீர், வெள்ள காலத்தில் வயல்களினுள்
தானே வந்து புகுவது வயல்களின் இயற்கைவளத்துக்கும் சிறப்புக்கும்
காரணமாம்.
(2)
குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடிகள் செறிந்து விளங்குவது
நகரச் சிறப்புக்களுள் ஒன்றாகும்.
(3)
திருவுருத்திரம் வேதங்களுட் சிறந்தது. அது மறைகளின் பயனாக
உள்ளது. உருத்திரத்தை விதிப்படி அன்போடு ஓதுதல் சிறப்புத் தருவதாம்.
(4) உருத்திரங்
கொண்டு அன்பு நிறைந்த ஒருமை மனத்தோடு
கழுத்தளவு நீரினுட்புக்குக் கைகூப்பிநின்று இடையறாது கணித்தல்
பெருந்தவமும் சிவ புண்ணியமுமாகும். இவ்வாறு ஓதுவோர் சிவனுலகிற்
சேர்ந்து சிவனடியருகில் வீற்றிருப்பர்.
(5) உருத்திரம்
சிவன் றிருநாமத்தை உள்ளே பொருந்த வைத்தது.
உருத்திரபசுபதி நாயனார் புராணம் முற்றும்.
1இவ்வரலாறுகளை அறிவித்தவர் எனது அரிய நண்பர் பண்டிதர்
திரு. அ. கந்தசாமிப் பிள்ளையவர்கள். இவ்விடத்துக்கு நேரிற்சென்று
தெரிந்து எழுதியுதவினவர் நண்பர் திரு. லா. கோ. சுந்தரராஜீ அவர்கள்.
இவ்விருவர்கட்கும் எனது நன்றி உரியது.
|