பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்805

 

கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே மலைவார்போற்
காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா படைதாங்கி நின்ற
நேர்மையாலும் துணியப்படும்.

     இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த ஞான
தேசிகர்பாலறியத்தக்கன.

     வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண் நின்ற
நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு உரியவாறு
கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும் அலைப்பட்ட குற்றமும்
உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம்.
இங்குப் போரிற் படை மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக்
கிடக்கும் கொல்களத்தினிடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே
திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

"பலதுறைகளின் வெருவரலொடு பயில்வளையற நுழைமா
 வுலமொடுபடர் வனதகையுற வுறுசினமொடு கவர்நாய்
 நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர்
 புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள
வுளவே" (734)

என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும், இவ்வாறுள்ளன
பிறவுங் கண்டுய்வோமாக. 27

635.
இந்நிலைய வெங்களத்தி னேற்றழிந்த மானத்தாற்
றன்னுடைய பல்படைஞர் மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென் றதிசூர னேரடர்ந்தான்.  28

     (இ-ள்.) வெளிப்படை இந்நிலையினையுடைய கொடிய போர்க்களத்திற்
போரேற்றுவந்து போரில் அழிந்து போயின இளிவரவு பொறாமையினாலே
தனது பலபடைஞர்களில் மீண்டவர்களைச் சேர்த்து உடன்கொண்டு
மின்போன்ற ஒளியுடைய வாளினை வீசி வெவ்விய புலியை ஒத்த வலிமை
யுடைய வீரராகிய ஏனாதிநாதரின் முன்பு நேராகச் சென்று அதிசூரன் போர்
புரிந்தான்.

     (வி-ரை.) இந்நிலைய வெங்களம் - இம்முனைய வெம்போரில் -
(632) என்றது போல வந்தது. வெங்களம் - கொடிய போர் நிகழும் களம்,
இடத்து நிகழும் போரின் வெம்மை இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.

     வெம்மை - விருப்பம் எனக்கொண்டு, அதிசூரன் தானே விரும்பி
"இந்த வெளிமேற் கை வகுத்து" (620) என்று போருக்கு அழைத்த களம்
என்ற குறிப்புமாம்.

     ஏற்று - போர் ஏற்று. அழிந்த - அழிந்ததனால். அதில்தன் படைகள்
மடிந்தும் ஓடியும் போயினதாலே விளைந்த.

     மானத்தால் - மானம் - தன்னிலை திரியாதிருத்தல். இங்கு இளிவரவு
பொறாததன்மேல் வந்தது. இதனையே அவமானம் என்பர். மானங்கெடவரின்
என்ற வழக்குங் காண்க. அழிந்த மானமிக (637) என்று பின்னர்க் கூறுவதுங்
குறிக்க.

     படைஞர் மீண்டார்- படைஞரில் மீண்டவர், இவனது
படைஞருள்ளே, முன்னர்ப் படைவீரர் விளைத்த போரில் (626) கூறியபடி
பட்டவர் பலர் அவர்போக எஞ்சியவருள் நாயனார் செயிர்த் தெழுந்து
வாளாற்றுணித்தபோது எதிர்ந்தவர் எல்லாரும் கொலைப்பட்டொழிய,
அவருடன் முட்டாதாராய்க் களத்தைவிட்டுப் போர்முனையில் எதிர் நில்லாது
மறைந்தும் ஓடியும் போயினாருள்ளே, தன்னால் ஊக்கங்கொண்டு போருக்கு
மீண்டும் வந்தவர் சிலர்; அவர்களையும் உடன் கொண்டு என்க. மாண்டாரும்
ஓடினாரும் உள்ளாரும் ஒழிய மீண்டார் தமை என்பதாம்.