|
அவற்றை நீருட்டலும்
வேண்டும். ஆற்றின் கரைப்பக்கமும், படுகரின்
பக்கங்களும், சோலைகளை அடுத்த கரைகளைச்சார்ந்த இடங்களும்
பசுக்களை மேய்ப்பதற்கு உரிய இடங்களாம். பயிரிட்ட நிலங்களிலும்
தூய்மையில்லாத இடங்களிலும் இடர்கள் உள்ள இடங்களிலும் பசுக்களை
மேய்த்தலாகாது.
18. நல்ல புல்லும்
நீரும் வயிறுநிறைய உண்ணுமாறு கிடைக்கச்
செய்து அன்போடு காக்கப்பட்டால் ஆனிரைகள் மனமகிழ்ச்சி யடைந்து
முன்னையினும் அனேக மடங்கு பால் சுரப்பனவாகும்.
19. கன்றினிடத்து
அன்புமிகும்போது பசுக்கள் கறவாமலே மடி
பெருகிப் பால் சொரிவன. அதுவேயுமன்றித் தம்மிடம் மிக்க அன்பு கொண்டு
காக்கும் அவரைக்கண்டபோதும் அவை தாயாம் தன்மை கொண்டு உருகிக்
கனைத்து முலை சுரந்து கறவாமே பால் சொரிதலு முண்டு. இதனால் அவை
வழக்கமாய்த்தரும் பாலின் அளவு குறைவு படாது நிகழும்.
20. பசு பாலினைச்சொரியக்கண்டால்
பலருக்கும் பலவாறு தோன்ற,
அது இறைவனாரது திருமஞ்சனமாதற்குரியது என்ற குறிப்பு மனத்துள்
தோன்றிப் பூசை செய்யும் விருப்பு எழப்பெறுவது ஒருவற்கு
முன்னைப்பிறவியின் வாசனையால் உண்டாவதாம்.
21. முன்னைத்
தவத்தின் தொடர்ச்சி யுணர்வுடையார்க்கு ஆற்றின்
கரையில் மரத்தினடியில் மணலாற் சிவலிங்கமும் சிவாலயமும் வகுத்து
ஒருமையான் மெய்யன்போடு இறைவனார் உவந்துகொள்ளும்படி பூசை
செய்தலும் ஆகும்; புறவில் தாமாகப் பூத்த ஆத்தி முதலாகிய மலர் இலை
முதலியவைகளையும், அங்குத் தேடிக்கொள்வனவாகிய பிற
சாதனங்களையுமே அவர் தமது அரிய பூசைக்குப் பயன்படுத்திக்
கொள்வதும், தேடாதனவற்றை அன்பினால் நிரப்பிக்கொள்வதும் இயல்பு.
22. இவ்வாறு
ஒருமை நினைவால் குறித்துச் செய்யும் பூசையினுள்ளே
நிறைந்து இறைவனார் மகிழ்ச்சி கொள்வார்; பூசிக்கும் அவர்களும்
அந்நெறியில் பூசித்து வணங்கி மகிழ்வர்.
23. சிறுவர்
செய்யும் பிழைகளுக்குப் பெற்றோரைப் பொறுப்பாகக்
கொள்வது உலகநிலை யியல்பு.
24. உலக நிலையில்
தகாதெனப்படும் ஒரு நிகழ்ச்சியைக் கண்டவுடனே
அதன் உண்மையை ஆராய்ந்தறியும் விதியின்றிச் சினம் மூளுதல்
சிற்றுணர்வுடையோர் செயல். அறிவழியப் பெற்றோர்களே கோபத்தால்
மீதூரப்படுவோர்.
25. சிவபூசையில்
ஒருமை மனம் வைத்து நிகழ்வோர் தம்மை
வேறொருவன் புடைத்தாலும் கொடுமொழி கூறினாலும் அறியமாட்டார்கள்.
அவர்களுடைய ஐம்பொறிகளும் தாம் மனம் வைத்த பூசையிலே செல்வன
அன்றிப் புறவிடயங்களை அறியமாட்டா. இதற்குக் காரணம் அவர்களது
மனம் அவற்றினுட் கலந்து புறவிடயங்களை நுகரவாராமையேயாகும்.
ஆனால் அவர்கள் மனம் வைத்த பூசைக்கு இடையூறு வந்த போது மனம்
அந்தப் பொறிகளின் வழியே சென்று அந்த இடையூற்றை அறிந்து விலக்கி
முன்போலப் பூசை செய்ய வல்லராதலும் அவரியல்பு.
26. தந்தை
தாய் தாரம் மகவு என்ற உலகப்பற்றுக்களை அறவே
துணித்து இறைவர்பால்ஒன்றித்த மனம்வைத்தபோது இறைவனார்
வெளிப்பட்டு அருளுவர்.
27. அடியார்கள்
கையால் திருவருளின் வழியே தண்டிக்கப்பட்ட
போது சிவாபராதமும் நீங்கப்பெற்றுச் சிவலோகமும் கிடைப்பது இயல்பாகும்.
|