பக்கம் எண் :


816 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

கண்டேன்; வேறு இனி என்ன நினைக்க உள்ளது? தேவதேவனாகிய
சிவபெருமானது சீரடியாராக இவர் ஆயினர்" என்று எண்ணியவராகி,
"இவருடைய மனங்கொண்ட கொள்கையின் குறிவழியே அமைந்து நிற்பேன்"
என்று நிச்சயித்து, 38

     646. (இ-ள்.) வெளிப்படை. (அவனைக் கொல்லும் இடை தெரிந்து
அடர்க்கக்) கையில் ஏந்திய வாளினையும் பலகையையும் போக விட்டுவிட
முதலிற் கருதினாராயினும் "நிராயுதரைக் கொன்றார் என்கின்ற பழி இவர்க்கு
வராதிருக்கவேண்டு" மென்று எண்ணி அந்த வலிய பலகையினையும்
நெய்யூட்டிய வாளினையும் உடன் ஏந்தி, எதிர்த்துப் போர்செய்வாரைப்
போலக் காட்டி நேரே நின்றனர். 39

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு தொடர்.

     645. (வி-ரை.) கண்டபொழுதே - "திருநீறுஞ் சாதனமுங் கண்டால்"
என்ற திருத்தாண்டகம் காண்க.

     கெட்டேன்! "உறவாவா ருருத்திரபல் கணத்தினோர்கள்" என்றபடி
வெண்ணீறிட்ட ஒரு அடியவரை உற்றார் என்றெண்ணாது பகைவர் என்று
எண்ணி, அவரை அடர்த்துக் கொல்லும் இடைதெரிந்து தாள் பெயர்த்துத்
தாயமுழுமையும் கொள்ள அமைந்துநின்றேனே என்று வருந்தியிரங்கும்
இரக்கச் சொல், 593-596- உரை பார்க்க.

     முன்பு இவர்மேல் காணாத - இவர்மேல் முன் எந்நாளும்
பார்த்தறியாத - காணப்படாத. இதற்குமுன் எந்நாளும் இவர் நீறிட்டதை நான்
கண்டதில்லை என்றபடி. "பண்டு திருநீறு பாங்கிற் பயிலாதான்" (641) என்றது
காண்க. இவர் - இவனை. முன்னர் உனக்கு (621), உரவோன் (639) என
ஒருமையிற் சுட்டிய நாயனார், இங்கு இவன் நெற்றிநீறு கண்டவுடன் தமது
முன்கருத்துக்களையெல்லாம் அக்கணமே அறவே மாற்றி, இவர்மேல் -
அடியார் ஆயினார் - இவர் தம்கொள்கைக்குறி - கொன்றார் எனும் -
இவர்க்கு என இவ்வாறு பன்மையாற்சுட்டி இங்குக் கூறியது திருநீற்றின்
வழிபாட்டிலே இவரது ஒழுக்கத்தின் உறைப்புக்காட்டியது. இவ்வாறு
நாயனாரது மனநிலையை ஆசிரியர் நாடகச் சுவைபெற நமக்கு அறிவித்தது
காவிய நயமாம். எனினும் ஆசிரியர் தமது நிலையில் நமக்கு அறிவிக்கும்
வகையில் முன்னின்ற பாதகனும் என முடித்துக் காட்டுதலும் குறிக்
கொள்ளத்தக்கது.

     வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் சீரடியார்
ஆயினார்
- திருநீற்றின் பொலிவு காண்டலின் அடியார் ஆயினார் என்பது
துணிந்தேன். இவர் அடியாராயினார் - நீறிட்டுள்ளாராதலின் - மற்றை
யடியார் போல - என்பது தருக்கமுறையிற் றுணிந்த அனுமானம் என்னும்
கருதலளவையாற் பெறப்பட்டது. காணப்படாத அடியராந் தன்மையினைக்,
கண்ட திருநீற்றினான் அறிந்தனர் என்க. புகழ்ச்சோழர் தம்யானை
பிழைத்ததுண்டு (587) என்று கண்ட உண்மைபோலக் காண்க. நீறிட்டார்
அடியாராவார் என்பது திருவேட வழிபாட்டின் உள்ளுறையாகத் துணிந்த
பொருள். "நீறிடுந் தொண்டர்" (158), நீறிடுவாரடியார் நிகழ்தேவர்கள்" (ஏழாந்
தந்திரம் - 159) முதலிய திருமூலர் திருமந்திரங்களும் பிறவும் காண்க.

     மேற் கண்டேன் - முன்னரும் புறம் பூசி (642) என்றது காண்க.
மேல் - மேலாக. உயர்வாக என்றலுமாம். இதுமேலாகவே, ஏனைய காட்சிகள்
யாவும் கீழாயின என்பதும் குறிப்பாம்.

     திருநீற்றின் பொலிவு - அதனில் அன்புவைத்து வழிபடுவோர்க்கே
நீறு பொலிவுள்ள சாதனமாய் விளங்கும். அதனிலன்பில்லாதார் பலரும்
பேணியணியாமை மாத்திரமேயன்றி இகழ்ந்தும் திரிந்தொழியக்
காண்கின்றோமன்றோ! ஆயின் அன்புடையார்க்கு அது "சேலுங் கயலுந்
திளைக்கும் கண்ணா ரிளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடி",
என்ற திருப்பல்லாண்டிற் கூறியபடி இன்பம் தரும். "நீறுகண்டனை யாயினு
நெக்கிலை" என்ற திருவாசகத்தின் கருத்தினையும் உன்னுக.