|
28. இறைவனாரிடத்து
அன்புவைத்துத் தம்மையே ஒப்புவித்த அடியார்
செய்தனவே தவமாவன.
29. சிவபெருமான்
வெளிப்பட்டருளப்பெற்றுத் திருக்கரத்தினாற்
றீண்டப் பெறும் பேறுடையார்களது மாயை யாக்கையே சிவமயமான
யாக்கையாக மாறிச் சிவவொளியில் விளங்கும்.
30. ஒரு சிவனடியார்
ஒரு குலத்தில் விளங்குவாராகில், அவரால்
அக்குலத்தவரும் திருந்தப்பெற்றுச் சிவனருள் பெறுவர்.
31. மனிதப்பிறவி
உயிர்களுக்குத் தரப்படுவது சிவனை விதிப்படி
பூசித்து முத்தி பெறுதற்கேயாம். மனிதப்பிறவி கிடைத்தற்கரியது. இம்மனித
உடல் உள்ளபொழுதே சிவனை வழிபட்டுப் பூசித்து வீடு பெற முயலுதல்
எல்லாருக்கும் கடமையாகும். அறிவுடையோர் இவ்வாறு முயல்வர். இதனை
அறியாமல் வீணே காலம் கழித்தலின் மிக்க அறியாமையில்லை. "ஊனெடுத்
துழலு மூம ரொன்றையுமுணரா ரந்தோ!", "இறப்பொடு பிறப்பி னுக்கே
யினியராய்", "பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்
றாரே", "அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரு மவையெல்லா மூரல்ல
வடவி காடே" என்பன வாதி திருவாக்குக்கள் அவர்களை நோக்கி
எழுந்தன.
32. சிவபெருமானே
நம்மை ஆளுடைய முழுமுதற்கடவுள் என்று
உணர்ந்து அவர்பால் அன்பு கரைகடந்து பெருக, அந்த அன்பினாலே
இன்பம் பெருக, யாதொரு பயனுங் கருதாது தம்மை மறந்த நிலையில்
நின்று, சிவாகமங்களில் விதித்தபடி சிவபூசை செய்தல் முறை. சிவபூசையின்
முடிவில் விதிப்படி சண்டேசுர பூசையும் செய்யப்படுதல் வேண்டும்.
சிவபெருமான் உண்ட அமுதும் மாலை ஆடை முதலியனவும் சண்டீசுரர்
ஏற்றுச் சிவபூசையின் பயனை அளிப்பார். சண்டீசுவர பூசை
யெய்யப்படாவிடிற் சிவபூசைப் பயனை மக்கள் அடையார் என்பது துணிபு.
33. லிங்க
என்பது சித்திரித்தல் எனப் பொருள்படும். படைத்தல்
முதலிய தொழில்களால் உலகத்தைச் சித்திரிப்பதனால் சிவனது அந்தப்
பெருமையே சிவலிங்கம் எனப்படும். கல், மண், படிகம், உலோகம்
முதலியவற்றால் ஆக்கப்பட்டுச் சிவனது அந்தப் பெருமை வெளிப்படுதற்கு
ஆதாரமாயுள்ள சிவக்குறிகளும் உபசாரத்தால் சிவலிங்கம் என வழங்கப்படும்.
படைத்தல் முதலிய ஐம்பெருந்தொழில்களை அதிட்டித்து நிற்கும் சத்தியே
சிவனுக்கு வித்தியாதேகம் எனப்படும். மூலமலம் இல்லாமையால் சிவனுக்கு
வைந்தவ முதலிய உடம்பு இல்லை; சத்தியே சரீரமாகும். ஐந்தொழிலுக்கும்
உரிய ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களாலே தலைமுதலியனவாக அந்தத்
திருவுடம்பு கற்பிக்கப்படும். "ஒருநாமமோருருவ மொன்று மில்லா" தவராகிய
சிவன், உயிர்கள் தம்மைக்கண்டு வழிபட்டுய்யவேண்டுமென்ற கருணைப்
பெருக்கினாலே சத்திகாரியமாகக் கற்பிக்கப்பட்ட அந்தத் திருவுடம்பினுள்
விளங்கி வீற்றிருப்பர். அவரது அந்தப் பெருங்கருணையை அறிந்து
வழிபட்டுய்வது அறிவுடைய மக்களின் கடமையாகும்.
சண்டேசுர
நாயனார் புராணம் முற்றும்
|