பக்கம் எண் :


818 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை - இவர் விரும்பியமைந்தபடி
என் உயிரைக் கொண்டு தாயமும் கொள்ளுமாறு வாளும்பலகையும் போக்கி
நின்றேனாகில் அந்நிலையிலும் இவர் கொல்வர்; அப்போது நிராயுதரைக்
கொன்றார் என்ற தீமை இவரைச் சாரும்; நீறு பூசிய ஒரு அடியார்க்கு
அப்பழி சாரலாகாது; இவரை அடியாரெனக் கண்டு இவர் குறிவழிநிற்கத்
துணிந்தேனாதலின் இவர்க்குப் பழி சாரும்படி நான் நிற்கலாகாது என்பன
அவர் கருதியனவாம். நிராயுதரைக் கொல்லலாகாது என்பது போர்வீரர்
கைக்கொண்டொழுக வேண்டிய போர் நீதிகளில் ஒன்று. தாயத்தின் வைத்த
பேராசையால் வஞ்சித் துயிர்கொண்டு அதனைக் கவரத்துணிந்த இவர் இந்தப்
போர் நீதியையுங் கடந்து கொல்வர் என்பதும் நாயனார் துணிந்தனர்.

     இவன் எவ்வகைப் பழித் தொழிலராயினும், நீறிட்டதனா
லடியாராயின்மையின் இவர் வழி நான் நிற்பேன்; அவ்வாறு நிற்கும்பொழுது
இவர்க்கு எப்பழியும் வாராமலும் நிற்பேன் என்று துணிந்த திருநீற்றுச்
சார்பின் அடிமைத்திறத்தின் மேன்மை நோக்குக. இதுபற்றியன்றே ஆசிரியர்
"திருநீற்றுச் சார்புடைய எம்பெருமான்" (649) என முடித்தனர்.

     தீமை - பழி. நிராயுதரைக் கொல்லலாகாது என்பது முன்னைநாள்
தமிழரது போர் நீதி. பசுக்கள், முதுவர், பிணியுடையோர், பெண்டிர்,
புதல்வர்ப் பெறாகோர், படையேந்திப் போர்செய்யாதார், சிறுவர்
முதலியோரைக் கொல்லலாகாது என்பது தமிழரின் நீதிப் போர் ஒழுக்கம்.
அத்தகையோரைத் தம்மரண் சேரும்படி போர் தொடங்கு முன்னர்ப்
பறைசாற்றுவிப்பதும் வழக்கு. பொருட் பேராசையால்
விழுங்கப்பட்டார்களாகிப், படையெடாதோர் பாலர், பெண்கள் முதலிய
ஒன்றும் பாராது, வெகுதூரம் மறைந்து நின்று, நச்சுக்காற்று வெடிகுண்டு
முதலிய நாசகாரிகளாற் குடிமக்களைக் கொன்று பொருள்கவர்வதாகிய
இந்நாள் அநாகரிப்போர் முறைக் கொலைக் கொள்ளைகளை நம் பழந்தமிழர்
அறியார். இந்நீதிகளை யெல்லாம் அடியார் பெருமையினில் உள் அடக்கி
இங்கு நாயனார் குறிப்பாகக் கொண்டதனை எடுத்துக் காட்டும் வகையில்
உலகுக்குப் போர்நீதி யறிவித்தனர் சிறந்த அமைச்சர் பெருமானாகிய
ஆசிரியர்.

     நேர்வார்போல் - அமர் விளைப்பார்போல, வாளும் பலகையும்
நீக்கினாருமல்லர்; அவற்றை வாளா தாங்கி நின்றாருமல்லர்; ஆயின் அமர்
செய்வார்போற் பாவனை காட்டி நின்றனர்.

     நேர் நின்றார் - அவன் எண்ணியபடி செய்யுமளவும் அவனெதிர்
நின்றனர். 39

647.
அந்நின்ற தொண்டர் திருவுள்ள மாரறிவார்?
முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்;
இந்நின்ற தன்மை யறிவா ரிவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார்.
40

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு நின்ற திருத்தொண்டரின்
திருவுள்ளக் கிடையினை அறியவல்லார் யாவர்? முன்னே நின்ற பாதகனாகிய
அதிசூரன் தான் கருதிய படியே முடித்தனன்; இத்தன்மையினை அறிவாராகி
இத்திருத்தொண்டர்க்கு அருளும் பொருட்டு மின்போன்ற செஞ்சடையுடைய
சிவபெருமான் தாமே வெளிப்பட்டுத் தோன்றிநின்றருளினார்.

     (வி-ரை.) அந்நின்ற - மேலே கூறிய கருத்துடன் நேர்வார்போல்
நேர்நின்ற.

     திருவுள்ளம் ஆர் அறிவார் - அவர்தந் திருவுள்ளக்கிடையை யான்
அறிந்த அளவில் மேலே விரித்துக் கூறினேன்; அன்றி முற்றும் அறிவார்
யாவர்? என முடித்துக்கொள்கின்றனர் ஆசிரியர். 606-ம் பாட்டிற் குறித்த
கருத்துக்களை இங்கு நினைவு கூர்க. நாயனாரோடு உடனிருந்தார்களிற்
சுற்றத்தார் யாரும் அறியா