19.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
|
தொகை
"திருக்குறிப்புத்
தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்"
- திருத்தொண்டத் தொகை
வகை
"மண்டும் புனற்சடை
யான்றமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு "மழைமுகில் வீடர் தொழியின்யான் வீவனென்னா
மிண்டும் படர்பாறை முட்டு மெழிலார்
திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா லியர்தங்க
டொல்குலமே" |
- திருத்தொண்டர் திருவந்தாதி (21)
விரி
1078. |
ஏயு
மாறுபல் லுயிர்களுக் கெல்லையிற் கருணைத்
தாய னாடனி யாயின தலைவரைத் தழுவ
வாயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு. |
1 |
புராணம்
:- திருக்குறிப்புத்தொண்டர் என்னும் பெயருடைய நாயனாரது
சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்தமுறையானே
மும்மையாலுலகாண்ட சருக்கத்து ஐந்தாவது திருக்குறிப்புத்தொண்டநாயனாரது
சரிதங்கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- திருக்குறிப்புத்தொண்ட நாயனாருடைய அடியவர்களுக்கு
நான் அடியேனாவேன். இந்நாயனாரது பெயரும் சரிதக்குறிப்பும் பண்பும்
முதனூல் பேசிற்று. சிவனடியார்களுடைய குறிப்பினையறிந்து அவர்
கருத்தின்படி அவருக்குத் தொண்டுபூண்டு ஒழுகியதனால் இவருக்கு
இப்பெயராயிற்றென்பது விரிநூல் 1189-ல் "புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத், திண்மையினாற் றிருக்குறிப்புத் தொண்டரெனும்
சிறப்பினார்" எனக் கூறப்பட்டது. இக்காரணங் கொண்டே இறைவர் இவர்பால்
அழுக்கடைந்த கந்தை தாங்கிவர, அவரது குறிப்பறிந்து கந்தையினைக்
கழுவுவதற்கு வேண்டிப் பெற்றனர் என்பதும், அது காரணமாக இவர் சரிதம்
விளைந்து திருவருள் வெளிப்பட்டது என்பதும் அறியப்படும். "குறிப்பறிந்தே"
(1195) என்றது காண்க. இவ்வாற்றால் சரிதக்குறிப்பும் கண்டுகொள்க.
வகை :- செறிந்த கங்கைப்புனலையுடைய சடையாரின்
அடியாரது
ஆடைகளின் அழுக்கைப் போக்கி உலரவைத்தற்கு "இடையூறாக வந்து
சூழ்ந்த மழைமுகில் நிற்காதொழிந்தால் நான் இறப்பேன்" என்று துணிந்து
வலிய கற்பாறையில் தமது தலையை முட்டிய அழகிய திருக்குறிப்புத்
தொண்டரது திருகுலமானது கசசிமாநகரிலே ஏகாலியர்களது பழய குலமாகும்.
சடையான்றமர்
- தமர்போலக் கோலந்தாங்கி வந்த சடையான் என்க.
விரிநூல் (1193) பார்க்க. மண்டுதல்
- செறிந்து நிறைதல் என்று கொள்க.
தமர் - தம்மவர். உகந்தவர். தூசு
- துணி. எற்றுதல் - தோய்த்து அழுக்குப்
போக்குதல். வாட்டுதல் - ஈரம்புலர உலர்த்துதல்.
முகில் வீடாதொழியின்
- முகில் மழை பெய்தலை நிறுத்தாதொழிந்தால்; யான்
வீவன் - விரிநூல்
(1201 - 1202) பாட்டுக்களில் இது விரிக்கப்பட்டது.
பாறை முட்டுதல் -
கந்தைபுடைத் திடவெற்றுங் கற்பாறை மிசைத் தந்தலையினைச் சிந்தும்படி
மோதுதல். எழில் - திருத்தொணடின் உறைப்பு
எழில் எனப்பட்டது; இதுவே
உயிர்க்குறுதி செய்தலால். "சிங்காரமான திருவடி" (திருமந்திரம்) என்றதுபோல.
தொண்டர்குலம் ஏகாலியர் தொல்குலம் என்க. பெயர்ப்பயனிலை கொண்டது.
நாயனாரது ஊரும், பெயரும், மரபும், சரிதவரலாறும், பண்பும், பிறவும்
வகைநூல் வகுத்துக் காட்டிற்று. இவை விரிந்தபடி விரிநூலுட் காண்க.
1078. (இ-ள்.) வெளிப்படை. பொருந்தும்படி
பல உயிர்களுக்கும்
எல்லையில்லாத கருணைத் தாய்போன்ற உமாதேவியார் தனியாகிய தமது
தலைவரைத் தழுவதற்காக, ஆராய்கின்ற நான்கு வேதங்களும் போற்ற
ஆகமவழியில் நின்று, தன்னிடத்தே அரிய தவம்புரியும்படியான தூய
பெருந்தவத்தைச் செய்துள்ளது தொண்டை நன்னாடு.
1078. (வி-ரை.)
பல்லுயிர்களுக்கும் ஏயுமாறு என்க. எல்லா
வுயிர்களுக்கும் அவ்வவற்றின், கன்மத்திற்கேற்றபடி பொருந்த.
எல்லையில்லாத கருணையேயாயினும் உயிர்தோறும் வெவ்வேறு வகைபடச்
செலுத்தப்படுதற்குக் காரணங் கூறியபடியாம். கருணைத் தாயனாள்
-
உலகில தாய்மார், மகவுக்கு நோய் மூலமாகிய உடம்பைக்கொடுத்து ஊட்டி
வளர்த்து மீண்டும் பல உடற் சுமைகளை எடுக்க வழிசெய்கின்றார்கள்.
இத்தாய், நோய் நீங்கும்படி உடலைக் கொடுத்துக், கர்மங்களை ஊட்டிப்
போக்கி, மீண்டும் உடற்சுமைவந்து பொருந்தாதபடி செய்கின்றாராதலின்
இவ்வாறு சிறப்பித்தார்.
|