பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1357

 

கவிநயம் காண்க. "உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன
செய்யுள்" என்றதற்கு இஃது ஒப்பற்ற இலக்கியமாய் விளங்குவதென்க. 1

1042.



நீற்றலர்பே ரொளிநெருங்கு மப்பதியி னிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற் றகட்டுவரா லெழப்பகட்டேர்
ஆற்றலவன் கொழுக்கிழித்த சால்வழிபோ யசைந்தேறிச்
சேற்றலவன் கருவுயிர்க்க முருகுயிர்க்குஞ் செழுங்கமலம்.  2

     (இ-ள்.) வெளிப்படை. திருநீற்றின் பெரிய ஒளி நெருங்கி விளங்கும்
அந்தப் பதியில் நிறையும் கருப்பஞ் சாற்றில் அலையும், வலிய (குலை)
வரம்புகளையுடைய வயலில், தகடு போன்ற வரால் மீன்கள் எழும்படி
எருமைகள் பூட்டிய ஏர் செல்லும் வழியில், கலப்பையினது வலிய
கொழுவினாற் கிழிக்கப்பட்ட படைச்சாலின் வழியே, மெல்ல அசைந்து
மேலேறிச் சென்று, சேற்றில்வாழும் நண்டுகள் கரு ஈனச், செழுங்கமலங்கள்
முருகு உயிர்க்கும்.

     (வி-ரை.) நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் என்றதனால்
அப்பகுதியில் நீறு பூசும் அடியார் கூட்டம் நிறைந்துள்ளது என்பது கருத்து.
திருநீற்றுச் சார்பினால் உளதாகும் சிவஞானப் பேரொளியானது இனி
விளைந்து மிகுதற்குரிய நாயனார் அவதரிக்கத்தக்க இடமாதலும் குறிப்பு.

     நிறைகரும்பின் சாற்று அலை வன்குலை - நிறைந்த கரும்புச்
சாற்றினாலே அலைக்கப்பட்ட வரப்புக்கள் என்றது, அந்நாட்டின் கரும்பு
மிகுதியாதலின், அது அடப்படும்போது அதன் சாறு முதலியவை வயலினும்
வரப்பினும் சேறுபடுத்துதலினாலே வரம்புகள் அச்சாற்றில் அலைகின்றன
என்பதாம். குலை - வரம்பு: கரை. குலை - நெற்குலைகள் என்று கொண்டு,
நெல்லும் கரும்பும் வயல்களில் அடுத்தடுத்து மிக விளையும் செழித்த மருத
நிலமாதலின் நெற்குலைகள் கரும்புச் சாற்றில் அலையும் வயல்கள்
என்றுரைப்பாருமுண்டு." மலையா ரருவித் திரண்மா மணியுந்திக் குலையாரக்
கொணர்ந் தெற்றி" (நம்பிகள்தேவா - துறையூர்)

     தகட்டு வரால் - தகடுபோன்ற வடிவுடைய வரால் மீன். தகடுபோல
மெல்லிதாய் நீண்டுதுவளுதலின், வினையும் மெய்யும்பற்றிவந்த உவமமும்,
தன்மை நவிற்சியும் விரவி வந்தன.

     பகடு ஏர் ஆறு அலம் வன்கொழு கிழித்த சால் - பகடு - எருமை. எருமைகளை ஏரிற்பூட்டி உழுவதும் உழுவின் பிறதொழில்களைச்
செய்வதும்பற்றி முன் உரைத்தவை பார்க்க. "பகடு" (74) என்றவிடத்
துரைத்தவற்றை இங்கு நினைவு கூர்க. ஏர் ஆறு - ஏர் செல்லும் வழியே.
அலம் - கலப்பையின் அடியிற் றைக்கப்பட்டு அதன் நுனியாக உள்ள
இரும்பு முளை. சால் -படைச்சால். கலப்பை சென்ற பள்ளம்.

     அசைந்து...கருவுயிர்க்க - சேற்றினுள் தவழ்ந்த சினைநண்டு
கலப்பைக்குட்படாது தப்பி ஒதுங்கிப், பின் அந்தக் கலப்பை உழுத சால்
வழியே மெல்லச்சென்று, அவ்வாறே ஒதுங்கிப் பிழைத்த தாமரையில் ஏறி,
அதன் மலரில் கரு ஈன என்க.

     முருகு உயிர்க்கும் - பூந்தாதுக்களை உதிர்த்து வாசனை வீசும்,
நண்டு மலரில் ஏறி அதனுட் படிதலால் மலரின் கேசரங்கள் அசைந்து
தாதுக்களை உதிர்த்தன. அத்தோற்றம், கருவுயிர்த்த பெட்டை நண்டினை
ஈரம் புலர்த்தி அது கரு ஈனுதற்குரிய மருந்து தருவன போன்றிருந்தது
எனத் தற்குறிப்பேற்றம் படக், கருவுயிர்க்க முருகுயிர்க்கும் என்று
காரணப்பொருளில் வந்த வினையெச்சமாக உரைத்த குறிப்பும் காண்க.