பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்807

 

     இவ்வாறன்றிப் படை பிழைத்து - என்பதற்குப் படையுடன் தப்பி -
தானும் தன்னுடைய சேனையுமாகத் தப்பி - தனது வாட்படையைக்
கொண்டும் கேடகத்தைக் கொண்டும் போர் செய்ய அறியாமல் - என்று
பலவாறு உரைப்பாரு முண்டு.

     பொன்- அழகிய என்றலுமாம். தடந்தோள் - இங்கு மாற்றவனைப்
புறகிடச் செய்து வென்றது வாள்வலி பெற்ற தோள்வலியே யாதலின்
தோளைச் சிறப்பித்தார். தோள்வலி என்ற இடத்துச் சங்கோத்தர
விருத்தியில் எமது மாதவச் சிவஞான சுவாமிகள் உரைத்தவை காண்க.

     புறகிட்டான் - தோல்வியுற்று அதற்கடையாளமாக முதுகு காட்டி ஓடினான்.

     புறமிட்டான் - என்பதும் பாடம். 29

637.
போன வதிசூரன் போரிலவர்க்கழிந்த
மானமிக மீதூர மண்படுவான் கண்படா
னானசெய லோரிரவுஞ் சிந்தித் தலமருவா
"னீனமிகு வஞ்சனையால் வெல்வ" னென
                        வெண்ணினான்,
       30
   
 638.
சேட்டாருங் கங்குல் புலர்கலைத் தீயோனு
"நாட்டாரைக் கொல்லாதே நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர் மலைக்க வருக" வெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான்.
 31

     637. (இ-ள்.) வெளிப்படை. (இவ்வாறு உடைந்து புறகிட்டு ஓடிப்)
போயின அதிசூரன் போரிலே அவருக்குத் தோற்றதனாலாகிய மான மிகமேற்
படத் தரையிற் படுத்தவன் தூங்காதவனாகி இவ்வாறாயின செயலை
எண்ணியெண்ணி அந்த ஒரு இரவு முழுதுஞ் சிந்தித்து மனஞ்சுழன்று
"(இப்படி நேர் பொருதலின்றி) ஈனமிகுந்த வஞ்சனைச் செயலாலே அவரை
வெல்வேன்" என்று எண்ணினானாய், 30

     638. (இ-ள்.) வெளிப்படை. அந்நீண்ட இரவு முழுதும் கழிந்து
புலர்காலையில் தீயவனாகிய அவனும் "நமது போரில் நம்பொருட்டு
நாட்டார்களைக்கொல்லாமல் நாமிருவரும் தனியிடத்தில் வாளின் தாய
உரிமை கைக்கொள்வதனை நிச்சயிக்கும் போரினைச் செய்ய வருக" என்று
இதழ்கள் செறிந்த பூமாலையணிந்த ஏனாதிநாதர்க்குச் சொல்லி வர
(ஏவலாளனை) அனுப்பினான். 31

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. தனி
முடிபுகளாகக் கொள்வாருமுண்டு.

     637. (வி-ரை.) போன - புறகிட்டுச் சென்ற. அவன் ஆயினவனாகாது
நன்மைகக்குப் புறம் போயினவனே என்பது குறிப்பு.

     மிக மீதூர - ஒரு பொருட்பன்மொழி. அடர்ந்த மிகுதி குறித்தது.
மீதூர்தல் அடக்க முடியாதபடி மேற்கிளம்புதல். மான மிக மீதூர -
மானமுடையார் தந்நிலை யழியார். மானம்பட வரின் உயிர் வாழார். "மயிர்
நீப்பின் வாழாக் கவரிமா வன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்." ஆயின்
இவன் அவ்வாறு தன்னுயிர் நீத்து மானங்காத்துக் கொள்ள முற்படாது,
வஞ்சனையால் வென்று, தகாத வழியிலே உயிர் ஓம்பியும் பிறர் பொருள்
கவர்ந்தும் வெற்றி என்ற பேர்பெற்று மானமுங் காத்துக்கொள்ள
எண்ணினான். இது மான மிக மீதூர அதனால் விழுங்கப்பட்டானாதலாலும்,
அழுக்காற்றினால் விழுங்கப்பட்டு ஏலா இகல் புரிந்தானாதலாலும்,
தன்னையே சால மதித்த தீய பெருமிதமுடையனாதலாலும் அறம் பிறழ்ந்து
வஞ்சனை செய்தான் என்பது.