பக்கம் எண் :


1538 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     இறைவர் - திருவேகம்பர். அம்மை - காமாட்சியம்மையார் -
ஏலவார்குழலி. விநாயகர் - விகடசக்கர விநாயகர். முருகர் - மாவடிக்
குமரநாயகர். மரம் - மா. தீர்த்தம் - சிவகங்கை - கம்பை முதலியன.
பதிகம் 12.

     இது காஞ்சிபுரம் நிலயத்திலிருந்து மேற்கே கற்சாலை வழி 1
நாழிகையளவில் அடையத்தக்கது.


     கற்பனை :- 1. உலகத்தாயாகிய உமையம்மையார் உலகம் வாழத்
தன்னிடம் இருந்து தவஞ்செய்தருளப் பெறுவதும், நடுநிலை
நல்லொழுக்கமுடைய தலைமை சால் பழங்குடிகள் தழைப்ப உள்ளதும்,
வாய்மையைத் தம் உயிரினும் சிறந்த பொருளாகக்கொண்டு காத்த
முன்னோர்களைக் கொண்டிருப்பதும், ஆகிய பெருமைகள் ஒரு நாட்டுக்கு
அமைவது அரிய பெருஞ்சிறப்பாகும். அத்தகைய தனிச்சிறப்புடையது
தொண்டை நன்னாடு. (1078,1079-1080)

     2. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுதிகளும்
ஐந்திணை யொழுக்கமும் தன்னகத்துத் தத்தம் இயல்பின் விளங்கக்.
கொண்டுள்ளமை ஒரு நாட்டிற்கு நிறைவுடைய பெருஞ் சிறப்புத் தருவதாகும்.
அத்தகைய சிறப்புத் தொண்டை நாட்டுக்குரியது. (1083-1086)

     3. மலையே,காடே, வயலே, கடலே என்ற முற்கூறிய நானிலப் பகுதிகள்
ஒவ்வொன்றும் சிவதலங்களைப் பெற்றுச், சிவநெறியில் மக்களை ஒழுகத்
துணை செய்து, சிவவழிபாட்டிற் செலுத்தி வாழ்விக்கும் இயல்பில் விளங்குவது
தொண்டைத் திருநாட்டின் பெருஞ் சிறப்பாகும். (1087-1124)

     4. சிவ வழிபாட்டுக்குரிய சாதனமாக உதவாதபோது வெறும், நீர்வளம்
நிலவளம், முதலியவை பயனிலவாம்

     5. தண்ணீர் வேண்டும்போது மள்ளர்கள் மணற்றிடர்களைப்பிசைந்து
கை வருட நீர் சுரந்து வேண்டுமளவும் ஓடி, வயல்மடை உடையப்பாய்ந்து
விளைவு தரும் பாலாறு, பால் வேண்டும் பிள்ளை தடவி வாய்வைத்தபோது
சுரந்து ஊட்டும் தாய்முலை போன்றது. இப்பெருமை எப்போதும்
பெருக்கெடுத்து ஓடும் பெரு நதிகளுக்கும் கிடையாத தொன்றாகும். (1099)

     6. விருந்து எதிர்கொள்ளும் சிறப்புடன் இல்லறம் புரக்கும்
பெருங்குடிகள் வாழும் மாடங்கள் நெருங்குவது நகரத்துச் சிறப்பாகும். (1105)

     7. புத்திரப்பேறு வேண்டினார்க்கு அது கிடையாமற் புத்திரிப்பேறு
வாய்க்குமாயின், அதுவே புத்திரப்பேறுபோல நல்வினைப் பயன் தருவதாக
என்று வேண்டிப்பெறும் பெரியோரும் உண்டு. (1107)

     8. உணவும், வாழ்க்கையின் நலன்களும் அவ்வநிலத்து வாழ்வோர்
அவ்வநிலத்துப் பொருள்களினின்றே ஆக்கிக்கொள்ளுதல் இயற்கை
வாழ்க்கையாகும். (1086)

     9. பெருநிலப் பகுதிகளாகிய குறிஞ்சியாதி நான்குமேயன்றி அவற்றின்
புணர்ப்பு நிலம் ஆறும், தன்னகத்துப் பொருந்தப் பெற்றுள்ளது
பெருநாட்டினியல்பு.(1118-1123)

     10. இவ்வாறாகிய வெவ்வேறு வகை நிலங்களினும் வாழும் வெவ்வேறு
பல்குடிகளும் தத்தமக்கடுத்த மேய செய்தொழில் செய்து வாழ்வது தொண்டை
நாட்டின் பெருஞ் சிறப்புகளுள் ஒன்றாகும். (1124)

     11. தீயவை என்பன கனவிலும் நினைவிலாத மனத்தையுடைய
தூயமாந்தர்கள்
வாழ்வது தொண்டை நன்னாட்டிற்குரிய பெரிய சிறப்பாகும்.
(1124)

     12. மகவின் நோய் தீர்தற் பொருட்டுத் தாய் மருந்துண்ணுதல்போல
உலகுயிர்கள்யாவையும் சிவனை அறிந்து பூசித்து உய்யும்பொருட்டு
உலகத்தாயாகிய உமையம்மையார் ஆகமங்களை எல்லாம் இறைவரிடத்துக்
கேட்டருளி, அவற்றில் விதித்தபடி தவம் செய்து, சிவலிங்கத் திருமேனி
கண்டு, ஆகமவிதி வழியே சிவ