நந்தனாரைத் தடுத்தாரும்,
பக்கத்தே வந்து தீண்டி ஊன் அமுதூட்டும்படி
கண்ணப்பநாயனாரை விடுத்தாரும் ஒருவருமிலர் என்பது போன்ற சரித
விளைவுகள் சிந்திக்கற்பாலன. அன்றியும் பூணூல் இன்றியும் கண்ணப்பரையும்
திருக்குறிப்புத் தொண்டரையும் கையாற் பற்றித் தம்மிடத்தில்வைத்த இறைவர்,
இவரை மெய்திகழ் வெண்ணூலும் வேணிமுடியும் கொண்ட மறைமுனிவராக்கி
அருகுவரவழைத்தது என்னையோ? எனின், மறைமுனிவரானாலன்றோ அருகு
செல்ல இயலும் என்று எண்ணிப் பயந்து கொண்டொழுகிய நந்தனாரின்
மனநிலையும் ஒழுக்கமுமே இதற்குக் காரணமாம் என்க. அவர்
நினைந்தபடியே அவரை நூலணிந்த மார்பினராகிய மறைமுனிவராக்கித்
தம்மிடம் வர அருளினர் என்பதாம்.
ஐயர்
என்பது பெருமையுடையார் என்ற பொருளில் வரும்
வழக்கேயன்றிச் சாதிப்பெயர்பற்றி வருதல் முன்னாள் வழக்கன்று என்பதும்
ஈண்டு உணர்தற்பாலது. பெருமைகாரணமாயன்றி இடுகுறியளவில்
சாதிப்பெயராய் வழங்குதல் பிற்கால வழக்காம். ஆளுடையபிள்ளையார்
தமது திருவாக்கினாலே திருநீலகண்ட யாழ்ப்பாணரை "ஐயர்நீர்
உளமகிழ
விங்கணைந்த வுறுதியுடையோம்" "ஐயர்நீர்
அவதரித்திட இப்பதி அளவின்
மாதவம் முன்பு செய்தவாறு", "ஐயர்நீர் யாழிதனை
முறிக்குமதென்"
(திருஞான - புரா - 133, 179, 451) என்பனவும் பிறவும் இங்கு நினைவுகூர்க.
("ஐ வியப்பாகும்" - தொல்காப்பியம். ஐயர்
- வியத்தற்குரியார் என்பதுமாம்).
இச்சரிதத்தினுள் ஞானசாத்திர முடிவுகளுக்கு ஒவ்வாத புதிய
ஆராய்ச்சிகளைப் புகுத்தி இடர்ப்பட்டு அபசாரப்படாதிருத்தல்
அமைவுடைத்தாகும்.
|