பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1615

 

விண்ணுக்குப்பயன் மழைபொழிதல்; வேதப்பயன் சைவம்; இவ்வாறு
மண்ணுலகுபெற்ற பயனாய்விளங்கும் ஒருபதிஉளதாயின் அது
திருச்சேய்ஞலூராகும்.

     7. விசாரசருமனாரைப்பெற்ற நல்வினையும், அவர்செய்த மன ஒருமையானிகழ்ந்த சிவபூசையைச் சிதறிய சிவாபராதமும், என்ற இரண்டற்கும்
ஒருங்கே இடமாய் நின்ற எச்சதத்தனைப்போல நல்வினை தீவினைகளாகிய
இருமை வினைக்கும் ஒருருவாகும் மக்களும் உளர்.

     8. இவ்வாழ்க்கையில் மனைவியாரது பெருங்கடமை
சுற்றந்தழுவுவதாகும். துணைப் புதல்வரைப்பெற்று விளங்குதல் மனையின்
மாட்சி என்ப. இல்வாழ்வினின்றே உலகப் பற்றை எறியும் இறைவன்பற்று
வரச் சார்பாய் உள்ளது மனைத்தக்காளது மாண்பாகும்.

     9. ஐந்துவயதளவில் ஒருவற்கு உணர்வு தொடங்கும்; அவ்வாறு
தொடங்கும் உணர்வானது முன்சென்ம வாசனையோடு முகைத்தமலரின்
மணம் வெளிப்படுவது போல வெளிப்பட்டுச் சிந்தைமலர உடன் மலர்ந்து 
கொண்டேவரும். முன்னைப்பிறவியிற் பெற்று முதிர்ந்தநல்லுணர்வு
இப்பிறவியிற் றொடர்ந்துவரும். அவ்வாறே முன்பிறவியிற் சேர்த்த தீயுணர்வும்
இங்குவந்து முற்றுவதும் விதியாம்.

     10. ஏழுவயதளவில் உபநயனம் செய்வித்தலும் வேதம்முதலாகிய
கலைகள் பயில்வித்தலும் மறையவர் சிறுவர்க்குச் செய்யத்தக்க சடங்குகள்.

     11. ஆசிரியர்கள் சொல்வதற்குமுன் சிலமாணவர்கள் கலைஞானங்களை
அறிந்துணர்ந்து கொள்வது முன்பிறப்பின் முதிர்ந்த
வாசனையுணர்வினாலாகும்.

     12. இவ்வாறு முன்பிறப்பின் வாசனையறிவுடன் வந்தபெரியோர்
எல்லாக் கலைகளுக்கும் எல்லையாயுள்ளது கூத்தப்பெருமானது
திருவடியேயாம் என்று விரைவிற் றெளிந்து அவ்வழித்தாய்வரும் அன்பின்
பெருக்கினால் சிவபூசை செய்யும் கடமையே தமது இயல்பாக அதில் ஆசை
மிகப்பெற்று அந்நெறியில் ஒழுகுவர்.

     13. பசுக்களைப்புடைத்தல், அச்சுறுத்துதல், முதலியவை செய்வது
பெரும் பாவங்களாம். இவ்வாறு யாரேனும் செய்யக்கண்டால் இரங்கி
வெகுண்டு மேற்சென்று விலக்கி அவர்களுக்கு நல்லறிவு கொளுத்துதல்
வேண்டும்.

     14. பசுக்களின் பெருமைகளை வேதங்களும் ஆகமங்களும் முதலிய
எல்லாம் ஒன்றுபோலவே எடுத்துக்கூறுவன.

     15. உலகப்படைப்பில் காணும் எல்லா யோனிபேதங்களுள்ளும்
பசுக்கள் சிறந்தன; புனிததீர்த்தங்கள் எல்லாம் என்றும் அவற்றினிடத்திற்
பொருந்துவன; தேவர்கள் முனிவர்கள் முதலியோர் அவற்றின்
அங்கங்களிற்சூழ்ந்து பிரியாது இருப்பர்; சிவன் விரும்பியாடும்
திருமஞ்சனமாகிய ஆனைந்தினையும் அளிக்கும் உரிமையுடையன இப்பசுக்
கூட்டங்கள்; சிவபெருமான் அணியும் திருநீற்றைத் தரும் மூலமாகிய
கோமயம் இப்பசுக்களிடமிருந்து வருகின்றது; மேலும் இவை இறைவனார்
உமையம்மையாருடன் ஒருசேர மேல்கொண்டு எழுந்தருளி வரும்
ஊர்தியாகிய விடைத்தேவர் குலத்தைச் சேர்ந்தவை - இவை முதலிய
காரணங்களால் பசுக்கள் மிகவும் பெருமையும் தூய்மையும் உடையன.

     16. பசுக்கூட்டங்களை இதமாக மேய்த்துக் காத்தல் கடமையாகும்.
அதுவே சிவனைவழிபடும் நெறியுமாகும்.

     17. பசுக்களை அன்போடு கொண்டு சென்று மிகவும் புல்உள்ள
இடங்களில் மேய்த்தல்வேண்டும். நல்லபுல்லை வயிறு நிறைய மேயச்
செய்தலும், மேய்க்கமுடியாதபோது கையாற் பறித்து அளித்தலும், நல்ல
தூயதண்ணீர் இருக்கும் துறைகளில்