பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1395

 

     இவ்வாறிருக்கும் நாளில் ஒருநாள் திருத்தில்லை திருமன்று 
கண்டு சேவிக்க வேண்டுமென்ற ஆசையுடைய உணர்ச்சி ஒழியாது
அவர்க்குண்டாயிற்று. அதனால் கண்துயில் வரவில்லை. "அங்குப்போவது
எனது உறுகுலத்துடன் இசையவில்லை; இதுவும் எம்பெருமானது ஏவல்தானே!"
என்று அங்குப்போதலைத் தவிர்த்தனர். ஆனால் அந்த ஆசை அமைந்து
அடங்காமையினால் "நாளைப்போவேன்" என்பார். இவ்வாறு பல நாள்கள்
கழிந்ததனை உணர்ந்து தரியாமல் பூளைப்பூப்போன்ற நிலையாமையுடைய
பிறவி ஒழியும்படி போகத்துணிந்தனராகிப் புறப்பட்டுத் திருத்தில்லை மருங்கு
அணைந்தார்.

     தில்லைத் திருவெல்லையைப் பணிந்தெழுந்தார். வேள்விச்
சாலைகளையும் வேதம் ஓதும் மடங்களையும் கண்டு, தமது குலத்தின்
குறைபாடு கருதி அங்கு அணைய அஞ்சிநின்றனர். "இவற்றையும் கடந்து
ஊர்சூழ்ந்த மதிற் றிருவாயிலிற் புகுந்தால் மாளிகைதோறுங் கூடிய மூவாயிரம்
ஆகுதிகள் உள என்று சொல்லுகின்றார்களே! இப்படியாயிருக்க எனக்கு
அங்குச் சென்று சேர்தல் அரிதாகும்" என்று எண்ணங்கொண்டார்.
அடங்காதபெருங்காதல் வளர்ந்தோங்கிற்று. உள்ளம் உருகிற்று.
கைதொழுதார். திரு எல்லையை இரவுபகலாக வலம் வந்தார், அங்கு எய்தல்
அரிதாகிய நிலையை எண்ணி அயர்வெய்திச் "சிவபெருமானது திருமன்றின்
நடனம் எவ்வண்ணம் நான் கும்பிடுவது" என்று நினைந்தே
மன வருத்தத்தோடும் துயில்வாராயினார்.

     "துன்பந் தரும் இழிந்த இப்பிறவியே எனக்குத் தடையாயுள்ளது" என்று
எண்ணித் துயில்கின்ற அவரது கனவில் இறைவர் தோன்றி, "இப்பிறவி
போய்நீங்க நீ தீயின் மூழ்கி மறையவருடன் முன் அணைவாயாக!" என்று
புன்முறுவலுடன் அருள்புரிந்தார்; அவ்வாறே தில்லைவாழந்தணர்கள்
கனவிலும் தனித்தனி எழுந்தருளி வந்து தீயமைத்துக் கொடுக்குமாறு
அருளினார். அவர்கள் எழுந்து அச்சத்துடன் திருவாயில்முன்கூடி "பெருமான்
ஆணையிட்டருளிய பணி செய்வோம்" என்று துணிந்து அன்பரிடம் வந்து
அறிவித்தார்கள். அவர் தொழுது "நான் உய்ந்தேன்" என்று மொழிந்தனர்.
மறையவர்களும் சென்று தீயமைத்தபடி அறிவித்தனர். தென்றிசை
மதிற்புறத்துத் திருவாயில் முன்பு அவ்வாறு தீயமைத்த குழியினை நந்தனார்
நண்ணி இறைவர்தாளே மனங்கொண்டு எரியினை வலம் வந்தார்.
கைதொழுதார். அருட்கூத்தாடும் திருவடியினை நினைந்து அழலினுட்
புகுந்தார். அப்பொழுது தீயினிடம் இம்மாயப் பொய்யுருவினை ஒழித்துப்
பூணூலும், சடைமுடியுமுடைய புண்ணிய முனிவராய்த் தீயினின்றும்
எழுந்தனர். எழும்போது பிரமதேவனைப்போல் விளங்கினார். தேவதுந்துபிகள்
முழங்கின. வானவர் மலர்மழை பெய்தனர். மறையவர் கைகூப்பினர்.
தொண்டர்கள் பணிந்தனர். மறையவர்கள் உடன்வரத் திருமன்றி
னடனங்கும்பிடத் திருநாளைப்போவார் வருகின்றாராய்க் கோபுரத்தைத்
தொழுது விரைந்து போய் உலகுய்ய நடமாடும் எல்லையினைத்
தலைப்பட்டார். பின் அவரை யாருங் காணவில்லை. எல்லாரும் அதிசயித்துத்
துதித்தார்கள். அவர்க்குத் தமது திருவடிகளைத் தொழுதிருக்கும்
இன்பநிலையினை இறைவர் அருளினார்.


     தலவிசேடம் :- 1. ஆதனூர் - திருப்புன்கூருக்கு வடமேற்கில்
கொள்ளிடத்தைக் கடந்தால் 6 நாழிகையளவில் உள்ளது. மட்பாதை.
இப்போது ஆதமங்கலம் என வழங்குகின்றது. பூர்வம் சிவாலயம் இருந்தது.
பழைய புலைச்சேரி முதலிய அடையாளங்கள் காணப்படவில்லை. 40 வேலி
தனிவட்டமாகத் திருநாளைப் போவார் காணி என்று வழங்கும்
நிலப்பகுதியுண்டு. கானாட்டம் யுலியூருக்கு