நானிலப் பொது
வியல்பு
1083. |
தாவில்
செம்மணி யருவியா றிழிவன சாரல்;
பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம்;
வாவி நீள்கயல் வரம்பிற வுகைப்பன மருதம்;
நீவி நித்திலம் பரத்திய ருணக்குவ நெய்தல். |
6 |
(இ-ள்.)
தாவில் ...... சாரல் - சாரல் என்ற குறிஞ்சியிடங்கள்
குற்றமற்ற செம்மணிகள் அருவியினும் ஆற்றினும் இழிந்துவருதற் கிடமாயின;
புறவம் - என்ற முல்லையிடங்கள்; பூவில்
... புறவம் - பூக்களில்
வண்டினங்கள் புதிய தேனினை அருந்துவதற் கிடமாயின; வாவி ... மருதம்
- மருதம் தடங்களில் நீண்ட கயல்மீன்கள் வரம்புகள் உடையும்படி
துள்ளுதற்கிடமாயின; நீவி ... நெய்தல் -
நெய்தல் பரத்தியர் முத்துக்களைக்
கழுவி உலர்த்துதற்கிடமாயின.
(வி-ரை.)
முதல் ஐந்து பாட்டுக்களால் தொண்டைநாட்டின் இயல்பினை
அதன் பழைய சரித மேன்மைகளைக் குறித்துச் சிறப்பித்துக் கூறினார். இனி
அதன் ஐந்திணை நானிலப் பகுதிகளைப் பிரித்துப் பொதுவகையால்
இதுமுதல் 5 பாட்டுக்களால் (1083 - 1087) கூறுகின்றார். அதன்பின் அந்த
ஐந்திணைகளையும் பிரித்துத் தனித்தனி சிறப்புவகையாற் கூறுவாராகி 1088
முதல் 1091 வரை நான்கு பாட்டுக்களால் குறிஞ்சித் திணையினையும், 1092ல்
பாலைத் திணையினையும், 1093 முதல் 1096 வரை நான்கு
திருப்பாட்டுக்களால் முல்லைத் திணையினையும், 1097 முதல் 1109 வரை 13
பாசுரங்களால் மருதத்திணையினையும், 1110 முதல் 1117 வரை 8
செய்யுட்களால் நெய்தற் றிணையினையும் கூறுகின்றார்.
அதன்
பின்னர் இத்திணைகள் ஒன்றோடொன்று விரவும்
திணைமயக்கம் கூறுவாராய் நெய்தலும் குறிஞ்சியும் கூடியதனை 1118ல்,
மருதமுங் குறிஞ்சியுங் கூடியதனை 1119லும், முல்லையும் குறிஞ்சியும்
கூடியதனை 1120லும் உரைப்பார். நெய்தலும் முல்லையும் மயங்கியதனை
1121லும், மருதமும் முல்லையுங் கூடியதனை 1122லும் சொல்லுவார்.
நெய்தலும் மருதமும் கூடியதனை 1123-ல் பகர்வார். இவ்வாறு
திணைமயக்கப் பகுதி அறுவகைப்படும் என்க.
அதன்மேல் 1124ல்
இந்நானிலப் பகுதியினும் அமைந்த
குடிச்சிறப்பினைப் பொதுவகையாற்கூறி, மேலே, தொண்டை நாட்டின்
தலைநகரும், இப்புராணமுடைய நாயனாரது நகரமும் ஆகிய காஞ்சிபுரத்தின்
சிறப்பினைக் கூறத்தொடங்கித் திருநாட்டுச் சிறப்புக் கூறியவாறே
முற்பகுதியில் பழஞ்சரிதத் தொடர்பு பற்றிய சிறப்பும், பிற்பகுதியில் நகரின்
அமைப்பும் வளமும் கூறுவார்.
சாரலில் ஆறு இழிவன; புறவத்தில் நறவு அருந்துவ; மருதத்தில்
உகைப்பன; நெய்தலில் உணக்குவ என்று கூட்டி உரைப்பினும் அமையும்.
தாவில்
செம்மணி - தாவில் - மணிகள் பலவற்றிலும் காணப்படும்
குற்றங்களில்லாத. செம்மணி - மாணிக்கம்
என்க.
அருவி
ஆறு - அருவியினும் ஆற்றினும். ஏழனுருபும்
எண்ணும்மையும் தொக்கன. அருவி அளவிற் சிறியதும், ஆறு பெரியதுமாம்.
அருவியின் ஆறு - (வழி) என்றுரைத்தலுமாம்.
இழிதல்
- நீரினுடன் கீழே வருதல். சாரல் - மலைச்சரிவு.
குறிஞ்சி
நிலப்பெயர். நறவு - தேன். பூவில் புதுநறவு
வண்டினம் அருந்துவ என்க.
புதுநறவு - புதிதாக மலர்ந்த பூக்களின் தேன். புறவம்
- முல்லைப் புறவம்.
முல்லை நிலப்பெயர்.
வரம்பு
இற உகைத்தலாவது - கிளம்பி எழுந்து முட்டுதலால்
வரம்புகள் இடிபடுதல் - அழிதல். நீவுதல்
- கழுவுதல். துடைத்தல்
என்பாருமுண்டு.
பரத்தியர்
- நெய்தனிலப் பெண்கள். இழிவன முதலியன
இடங்களின்
நிகழ் பொருள்களின் றொழில் இடங்களின் மேலாயின.
|