பக்கம் எண் :


820 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

திறம் யாது என்போமாகில் அதனை எவ்வகையிற் போற்றுவோம்?
அவ்வருட்டிறத்தின் முடிபு பாசமறுத்து உடன் பிரியா அன்பருளிய இதுவே
என முடித்துக் கூறியவாறு. போற்றுவது - அறிந்து பாராட்டுதல். பற்றலர் -
பகைவர். பாசமறுக்கும் இறைவனருட்டொழிற் கருவியாயினமையாலும்,
அருளும் வகைகளிற் பற்றலர் கைவாளும் ஒன்றாகும் எனப் பொதுமையிற்
காணக் கூறியமையாலும் பற்றலர் எனப் பன்மையாற் கூறினார்.

     பாசம் அறுத்தருளி - பாசம் - கட்டு - கயிறு. இங்கு மாயா
காரியமாகிய உடம்பினைக் குறித்தது. உடல் ஒன்றின் அளவாகவே நாயனார்
இவ்வுலகத்திற்கட்டுப்பட்டு நின்றார். வாள்பயிற்றும் ஆசிரியத் தொழில்செய்து
வளம் பெற்றும், அதிலே தாய உரிமையுடையான் ஏலா இகல் கொள்ள
நின்றும், அதுகாரணமாக அவன் அழைத்த போரில் மூண்டு நின்றும்,
செயல்கள் செய்ய நிலைக்களமாக உலகக் கட்டினுள் அகப்படுத்து வைத்தது
உடலாகிய மாயாகாரியமேயாம். பாசம் கயிற்றினைப் போன்று உயிரைக்
கட்டுவதனால் அப்பெயர் பெற்றது. கயிற்றை அறுத்துவிடின் முன்
கட்டுப்பட்டு நின்ற பொருள் தன்னிலையிற் சேர்தல் போல் இங்குப் பாசத்தை
அறுத்தனர்; கயிற்றை அறுக்க வாள் வேண்டும்; இங்கு அந்த வாள்
பற்றலர்தங் கைவாளாக நின்றது என்றபடி.

     அவனருள் கலந்தன்றி ஒன்றும் நிகழாது. "அவனன்றி யோரணுவு மசை
யாதெனும் பெரிய ஆப்தர் மொழி" என்றபடி, இங்குத் தோற்றொடிய
பகைவன் தன்னை வென்ற நாயனார்பால் தான் கருதியபடியே முற்றுவித்தற்கு
அருள் இருந்தவாறாம். அவனருள் எஞ்ஞான்றும் உயிர்களின்
பக்குவத்திற்கேற்றவாறே பாசநீக்கம் புரியுமாதலின் இங்கு நாயனாரது
பாசமாகிய "மாயக் குரம்பை நீங்க வழிவைத்த" அருளாய் நின்றது. அதற்குப்
பற்றலர் கைவாள் வெளிப்பாட்டிற்கண்ட கருவியாய் நின்றது. அதுவே
இவருக்குச் சிவபுண்ணியப் பயனையும், அவனுக்குப் பாவப்பயனையும் தரும்
அருளாயிருந்தது என்பது கருத்தாதலின் கைவாளாற் பாசமறுத் தருளி
என்றார். அருளை மற்றினி என் போற்றுவது? என்ற குறிப்புமது.

     உற்றவரை - சாதனங்கண்டால் உள்கி, ஈசன் றிறமே பேணி,
எஞ்ஞான்றும் தம்மை முன்னரே அன்பின் வகையினாலே உற்றிருந்த
நாயனாரை. உற்றவர்- உற்றார் - உறவினர். தமது உருத்திர கணத்தவராகிய
தமரை என்க. "எம்பிரான்றமரேயோ வென்னா முன்னம்" (318) கருமிடற்று
மறையவனார் தமராய கழலேயர் பெருமகற்கு" (மானக்கஞ்சாறர் புராணம் 16)
முதலியவை காண்க.

     உற்றவரை என்றும் உடம்பிரியா அன்பு அருளி என்றது முன்னர்
மனத்தாற் பிரியாதிருந்தனர்; இப்போது என்றும் பிரியா அன்புடையராகப்
பெற்றார் என்க. உடன்பிரியா அன்பு - இறைவனை நீங்காது அன்பு செய்து
அனுபவித்திருக்கும் நிலை. மீளாநெறி என்ப.

     பொன்னம்பலம் - அருளின் நிறைவு. "புலியூர்ச் சிற்றம்பலமே
புக்கார்" என்ற திருத்தாண்டகத்தின் கருத்தும் காண்க.

     பொற்றொடியாள் - உமாதேவியார். பாசமறுத்தருளி என்றதனாற்
பாச நீக்கமும், உடன்பிரியா அன்பு அருளி என்றதனாற் சிவப்பேறும் தந்து
திருவருள் நிறைவாயினமையாற் பொற்றொடியாள் பாகனார் என்று ஈண்டுக்
குறித்தார்.

     இனி, "உன்னுடைய கைவாளாலுறு பாசமறுத்த கிளை" (கோட்புலியார்
புராணம் - 11) எனவும் "சேய்ஞலூர்ப்பிள்ளையார்தந்திருக்கையிற்
கோலமழுவாலேறுண்டுகுற்ற நீங்கி" (சண்டீசர் புராணம்58) எனவும் வருவன
போல, இங்கும் பற்றலர்தம் கைவாளாற் பாசமறுத்தருளி வானோர்
பிரானருளை யுற்றவரை என்று கூட்டி யுரைப்பாருமுண்டு. இப்பாட்டிற்கு
இவ்வாறன்றி, மற்றினி நாம் போற்றுவது என்? என்றதனை ஒரு முடிபாக்கி
நிறுத்திக்கொண்டு அருளைப் பற்றலர் என்று கூட்டிப் பரம சிவனது
கிருபையைப் பெற்றிராத அதிசூரன் என்று சேர்த்துரைப்பர் மகாலிங்கையர்
முதலியோர். அருளை உற்றவரை