பக்கம் எண் :


திருக்குறிப்புத்தொண்டநாயனார்புராணம்1403

 

அப்பழியும் அவளைக் கொல்வதற்குச் சமயம் பார்த்துப் பின் தொடர்ந்து
கொண்டே வந்தது. அவன் ஒருநாள் பழயனூருக்கு வந்தான். நீலியும் ஒரு
பெண் வடிவம் பூண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றை முரித்து, அதனைக் குழந்தை
வடிவமாக்கி இடையில் ஏந்திக்கொண்டு வணிகனைப் பின் தொடர்ந்து
வந்தது. வணிகன் அவ்வூரில் வேளாளர் பெருமக்கள் எழுபதுபேர் இருந்த
சபையின் முன்வந்து தன்னை நீலி கொல்ல வருகின்றமையால் காக்க
வேண்டுமென்று அடைக்கலம் புகுந்தான். நீலியும் அச்சபையின்முன் வந்து
"இவன் என் நாயகன்; இது எங்கள் குழவி; இவன் பரத்தை வயப்பட்டு
எங்களை வெறுத்துக் கைவிட்டு ஓடிவந்துவிட்டான்"; எங்களை ஒன்றுபடுத்தி
வாழவைக்க வேண்டும்" என்று ஓலமிட்டது. வணிகன் மறுத்து "இது
பெண்ணல்ல; நீலியென்ற பேய்" என்று சொல்ல, நீலி அக்கள்ளிக்
குழந்தையைக் கீழேவிட, அது வணிகனிடம் அப்பாவென்று சென்று சேர்ந்தது.
இதன் உண்மை புலப்படவாராமையின், "நாளைத் தீர்ப்போம். இன்றிரவு
நீங்கள் ஒன்றுகூடி இங்கேயிருங்கள்" என்று சபையினர் கூறினர். வணிகன்
கையில் வாளிருந்தபடியால் அதனால் அவன் தன்னை வெட்டி
விடுவானாதலின் அதனைக் கழிப்பிக்க வேண்டுமென்றது நீலிப்பேய்.
வணிகனோ இந்த வாள் இல்லையேல் நீலிப்பேய் தன்னைக் கிழித்துக்
கொன்றுவிடும் என்றான். இவ்விருவர்களுக்குமிடையில் குழந்தையின்
செய்கையால் ஏமாந்த வேளாளர்கள் வாளினை நீக்கிவிட்டு அவளுடன்
தங்கும்படி வணிகனை ஏவினதோடு அதனால் அவனுயிர்க்குக்
கேடுவருமாயின் தங்கள் எழுபது பேர்களின் உயிரையும் அதற்கு
ஈடாகத்
தருவதாக வாக்குறுதியும் செய்தனர். அன்றிரவு நீலி வணிகனைக்
கிழித்துக் கொன்று பழிதீர்த்துப் போய்விட்டது. இதனையறிந்த வேளாளர்கள்
தாங்கள் வணிகனுக்குச் சொல்லிய சொல்லே தமது உயிரினும் சிறந்தது
எனக்கொண்டு தீ வளர்த்து அதில் எழுபது பேரும் மூழ்கித் திருவாலங்காட்டு
அப்பரது திருஅடியில் அடைந்தனர்.

     மிகப்பழைய உண்மைச்சரித்திரமாகிய இதனை ஆளுடைய பிள்ளையார்
திருவாலங்காட்டுத் தேவாரத்துள் "முனநட்பாய், வஞ்சப் படுத்தொருத்தி
வாணாள் கொள்ளும் வகைகேட், டஞ்சும் பழையனூர்" என்று எடுத்துக்
கூறியருளினர். இச்சிறப்பினை "எஞ்சலிலா வகைமுறையே பழய னுரா
ரியம்புமொழி காத்த கதை சிறப்பித்தேத்தி" (திருஞான - புரா - 1010) என்று
ஆசிரியர் காட்டியதுங்காண்க. ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளது புராணங்
கூறவந்தபோது அவரது மரபுச் சிறப்பு உரைக்கும் வகையால்
இச்சரிதத்தினையே "மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால்
வணிகனுயி ரிறப்பத் தாங்கள், கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக்
குழியிலெழு பதுபேரும் முழுகிக் கங்கை, ஆறணிசெஞ் சடைத்திருவா
லங்காட் டப்பரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப், பேறுபெறும்
வேளாளர் பெருமையெம்மாற் பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ?"
(திருத்தொண்டர் புராண வரலாறு - 15) என்று விரித்து உமாபதி
சிவாசாரியார் வாயார வாழ்த்தியது காண்க. வேளாளர் தீக்குளித்த குழி
இப்போது (நீலிகுளம் என வழங்கும்) ஒருகுளமாக உள்ளது. அதன் கரையில்
அந்த வேளாளர் எழுபதின்மர் திருவுருவமும் நீலியின் உருவமும்
ஒருகோயிலில் உள்ளன. கோயிலும் குளமும் கிலமாயுள்ளன. பழையனூர்த்
திருவாலங்காட்டப்பரின் சீர்பாதந் தாங்கும் சிறந்த தொண்டர்களாய்
அவ்வேளான மரபினர் இன்றைக்கும் விளங்குவதும், அவ்வாய்மைச் சிறப்பின்
மணம் இன்றளவும் வீசும் சிறப்பும் இத்திருநாட்டுக்குரியமையாவது
காணப்பெறும். 3