பக்கம் எண் :


திருக்குறிப்புத்தொண்டநாயனார்புராணம்1405

 

வரிசைகள் தந்து மணஞ் செய்வித்து வழி அனுப்பினர். ஆதலின்
சேரநாட்டினர் மைத்துனர் முறைமை கொண்டாடினர். "கொத்தலர் கோதை
வியன்சேர மண்டலக் கொம்பைத் தம்பால், வைத்திருந் தாங்கவ டன்கேளிர்
நேடி வரவவர்க்கே, யுய்த்திருவோர்க்கும் வரிசையு மாற்றி யுடனுஞ்சென்று,
மைத்துனக்கேண்மை படைத்ததன்றோ தொண்டை மண்டலமே" என்பது
தொண்டைமண்டல சதகம்.

     கரிகாற் சோழனுடைய மகனுக்கும், மகன் மகனுக்கும் சேரர்குலப்
பெண்களை மணம்செய்து கொண்டதனால் அந்த முறைபற்றிச் சேரநாட்டு
வீரர்கள் கரிகாற் சோழனது நாட்டு வீரர்களை எதிர்த்துப் போர் புரியாமல்,
அவர்களுக்குச் சார்பாய் நின்று, வேற்றரசர்களை வென்று கொடுத்து
மைத்துனக்கேண்மை கொண்டாடினர் என்றதொரு வரலாறும் உண்டு.
கரிகாற் சோழன்
- காடெறிந்து காஞ்சிபுரநகரங்கண்ட அரசன். 1162
பார்க்க. 4

11082. கறைவி ளங்கிய கண்டர்பாற் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை யறம்புரிந் ததனால் பிறையு
ரிஞ்செயிற் பதிபயில் "பெருந்தொண்டை நாடு
முறைமை யா" மென வுலகினின் மிகுமொழி யுடைத்தால்.
5

     (இ-ள்.) கருமை விளங்கும் கழுத்தினையுடைய சிவபெருமானிடம்
அன்பு செய்கின்ற முறைமையின் நிறைவினை விரும்ப உமையம்மையார்
அறம் புரிந்ததனால், பிறைதடவு மளவும் உயர்ந்த திருமதிலையுடைய
தலமானது பயில்கின்ற பெரிய தொண்டை நாடானது சிவநெறியின் நியதியை
யுடையது என்று உலகத்தார் போற்றும் சிறப்பினை யுடையதாகும்.

     (வி-ரை.) கறை - விடத்தினாலாகிய கருமை. கறை விளங்கிய
கண்டர்
- திருநீலகண்டர். கறை விளங்கிய - தாழ்ந்து மறைந்து
இருக்கத்தக்க கருமையுடையவிடம் சிவபெருமான் றிருமிடற்றில்
தங்கப்பெற்றதனால் விளக்கம் பெற்றது என்ற குறிப்புமாம். "நஞ்சுடைமை
தானறிந்து நாகங் கரந்துறையும்" என்றது நீதிமொழி.

     காதல் செய்ம்முறைமை நிறை புரிந்திட - அன்புசெய்கின்ற
முறையாவது சிவபூசை செய்தல். நிறை - நிறைவு; புரிதல் - விரும்புதல்.
அம்மையார் சிவபிரானிடம் ஆகமத் திறங்களைக் கேட்டுத் தாம்
சிவபூசைசெய்து அன்பு செய்வதனை விரும்பிய வரலாறு 1128 - 1131-ல்
பார்க்க. "ஈசர்கழல் முறைபுரிந்த முன்னுணர்வு" (திருஞா - புரா - 61)
என்றது காண்க.

     நேரிழை - நேரிய - அழகிய - இழைகளாலாகிய அணிகளை
அணிந்தனர்.

     அறம்புரிந்ததனால் - அறங்களைச் செய்த வரலாறு 1146 - 1148 -
1149 பாசுரங்களிற் காண்க.

     எயிற்பதி - காஞ்சிபுரம். சாதியொருமையாகக்கொண்டு அநேக
நகரங்கள் என்பாருமுளர். "வளம்பதி பயின்றது" (1079) எனப் பிற பதிகளை
முன்னர்க் கூறியது காண்க. பதி பயில் நாடு என்க. பயிலுதல் -
விளங்குதல்.

     முறைமையாம் - நீதியுடைத்தாகும். மிகுமொழி - தேற்றம்பெற
அறிவோர் பலரும் எடுத்துரைக்கும் சொல்.