வேறினி
என் - முன் எந்நாளும் இவர் மேல் நீறு
கண்டேனில்லையாயினும், இவர் என்னைப் பகைத்து என்பால் ஏலா
இகல்பூண்டு வலிந்து எனது தாயங்கொள்ள எண்ணிப்
போருக்கழைத்தவராயினும், இவர் என்னை வஞ்சனையாற்கொல்ல
எண்ணியவராயினும், இவர் என்னை வெல்ல முடியாதவராய் நேற்று எனக்குத்
தோற்றுப் புறகிட்டு ஒடியவரேயாயினும், இவர்மேல் நீறு கண்டபின், வேறு
இவ்வாறெல்லாம் மற்று நினைக்கவேண்டிய நினைப்புக்கள் யாவுள?
ஒன்றுமில்லை. நீறு காணின் அது திருவேடம். அது பூண்டவர் அடியார் என
நினைப்ப தொன்றேகொள்ள உள்ளது. ஏனையவை எல்லாம் வேறென்
றொதுக்கப்படுவன என்பது முடிந்த கருத்து. ஆதலின் சீரடியார்
ஆயினார்
என்று முடித்தார்.
"எவரேனுந்
தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா
லுள்கி, யுவராதே யவரவரைக் கண்டபோது உவந்தடிமைத் திறநினைந்தங்
குவந்து நோக்கி யிவர் தேவ ரவர்தேவ ரென்று சொல்லி யிரண்டாட்டா
தொழிந்தீசன் றிறமே பேணிக், கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்ற திருத்தாண்டகத்திற் குறித்த
ஒழுக்கத்தின் இலக்கணத்திற்கு நாயனார் முற்றும் நிரம்பிய இலக்கியமாகி
நின்ற நிலைகண்டு உய்வோமாக. உவர்மண் ணூறி மேனி வெளுத்த
வண்ணான் எதிரே வரக்கண்ட கழறிற்றறிவார் நாயனார் அடியார் வேடமாகக்
கண்டு வணங்கினர். அவன் பயந்து "யாரென் றடியேனைக் கொண்டது?
அடியேன் அடிவண்ணான்" என்று கூற, அவனை வண்ணான் என்றும், தாங்
கருதியபடி அவ்வேடம் திருநீற்றுவேட மன்றென்றும் அறிந்தபின் "அடியேன்
அடிச்சேரன்! திருநீற்று வாரவேட நினைப்பித்தீர்; வருந்தா தேகும்" என்று
மொழிந்து சென்றனர் என்ற சரிதத்தினுட்குறிப்பினையும் அடிமைத்
திறத்தினையும் இங்கு உன்னுக. இதுபற்றியே இங்கு நாயனார் "வெண்டிரு
நீற்றின் பொலிவு - மேற்கண்டேன்" என்றதும்
காண்க. திரு
வேடத்தினியல்பும் அதன் வழிபாட்டின் பயனும் முடிந்த பொருளாக வைத்து
ஞானசாத்திரத்துக் கூறுவதும் இங்குக் கருதுக.
அண்டர்பிரான்
- சிவபெருமான், பெருந்தேவர்க்கெல்லாம்
தெய்வமாவார், சீர் - அடியார்க்கு இயற்கை படைமொழி. ஆயினார்
-
முன்னர் அடியராந்தன்மை யில்லாதிருந்தும் திருநீறு பொலியக்காண்டலின்
ஆயினார் ஆதலின் இவர் குறிவழி நிற்பேன்.
மனங்கொண்டு
- மனத்தில் நிச்சயித்து.
கொள்கைக்
குறிவழி - தமது உயிரைக் குறிவைத்து வஞ்சித்து
அதனால் தாயம் பெற எண்ணிய கொள்கை. இது அவன் கருத்து எனத்
தெரிந்தபின் நாயனார் துணிந்த நிலை. இதில் அவர் நின்ற உறைப்பு
வரும்பாட்டில் மேலுஞ் சிறந்து விளங்குதல் காண்க. தமது உடமை எல்லாம்
தொண்டர்க்கு ஆக்குவார் நாயனார் (611). இங்கு இவரை வென்று தாயம்
பெறினும் அது தொண்டர் உடைமையேயாம்; ஏனை உடைமைபோல்
உடலும்உயிரும் தொண்டர்க்கு ஆகும் இயல்பினவாம் என்பன நாயனாரது
உள்ளக்கிடை. என் உயிர் கொள்வதன் மூலம் தாயத்தை இவர்
பெறவிரும்பினார்; அவ்வாறே இவர்க்கு அதனை ஆக்குவன் என இது
துணிந்தார். 38
646.
(வி-ரை.) நீக்கக்கருதி
- இது, இவர் குறிவழி நிற்பேன் என்று
துணிந்த மனநிலையினை அடுத்து, நாயனார் மனத்துள் நிகழ்ந்த நிகழ்ச்சியாம்.
நீக்க - தாங்காது போக்க, கருதி
- கருதியும். அது - நீக்குதலை.
செய்யார்
- செய்யாராகி. செய்யாமைக்குக் காரணம் மேற் கூறுகின்றார்.
இவர்
கொள்கைக் குறிவழி நிற்றல் மாத்திர மன்றி, அதனை அவர்
பெறுதலில் நீறிட்டு அடியாராயின அவர்க்கு எவ்வகையானும் பழிவாராமற்
காக்கவும் வேண்டும் என்றது நாயனார் மனத்துள் அடுத்து எழுந்த நினைவு,
இதனால் அவரது திருநீற்றுச் சார்வாகிய அன்பின் உறைப்பினை
மேலுங்காண்க.
|