பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1613

 

அறிந்திலேன்; இதன்முன் நிகழ்ந்ததனை நீங்கள் பொறுத்தல் வேண்டும்.
"இனிப்புகுதிற் குற்றம் எனதேயாம்" என்று குறையிரந்து விடைபெற்றுச்
சென்று, பழியொன்று வந்ததே எனக் கவன்று, அதனை மகனாரிடம்
சொல்லாதவனாய், "இந்த நிலைமையினை நானே நேரில் அறிவேன்"
என்றுட்கொண்டு, அவ்விரவு கழிந்த பிற்றைநாள் விசாரசருமனார் ஆனிரை
மேய்க்கப் போயினபின் அவர் பின்பு மறைந்து சென்றனன். மகனார்
ஆனிரைகளை மண்ணி மணற்குறையில் மேய்ப்பதற்குச் சேர்த்துக் கொண்டு
போனதை அறிந்து அருகே நின்றதொரு குராமரத்தின்மேல் ஏறி
நிகழ்வதனை அறிவதற்காக அவன் ஒளித்திருந்தான். அன்பு புரிகின்ற
பிரமசாரிகளும் நீரின் முழுகிச், சிவனாருக்கு முன்போல மணற்கோயில்
செய்து, திருப்பள்ளித்தாமங் கொய்து, ஆன் முலைப்பாற் குடங்களையும்
உரிய இடத்தில் கொண்டு வந்து தாபித்து, வேண்டுவனவாகிய பிறவற்றையும்
அமைத்துக்கொண்டனர். விதியின் நின்ற விளையாட்டினால் தமது அரிய
பூசனையைத் தொடாங்கி ஒன்றுபட்ட மனத்தோடு ஆளுடைய நாதனார்
திருமுடியின் மேல் மலர்சாத்திப் பாற்குடங்களையும் எடுத்து அன்புடன்
திருமஞ்சனம் ஆட்டினார். அதனைக் கண்டவுடன் மேன்மையுடைய
விசாரசருமனாரது பெருமையை வெளிப்படுத்துவதற்குச் சிவபெருமான்
மேற்கொண்ட திருவருளே என்று சொல்லும்படி குராமரத்தின்மேலிருந்த
மறையோன் கோபம் மிகுந்தனன். உடனே இறங்கிவந்து விரைந்துசென்று
கையிலிருந்த கோலினால் மகனாரது திருமுதுகிற் புடைத்துக்
கொடியமொழிகளையும் சொன்னான். தொண்டு புரிகின்ற அத்தோன்றலார்
செறிந்த ஆசையினைப் பூசையில் வைத்தாராதலின் வேறொன்றனையும்
அறிந்திலர். அவன் பலகாலுமடிக்கவும் அவர் வேறொன்றினையும்
அறியாராகிப் பாலினாற் றிருமஞ்சனம் ஆட்டுகின்ற திருப்பணியிற்
சலியாதவராய் நிற்கவே, கையாற் கடமைத் தலைநின்ற அவன் திருமஞ்சனப்
பாற்குடத்தைக் காலினால் இடறிச் சிந்தினான். சிந்தினஉடனே ஓரிறையில்
அத்தீயோனைத் தந்தையெனவே அறிந்து, அவனது கால்கள் திருமஞ்சனப்
பாற்குடத்தைச் சிந்தும் தகுதியினால் அவற்றைத் தண்டிப்பதற்காக அவர்
முன்னேகிடந்த கோலை எடுத்தனர். அதுவே முறைமையினால் அவர்கையில்
வந்ததும் மழுவாக மாறிற்று. சிவபூசையில் நேர்ந்த இடையூற்றினைப்போக்கும்
சிவன்படைக்கலமாக அதனையே கொண்டு தாதையின் இரண்டு தாள்களையும்
அவர் துணித்தனர். மறையோனும் மண்மேல் விழுந்தனன். இவ்வாறு பூசையில்
வந்த இடையூற்றினைப் போக்கி முன்போல் அருச்சித்திடப் புகுந்தனர்.

     சிவபெருமான் உமாதேவியாருடன் விடையின்மேல் ஏறிப்,
பூதகணங்களும் வேர்களும் முனிவர்களும் புடைசூழ, எழுந்தருளி முன்னே
வந்து காட்சி கொடுத்தனர். அவரது பாதங்களில் பத்திமுதிர்ந்த பாலகனார்
விழுந்தனர். அவரை எடுத்து, நோக்கி, "உன்னை ஈன்ற தாதையை
எம்பொருட்டாக வெட்டினை! இனி நாமே உனக்கு அடுத்த தாதை" என்று
அருளி, அணைத்து, உச்சிமோந்து, மகிழ்ந்து கொண்டருளினர்.
சிவபெருமானது திருமலர்க்கையினால் தீண்டப்பெற்ற சிறுவனார் அங்கண்
மாயையாக்கையின்மேல் சிவமயமாகப் பொங்கிய திருவருளின் மூழ்கிச்
சிவவொளியிலே விளங்கித் தோன்றினார். அவரை இறைவனார் தமது
தொண்டர்க்கெல்லாம் தலைவராக ஆக்கி, "நாம் உண்ட பரிகலமும்
உடுப்பவையும் சூடுபவையும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசன் என்னும்
பதவியைத் தந்தோம்" என்று அருளிச்செய்து, அதற்கடையாளமாக
அவருடைய திருமுடிக்குத் தமது சடைமுடியிற் சூடிய கொன்றை மாலையை
எடுத்துச் சூட்டியருளினர். அவரும் தேவர்கள் மலர்மாரி பொழிய, வேதங்கள்
துதிசெய்ய, உலகமெல்லாம் ஆரவாரிக்கக் கணநாதர்கள் களிப்படைந்து
பாடியாட, தேவதுந்துபிகள் முழங்கச், சைவநன்னெறி ஓங்கச்,
சிவபெருமானைக் கும்பிட்டுக்கொண்டு, தமது பதவியில் அணைந்தனர்.