பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1397

 

      குறிப்பு :- இச்சரிதத்தினுள் புதிய ஆராய்ச்சி முறையிற் புகுந்து
பலவாறு இடர்ப்படுவாரும் இடர்ப்படுத்துவாரும் பலராயினர். சாதி குலம்
மரபு முதலிய கொள்கைகள் பற்றியும் வழக்கம் பற்றியும் இந்நாளிற் பற்பல
எண்ணங்களும் இயக்கங்களும் தோன்றிப் பூசல் விளைக்கின்றன. அவற்றை
இச்சரிதத்தினுட்புகுத்தி இடர்ப்படுதல் வேண்டா. மக்கட் கூட்டத்தினுள்,
பிறப்பினாலும் சிறப்பினாலும் உயர்வும் தாழ்வும், காலத்திற்கும் இடத்திற்கும்
ஏற்றவாறு எந்நாளும் உண்டு என்பதனை மறுக்க இயலாது. இது இறைவன்
நூல்களாலும் வகுக்கப்பட்டது. மக்கள் அனுபவத்தினும் அறிந்தது. எந்த
வகையாலேனும் கன்மபக்குவ பேதங் காரணமாக மக்களும் பிற உயிர்களும்
பலதிறப்பட்ட வேற்றுமையுடையவர்களே யாவர். இவை சாதி ஆயு, போகம்
என்றவற்றுள் அடங்குபவையாய், அவ்வவ்வுயிரின் கன்மத்துக்கீடாய்,
இறைவன் கூட்டுவிக்க வருவன என்பது ஞான சாத்திரங்கண்ட வுண்மை.
"மேற்பிறந்தார்" "கீழ்ப்பிறந்தார் "இழிந்தபிறப் பிறப்பாய் விடும்" "பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்" முதலியவையும், "தவஞ்செய்த, நற்சார்பில்
வந்துதித்து" (சிவஞானபோதம் - 8 - சூத்); "கன்மநெறி திரிவிதநற் சாதி
யாயுப் போகக் கடனதெனவரும்" (சிவப்பிரகாசம் - பொது) முதலியவையும்
காண்க. "நரர்பயில் தேயந்தன்னி னான்மறை பயிலா நாட்டில், விரவுத
லொழிந்து தோன்றன் மிக்கபுண் ணியத்தானாகும், தரையினிற் கீழை விட்டுத்
தவஞ்செய்சா தியினில் வந்து" (சித் - உ - 90) முதலியவை காண்க.

     ஆனால் இச்சாதி எவ்வளவுவரையில் நிற்றல்வேண்டும் என்பதும்
வகுக்கப்பட்டுள்ளது. தனக்கெனவோர் செயலற்றுத் தான்சிவமாய் நிற்கும்
நிலைவரும் அளவும் அறநூல்களில் விதித்தவாற்றால் ஒழுகவேண்டியதே
முறை. தன்னுணர்வு உறங்கினவன்கைப் பொருள்போல் தானே கழன்றுவிழும்
நிலை வரும்போது வீழ்ந்தொழியும். கண்ணப்பநாயனாருக்குத் தன்னுணர்வு
காளத்திநாதரைக் கண்டதும் ஒழிந்துபோயிற்று. அவர் பின்னர்ச் சாதிநிலை
ஒழுக்கம் கடந்த நிலையினராயினர். இங்கு நந்தனாருக்குத் தன்னுணர்வு
நினைவிலிருந்தது. அதனை ஒழித்தல் அவ்வுடம்பினை ஒழித்தோம் என்ற
நினைவு நிலை வந்தபின்னரே கூடும்; ஆதலின் இறைவர் அவர்க்கு
அந்நிலையினைக் கூட்டுவிக்க எரியின் மூழ்கி எழுந்து வருமாறு அருள்
புரிந்தனர் என்க.

     சாதி குலம் முதலியவற்றை எந்த நிலையில் உணர்ந்து வைத்து
ஒழுகல்வேண்டுமோ அவ்வளவில் நிறுத்தல் வேண்டும். அவை
அபிமானத்துக்கு இடமாகி இறுமாப்பினையும் அகங்காரத்தினையும்
வளர்க்கும் கருவிகளாகும்படி பீடித்தல் கூடாதென்பதனையே "சாதிகுலம்
பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும், ஆதமிலி நாயேனை" என்ற
திருவாசகம் (கண்டபத்து) வலியுறுத்திற்று. பற்பலவாம் புதியமுறை
ஆராய்ச்சியின் பயனாக இச்சரிதத்தில், இப்பிறவி நீங்க எரியில் மூழ்குமாறு
இறைவன் பணித்ததாகக் கூறும் பகுதிகள் சேக்கிழார் சுவாமிகள் வாக்கல்ல
என்றும் அவை பிற்கால இடைச்செருகல்கள் என்றும் ஒதுக்கித் தம்
கொள்கைக்கு இடம் காண முயல்வாரும், பல குலத்தவர்களும்
நாயன்மார்களாய்த் திகழ்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளாலே
துதிக்கப்பட்டதனால் மக்களுள் சாதிவேற்றுமையில்லையென்று முடிப்பாரும்,
"சாதித்திமிர் பிடித்து ஒருவரையும் அண்டவிடாமல் புறத்தே நிறுத்திவிடும்
கன்னெஞ்சுடையார்" என்று தாங்கொண்ட தில்லைவாழந்தணர்களுக்கு
உண்மையன்பின் நிலைகாட்ட இறைவர் இவ்வாறு நந்தனாரைத் தீயின்
மூழ்குமாறு பணித்தனர் என்று வகுப்பாரும் எனப் புதிய ஆராய்ச்சியாளர்
பலதிறப்படுவர். ஆதனூரில் தில்லைநினைவு வந்த கால முதல் தங்குல
நினைந்து, தில்லையினுட் செல்வது தமக்குக் கூடாதென்றஞ்சி நின்றவர்
நந்தனாரேயாவர் என்பதுணர்தற்பாலது. இறைவன் பக்கத்தே அணுகவிடாது.