கூறிய அளவு சிறியதேயாகும்
என்பதனையும் நாம் மறக்கலாகாது. அன்றியும்
அன்பர் திருவேடமும் பூசையுமே முடிந்த பொருள்களாகக் காட்டி விளக்கும்
இம்மாபெருங் காவியத்தினுள், சிறந்த அரன்பூசையினை ஆகமவிதிப்பிடி
உலகை ஆளுடையாள் செய்து காட்டும் இடம் இதுவேயாதலின் அதனை
விரித்துக் கூறுதலும் இன்றியமையாததாயிற்று அதனை எடுத்துக் காட்டுதற்கு,
யாண்டும் நாட்டுச் சிறப்பும் வளமும் என்று சொல்லத்தக்கவை யாவும் சிவன்
சம்பந்தத்தோடு கூடிய வழியே சிறப்புடையன - அல்லுழி அல்ல -
என்பதனையும் எடுத்துக்காட்டவேண்டிய அவசியம்பற்றி நானிலப் பகுதிகளை
அச்சிறந்த பொருள்பற்றிக் காட்டவேண்டுவதும் இன்றியமையாததாயிற்று.
நானிலப் பகுதிகளைக் கூறும் வகையில் சிறந்த காவிய நிலைபற்றித் தமிழ்
இலக்கண முறையிற் பகுத்துக் காட்டுவதும் வேண்டப்பட்டது. மேலும்
நானிலப்பகுதிகளும் நிலக் கலப்புக்களும் நிறையப்பெற்று விளங்குவது
இத்திருநாடேயாகும். இம்மாபுராணத்துள் பேசப்படும் ஏனைநாடுகள்
அவ்வகையில் ஒவ்வோர் குறைபாடுடையன. ஆதலின் இச்சரிதத்தின்
திருநாடே தமிழிலக்கிய வரம்பிற்கு எடுத்துக்காட்டாதற் றகுதியுடையதாம்.
இவை முதலிய காரணங்களால், நாட்டுப்பற்று (தேசாபிமானம்) என்று வெறும்
நிலம்பற்றிய தொடர்பினால் ஆசிரியர் இத்துணையும் கூற அமைந்தனரல்லர்
என்பதனை உய்த்துணர்ந்துகொள்க. அன்றியும் இதனால் நாடும் நகரமும்
மக்களும் எவ்வாறிருத்தல் வேண்டும் - எவ்வகையால்
மதிக்கப்படுதல்வேண்டும் - என்று எடுத்துக்காட்டிய திறமும் சிந்திக்க.
இதனுள்
ஆகமத்திறனெல்லாம் தெரிய எடுத்துக்கூறிச் சிவபூசையில்
முயற்சியெழுவிக்கும் இப்பகுதியை, (ஐஞ்சீருடைய) கலிநிலைத்துறையாலும்.
அதன்மேல் எண்குணனாகிய அட்டமூர்த்தியினைப் பூசைசெய்தடையும்
பகுதியை எண்சீர் விருத்தத்தாலும், சரியையாதி நாற்பாத நெறியில் நின்று
பிறவிமாசுபோக்கும் சரிதத்தை நாற்சீர் விருத்தமாகிய கொச்சகக்
கலிப்பாவினாலும் யாத்த திறமும் கண்டுகொள்க. 1
1079. |
நன்மை
நீடிய நடுநிலை யொழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை யோங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையி னிகழ்வது பெருந்தொண்டை நாடு. |
2 |
(இ-ள்.)
வெளிப்படை. நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்தில்
விருப்பமுடைய தன்மை வாய்ந்த தலைமையுடைய பெருங்குடிகள்
தழைத்தோங்க வலிய பெரிய மதில்களையுடைய வளநகரங்கள் பலவும்
தன்னுள்ளே நிலவப்பெற்றதாய், எல்லையில்லாத பழமையாகிய
மேம்பாடுகளுடன் நிகழ்வது பெருந்தொண்டை நாடாகும்.
(வி-ரை.)
நடுநிலை ஒழுக்கம் - தமர்பிறர் என்னாமலும், நன்றுதீது
என்னாமலும், அறநெறியினிற் பிறழாமலும் துலைக்கோல் போல ஒழுகுதல்.
"மாற்றார்க்கமரி லழிந்துள்ளோர் வந்து தம்பான் மாநிதியம், ஆற்றும் பரிசு
பேசினா லதனை நடுவு நிலைவைத்துக், கூற்ற மொதுங்கு மாள்வினையாற்
கூலி யேற்று" (3) என்ற முனையடுவார் புராணங் காண்க.
தலைமைசால்
பெருங்குடி - ஒழுக்கத்திற் சிறந்த சால்புடைமையால்
தலைமை பெற்ற குடிகள். இத்தன்மையாவது வாய்மையும், பிறர்க்கு
எஞ்ஞான்றும் நினைப்பினாலும் தீமை செய்யாமையுமாம்.
|