இச்சரிதமுடைய
நாயனாராகிய நந்தனாரின் மரபினர் தரும்
கோரோசனை முதலியவை, மக்கள் மகவு ஈனுதலுக்குரிய மருந்துவகையாதல்
பற்றி, இச்சரிதம் பற்றிய குறிப்பும் காணத்தக்கது. "பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்" (திருஞான - புரா - 7) என்ற திருப்பாட்டில்
அச்சரித நாயகராகிய ஆளுடைய பிள்ளையாரது அந்தணர்மரபு பற்றிய
தோற்றத்தினை இயற்கைப்பொருள்களிற்கண்டுகாட்டியும், "கருங்கதலிப்
பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட" (திருநா - புரா - 6) என்ற
திருப்பாட்டில் அச்சரிதமுடைய அப்பர் சுவாமிகளது திருமரபின்
தோற்றத்தையும், அம்மரபுக்குரிய படைத்தலைமைக் குறிப்பினையும்,
அதுபற்றிய சரிதக் குறிப்பினையும் உள்ளுறையாக வைத்து நாட்டுவளம்
கண்டு காட்டியும், இன்னும் இவ்வாறு கூறும் ஆசிரியரது கவி மரபுங்
காண்க. அவ்வச்சரித மயமாகிய தெய்வக் கண்கொண்டு சரிதம்
சொல்லப்புகும் ஆசிரியர்க்கு, நாடும் நகரும் ஆறும் குளமும் வயலும்
மரமும் பிறவும் அவ்வச்சரித மயமாக விளங்கக் காணுதல் அருமையாமோ? 2
1043.
|
நனைமருவுஞ்
சினைபொதுளி நறுவிரைசூழ் செறிதளிரிற்
றினகரமண் டலம்வருடுஞ் செழுந்தருவின் குலம்பெருகிக்
கனமருவி யசைந்தலையக் களிவண்டு புடைசூழப்
புனன்மழையோ மதுமழையோ பொழிவொழியா பூஞ்சோலை.
3 |
(இ-ள்.)
வெளிப்படை. அரும்புகள் நிறைந்த கொம்புகள் செறிந்து
மிக்க வாசனை சூழும் செறிந்த தளிர்களினால் ஞாயிற்றின் மண்டலத்தைத்
தடவுகின்ற செழித்த மரங்களின் கூட்டம் பெருகி, மேகங்களும் பொருந்தி,
அசைந்து அலைதலால், தேன் வண்டுகள் பக்கங்களிற் சூழ, புனன்
மழையோ, அன்றித் தேன்மழையோ, ஒழியாமல் பெய்வன பூஞ்சோலைகள்.
(வி-ரை.)
நனை - அரும்புகள். பொதுளுதல்
- நெருங்குதல்.
பொதுளி
நறுவிரைசூழ் - பொதுளுதலால் நல்ல மணம் சூழும்.
காரணப் பொருளில் வந்த வினையெச்சம். சூழ் - தளிர்
என்க.
தளிரின்
தினகரமண்டலம் வருட - மேல் ஓங்கி வளர்ந்த
பூமரங்களின் உச்சியில் தழைத்த தளிர்கள் ஞாயிற்றின் மண்டலத்தை
அளாவ என்று மரங்களின் உயர்ச்சி தோன்றக் கூறிய உயர்வுநவிற்சியணி.
தினகரன் - ஞாயிறு - (சூரியன்), நாள் என்ற காலப் பகுதியைச் செய்பவன்
என்பது பொருள். தினம் - நாள்; கரன் - செய்பவன். (க்ரு- செய் - பகுதி).
உலகம் தன்னைச் சுற்றிச் சுழன்று சென்றும் உருண்டும் சூழ்வதனால்
உலகுக்குப் பகல் இரவு என்ற காலப் பாகுபாட்டை ஞாயிறு
உண்டாக்குகிறான் என்பது குறித்தது. மண்டலம்
ஞாயிற்றின் கதிர்களின்
சூழல் குறிப்பது. மண்டிலம்என்று
பாடங் கொண்டு வட்டவடிவம்
என்பாருமுண்டு. தளிரின் வருடும் என்று கூட்டுக. தளிர்களினால் ஞாயிற்று
மண்டலத்தைத் தடவுவன போன்றன என்பதாம். இள்
- கருவிப் பொருளில்
வந்த ஐந்தனுருபு.
வருடும்
செழும் தரு - வருடும்படி உயர்ந்த செழிப்புடைய மரங்கள்,
குலம் - கூட்டம். கனம்- மேகம். மருவி அசைந்து அலைய -
மேகங்கள்
சஞ்சரிக்க அவற்றாலும் காற்றினாலும் அசைவுகள் உண்டாதலின், அசைந்து
அலையஎன்று இரண்டு இயக்கங்கள் கூறினார்.
கனம்-
தளிர்ச்சினைகளில் மருவி அசைப்பன; வண்டு-
புடைசூழ
அச்சினைகளில் உள்ள பூ நனைகளில் புடைசூழ்ந்து முரன்றும் மொய்த்தும்
அவற்றை அலர்த்துவன. கனமருவி அசைந் தலைதலால் புனன் மழைத்துளி
வீழ்வன;
|