மண்படுவான்
கண்படான் - தரையிற் படுப்பன் - ஆனால் தூங்க
இயலாது எழுவானாகி. பூவார் அமளி முதலிய படுக்கையின்பம் விரும்பாது
தரையிற் படுத்தல் மிக்க துயரத்தாலாவதாம். நோன்பு - விரதம் -
முதலியவற்றிலும் இவ்வழக்குண்மையும் கருதுக. மிகு துயரம், கவலை
முதலியவுற்றேர் படுப்பினும் உறக்கம் வராது அழுந்தும் இயல்பும் காண்க.
மண்படுவான்
- மண்விழுவான் - நாசமாவான் - பாவி என்ற வசைச்
சொற்குறிப்பும்பட நிற்பது காண்க. இவனது வஞ்சகக் கொடுமையைப்பற்றி
ஆசிரியர் இவ்வாறு வசைக் குறிப்புப்பெற இரட்டுற மொழிந்தார் என்க.
"கண்ணாவாரேனுமுனைக் கைகுவியா ராயினந்த, மண்ணாவார் நட்பை
மதியேன் பராபரமே" என்ற தாயுமானார் வாக்குங் காண்க. மானமுடையார்
தந்நிலை திரியார்; ஆனால் இங்கு இவன் வீரன் என்ற நேர்மை திரிந்து
வஞ்சனையால் வெல்ல எண்ணினாதலின் மண்படுவான்
என்றதாம்.
"மண்புகார் வான்புகுவர்" என்ற தேவார ஆட்சியும் காண்க. மண்படுவான்
-
மண்ணில் வீழ்வான் என்று பொருள் கொள்வது சிறப்பின்றாம்.
ஆன
- செயல் - தான் போரில் அழிந்த செயலை. ஓர் இரவும் -
ஒரு இராப்பொழுது முழுமையும், முற்றும்மை. ஓர் - எண்ணிய வகையில்,
அந்த இரவு முழுமையும் என்றலுமாம். ஆன செயலைச் சிந்தித்து என்க.
தான் தோற்றுப் புறகிடநேர்ந்த நிகழ்ச்சியினையே பன்னிப் பன்னி
இரவுமுழுதும் எண்ணிமிட்டு இதனைக் கழிவிரக்கம் என்ப. இவ்வாறு கழிந்த
பொருட்கிரங்கி நிற்றல் துன்பமே விளைக்கும்; ஆதலின் அலமந்து
என்றார்.
அலமா - பகுதி. மனஞ் சுழன்று வருந்துதல்.
அலம் வா- பகுதி
எனக்கொண்டு இச்சொல் அலம் வருதல் எனவும்
வழங்கும். இங்கு
அலம்வருவான் என்பதும் பாடம். அலம் - சஞ்சலம்
- துன்பம்.
ஈனமிகு
வஞ்சனையால் வெல்வன் - நேரடர்ந்தான் போரில்
உடைந்து புறகிட்டமையால் அவ்வகை வெற்றி பெறுவது தன்னால் இயலாமை
தெளிந்தனன். ஆதலின் வஞ்சித்து வெற்றி பெறுவதே வழி என்று கருதினன்
என்க. இது உலகியலிற் பெரும்பான்மை மக்களுட் காண்பதோரியல்பு. நேரிய
ஒழுக்கங்கைக் கொண்ட மானமுடையார் இதிற்றுணியார் என்பார்
ஈனமிகுவஞ்சனை என்றார். உலகிற் பெரும்பாலும் மக்களுள் இக்கொள்கை
பரவி நிற்றலின், "வழி எது வேயாயினும் உட்கொண்டது பெறுதல்"
என்பதொரு போலி நியாயமும் நிலவுவதாயிற்று.
The end justifies the means
என்பது முதலாகக் கூறுவது கீழோரது நவீன மரபு. இவ்வாறே போரிற்
"பன்முறை யிழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போன" முத்தநாதன்
மெய்ப்பொருணாயனாரை வஞ்சனையால் வெல்ல எண்ணிச் செயல்செய்தான்
என்பதும் காண்க. 472-ம் பாட்டும் அச்சரித நிகழ்ச்சியும் காண்க. முத்தநாதன்
பன்முறையிழந்து தோற்ற பின்பே அது துணிந்தானாக, இங்கு அவனிலுங்
கடையனாகிய அதிசூரன் ஒருமுறை புறகிட்டவுடனே வஞ்சனை துணிந்து
செயல்செய்தான். ஆதலின் அக்கீழ்மை நோக்கி இங்கு மண்படுவான் என்றும்,
வரும்பாட்டிலும், 641-லும் தீயோன் என்றும்,
647-ல் பாதகன் என்றும்
குறித்தார்.
எண்ணினான்
- எண்ணினானாய். எண்ணினானாகி - செலவிட்டான்
என்று முடிக்க.
638.
(வி-ரை.) சேட்டாரும் -
சேடு ஆரும். சேடு - சேய்மை.
சேய்த்தாகிய அளவு கொண்டு நீடித்தல். சேடு கொண்ட ஒளி (247)
(சேய்மையினும் நீண்டு விளங்கும் பேரொளி) என்றது காண்க.
ஆரும் -
நிறைந்த. ஆர்தல் - நிறைதல். கால நீட்டித்துக்
கழிந்த இரவு என்பதாம்.
துன்பம் - துயரம் - பிரிவு முதலியவற்றாற் காலம் செல்லாது நீடித்துக்
காட்டுதல் இயல்பாம்.
புலர்காலை
- இரவு இருள் கழிந்து போகும் அதிகாலை. நன்றாய்
விடிந்து ஞாயிறு படருமளவும் பொறானாகி என்பது குறிப்பு.
|