பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1619

 

     கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, நீரினால் முலையைக்
கழுவிக் கறத்தல் வேண்டும். பேராசையினாற் கன்றுக்குப் பால்விடாமற்
கறப்பவர்கள் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்திப் பின்பு பூமியிற்
பிறந்து கடும்பசியினாலே வருந்தி வீடுகள் தோறும் பிச்சையேற்பர்; பிச்சை
ஏற்பினும் கிடையாமல் வருந்துவர்.

     கபிலையின் பாலைச் சிவபெருமானுக்கே கொடுத்தல் வேண்டும்;
அவ்வாறு செய்யாது பருகினோர் நரகில் விழுவர்.

     புலையர்கள் பசுச்சாலையில் புகுதலாகாது. புகுந்தால் எண்ணிறந்த
காலம் எரிவாய் நரகில் வீழ்ந்து மீட்சியின்றி வருந்துவர்.

     பசுக்களைப் பகைவர் கவர்ந்தால் எதிர்த்துக் காத்தல் வேண்டும்.
காக்க இயலாத போது அதன் பொருட்டுத் தம் உயிர் விட்டவர்கள்
சிவபதமடைவார்கள்.

     பசுக்காத்தலின் முறையும் பெருமையும் ஆனாய நாயனார், சண்டேசுவர
நாயனார், திருமூலதேவ நாயனார் என்ற மூன்று நாயன்மார்களின்
சரிதங்களாலும் அறிவுறுத்தப்பட்டன. அதுவே அவற்றின் சிறப்பினைக்
காட்டுவதாம். வேதங்களும் ஆகமங்களும் இச்சிறப்பினைப் பேசும்.
சிவதருமோத்திரத்தினுள் இவை விரிவாகப் பேசப்பட்டுள்ளன. நித்திய
கன்மவிதிப்பத்ததிகளில் பசுவின் பூசையும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத்
ஆறுமுகநாவலர் அவர்கள் இப்புராண சூசனத்தில் எழுதியுள்ளவற்றைத்
தழுவி இஃது எழுதப்பட்டது.

     குறிப்பு :- பசுக்காத்தலின் பெருமையையும், காவாமொழிதலின்
தீமையினையும் பற்றி வேதாகமங்களும் மற்றும் நுல்களும் ஒன்று போலவே
தோத்திரிப்பன. அவற்றைப் பின்பற்றி ஒழுகி நிகழ்ந்துவந்தது நமது புண்ணிய
பூமியாகிய பரதகண்டமேயாம். ஆனால் இக்காலத்து அவ்வொழுக்கம்
மாறிவிட்டது. பசுக்களைக் காப்பதும் காவா தொழிவதும் நிற்க, அவற்றை
உண்டிப் பொருட்டாக வதைசெய்யா திருந்தாலே போதும் - அதுவே பெரும்
புண்ணியமாகும் என்று சொல்லும் காலமாக உள்ளது இக்காலக் கொடுமை!
அந்தோ! பசுவின் குருதி ஒருதுளி நிலத்தில் வீழ்வதாயின் அதினின்றும்
பலகோடி அசுரர்கள் வந்து உதித்து உலகை நாசம் செய்வர் என்றும்
நூல்கள் கூறுகின்றன. நாடோறும் மிருக மனித வயிற்றை நிரப்பும் பொருட்டு
வதைக்கப்படும் பசுக்களின் இரத்தம் ஆறாகப் பெருகுமாயின் இந்நாடு என்ன
அலங்கோலம்தான் படாது? இக்கொடிய பாவம் நமது புண்ணிய நாட்டில்
வரத் தலைப்பட்ட நாளே நமது நாட்டுக்கு அளவற்ற கேடுகள்வரத்
தொடங்கிவிட்டன என்பது அறிவோர் துணிபாகும். பசுக்களிடம்
கருணையில்லாதவர்களும் பசுக் கொலைபுரிவோரும் பசுவிறைச்சியுண்போரும்
ஆகிய புறமதத்தினர், கொலைஞர், புலையர் முதலியோரிடம்
பசுக்களையேனும் கன்றுகளையேனும் விற்பது பெரும்பாதகமாகும். விலைக்குப்
பெற்றவன் செய்யும் பாதகத்துக்கு விற்றவனும் பொறுப்பாளியாவன் என்பது
நூற்றுணிபும் உண்மையுமாம். நோய்ப்பசு, மூப்புடையபசு, இளைத்தபசு
முதலியவற்றை விற்பதும் அதனால் வரும் சிறு ஊதியத்தைப் பொருளாக
எண்ணுவதும் பாவமாகும்; அவற்றையும் பால்வற்றிய பசுக்களையும்
உடையவர்கள் தாமே வைத்துக் காப்பாற்றுதல் கடமையாம். தம்மால்
இயலாதபோது காக்கக்கூடியவர்களிடம் ஒப்புவித்தலே முறைமையாகும்.
தனித்தனிப் பசுக்காக்க இல்லாதவர்கள் பலர் ஒன்றுகூடிப் பசுக்காக்கும்சாலை
நியமித்து அதன்மூலம் அவற்றைக் காக்க முயல்வது பெருங்கடமையும்
சிவபுண்ணியமுமாகும். ஊர்ப்புறங்களில் பசுக்கள் மேயப் புல்உள்ள நிலம்
உண்டாக்கி வைத்தல் புண்ணியமும், அவ்வாறுள்ள நிலங்களை அபகரித்தல்,
பெரும்பாவமும் ஆம். மக்கள் இவற்றை அறிந்து திருந்த முயல்வார்களானால்
நாட்டுக்கு நலமும் தமக்கு நன்மையையும் தேடிக் கொண்டவராவர்.