பக்கம் எண் :


812 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

நலமென்றுங் குன்றாதார்" (610) எனத் தொடங்கித் "தம் பெருமான் சாத்துந்
திருநீற்றுச் சார்புடைய, வெம்பெருமா னேனாதி நாதர்" (649) என ஆசிரியர்
முடித்துக் காட்டிய ஒழுக்கம் இங்கு மாற்றானுங் கண்டுணர்ந்த வகையினால்
விரிந்து புலப்படுதல் காண்க. நாயனாரது தூய வாழ்க்கை யொழுக்கத்தின்
உள்ளுறையும் குறிக்கோளும் இதுவே. இதனை அவர்தம் உயிரினுஞ்
சிறந்ததாகக் கொண்டது இச்சரிதப் பின்விளைவாலன்றி முன்னரே உலகமறிந்த
ஒழுக்கமாயிற்று என்க. "நள்ளார்களும் போற்று நன்மைத்துறை" (612) என்றது
காண்க.

     திருநீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே - வேடம் பூண்டார்
யாவரேயாயினும் திருவேடமே கருதி வழிபட்டார் என்பது குறிப்பார்
தாங்கினார் என்னாது தாங்கிய நெற்றியினார் என்றார். திருநீற்றினால்
விளங்கும் அடிமைத் திறம் உள்ளத்தினுட் புகாது திருநீறு நெற்றியளவில்
நாடக வேடம்போல வேடமாத் திரையாய் நின்றதாயினும் என்க. இதுபற்றியே
மாற்றானாய்ப் பண்டுநீறு பயிலாத அவனும் புறம் பூசி வஞ்சிக்கத் துணிவு
கொண்டான். ஏகாரம் தேற்றம். தாங்கிய - உண்மையானன்றிப்
பொய்வகையானும் பூசிய. எவ்விடத்தும் - அதற்கீடாகத் தம் உயிர்
போவதாய் முடியும் நிலையினும்.

     ஆங்கவரும் - ஆங்கு - அவர் - என்ற சுட்டின்மேற்
சுட்டுத்தேற்றம் - பற்றியது. உம்மை - உயர்வு சிறப்பு. தீங்கு இழையார் -
எவ்வகையானும் தீமை செய்யார்.

     அறிந்தானாய் - ஆய் - காரணப் பொருளில் வந்தது
அறிந்ததனாலே.

     தீயோன் - பயிலாதானாயினும் - அறிந்தானாய் - பூசி - உடன்
கொண்டு - கைக்கொண்டு புகுந்தான் - என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடிக்க.

     பண்டு திருநீறு பாங்கில் புயிலாதான் - என மாற்றுக. பண்டு -
முன் ஒரு நாளும். பாங்கில் - வழிபாட்டு நெறியில் நின்று. நீறு பூசியிடவே
நெற்றி படைக் கப்பட்டமையால் அப்பாங்கில் நின்று ஏன்றலுமாம். "நீறில்லா
நெற்றிபாழ்" "திருவெண்ணீறணியாத திருவிலூரும் ... அவையெல்லா மூரல்ல
அடவிகாடே" "வெண்ணீ றணிகிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே"
என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. "நீறில்லா நெற்றியைச் சுடு" என்பது
வேதம். பயிலுதல். பல நாளும் உள்ளுருகப் பூசி வழிபட்டு ஒழுகுதல்.
பயிலாதான் - பயிலாதானாயினும் "பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே
பாழேநா னுழன்ற வாறே" என்ற திருத்தாண்டக ஆட்சி காண்க. பாங்கிற்
றிருநீறு
என்றபடியே கூட்டிப் பாங்கினைச் செய்யும் திருநீறு என்றலுமாம்.1

     திருநீறுபற்றி 141லும் பிறாண்டும் வருபவை யாவும் நினைவுகூர்க. 34

     642. (வி-ரை.) வெண்ணீறு - நாயனார் நோக்குங்கருத்துப் பற்றி
மேற்பாட்டிற் றிருநீறு - என்றார். "பாவமறுப்பதுநீறு" என்பதுமறை. ஆயின்
இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய பயன்றந்து பாவமறுக்காமல்
அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து, வெண்ணீறாகும் அளவில் மட்டும்
நீன்ற தென்பார் திருநீறு என்னாது வெண்ணீறு என்றார். "புண்ணியர் பூசும்
வெண்ணீறு" என்றபடிக்கன்றி இவனைப் பாதகன் (647) என்று முடித்ததும்
காண்க. இங்கு இவன்பால் திருநீற்றின்


     1 இங்கு நாயனாரது மரபில் வந்தோனும் அவருடன்
தொழிலுரிமைத்தாயத்தின் உள்ளோனும் ஆன அதிசூரன் முன் ஒரு
நாளும் திருநீறு பூசியறியான் என்றமையால் "அவன் சைவ மரபிற்
பிறந்தவனாயிருந்தும் பிறமதத்திற் பிரவேசித்தவனாகத் தோன்றுகின்றது" என
ஊகிக்கின்றார் மழவை மகாலிங்கையர். பல பிறவிகளிற் செய்த நல்லூழின்
பயனாகச் சைவநன்மரபிற் றோன்றப் பேறுபெற்ற எத்தனையோ
காளையர்களின் நெற்றிகள் திருநீற்றை அறியாமலே கழிந்தொழிந்து
போகின்றவதனை நாம் இந்நாளிற் காண்கின்றோம்! அந்தோ! நல்லோரினஞ்
சார்ந்த இவர்கள் நல்லோரைக் கண்டேனும் திருந்தியுய்யுமாறு இறைவன்
நல்லருள் புரிவாராக.