பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்821

 

என்று கூட்டித் திருவருளையே பொருந்தி யிருக்கின்றவராகிய அந்த ஏனாதி
நாதரை என்று பொருத்தி யுரைப்பாரும், பிறவாறு கொண்டு கூட்டி
உரைத்துப் பொருள் கொள்வாருமுண்டு. 41

649.
தம்பெருமான் சாத்துந் திருநீற்றுச் சார்புடைய
வெம்பெருமா னேனாதி நாதர் கழலிறைஞ்சி
யும்பர்பிரான் காளத்தி யுத்தமர்க்குக் கண்ணப்ப
நம்பெருமான் செய்தபணி நாந்தெரிந்த படியுரைப்பாம். 42

     (இ-ள்.) வெளிப்படை. தமது இறைவன் சாத்துகின்ற திருநீற்றின்
சார்பினையே சார்பாகவுடைய எமது தலைவராகிய ஏனாதிநாத நாயனாருடைய
திருப்பாதங்களை வணங்கிக், கண்ணப்பர் என்ற நமது பெருமானார்
தேவதேவராகிய காளத்தியுத்தமனார்க்குச் செய்த திருப்பணியை நாம்
அறிந்தவாறு சொல்லப்புகுவோம்.

     (வி-ரை.) தம்பெருமான் சாத்துந் திருநீறு - "வள்ளல் சாத்து
மதுமலர் மாலையும் அள்ளு நீறும்" (31), "பூசுவதும் வெண்ணீறு",
"திருவாலவாயான்றிருநீறே", முதலியவை காண்க. இறைவன் நீறு
சாத்துதலாவது மா சங்கார காலத்து எல்லாவுலகங்களும் நீறாகவே, அந்நீறு,
அஞ்ஞான்று எஞ்சிநிற்கும் அவனது திருமேனியிற் கிடத்தல்.

     திருநீற்றுச் சார்பு உடைய - தமது உயிர் சார்ந்து நிற்கும் சார்பாகத்
திருநீற்றினையே கொண்ட. சார்பு - நிலைபிறழாது சார்ந்து நிற்றற்குரிய
ஆதரவாகக் கொண்ட பொருள், பற்றுக் கோடு என்ப.

     கண்ணப்ப நம்பெருமான் - கண்ணினை அப்பி அதனாற்
கண்ணப்பர் என்ற பேர் பெற்ற நாயனார். நம்பெருமான் என்பதும் நாயனார்
என்பதும் ஒரு பொருளன. கண்ணப்பு நம்பெருமான் என்பது பாடமாயின்
கண்ணினை அப்பிய நமது தலைவனார் என்க.

     தெரிந்தபடி - மேலே திருவுள்ளமாரறிவார் - என்று கூறி,
ஆயினும் அறிவார் அருளியபடி இது என்று முடித்த ஆசிரியர் அவ்வாறே,
கண்ணப்பரும் காளத்தியாரும் என்ற இருவருமே அறிய நின்றதொன்றாகிய
வருஞ்சரிதத்தையும் நாம் அறிந்து கூற இயலாததாயினும் தெரிந்தபடி
கூறப்புகுவோமாக என்று தோற்றுவாய் செய்தவாறு. இதனால் வருஞ்சரிதத்
தோற்றுவாய் செய்ததும், திருநீற்றுச்சார்பு உடைய என்றதனால்
இச்சரிதப்பயனை எடுத்துக் கூறியவகையில் முடித்துக் காட்டியதும் காண்க.

     நாந்தெளிந்த - என்பதும் பாடம். 42


     சரிதச் சுருக்கம் :- சோழநாட்டிலே செழித்த வயல்களாற்
சூழப்பட்டுச் சிறந்த பழையவூர் எயினனூராகும். அதில் ஈழக்குலச்சான்றார்
மரபில் அவதரித்து வாழ்ந்தவர் ஏனாதிநாத நாயனார். இவர் பழமையாகிய
திருநீற்றின் வழிபாட்டு நலத்தில் எஞ்ஞான்றும் குறைவுபடாதவராய்ச் சிறந்து
விளங்கினார். அரசர்க்கு வாள் பயிற்றும் தொழில் செய்து அதனால்வரும்
ஊதியத்தைச் சிவனடியார்க்கு ஆக்குவார்.

     இவ்வாறு பகைவர்களும் போற்றும் நல்லொழுக்கத்தில் இவர்
வாழ்கின்ற நாளிலே, வாள் பயிற்றுந் தொழிலில் உரிமையுடையானாய்
அதிசூரன் என்பானொருவன் இருந்தனன். அவன் இத் தொழிலிற் றன்னின்
மேற்கடந்துளாரில்லை என்னும் செருக்கடைந்து தன்னைத்தானே மிக
மதித்திருந்தனன். ஆயினும் தனது குலத்தாயத் தொழிலில் தனக்கு வருவாய்
குறையவும், அது இவர்க்கே நாளும் மேம்படவும் கண்டனன். அதனால்
இவரிடத்துத் தகாத வழியால் அழுக்காறு கொண்டு அதனால்
காலைஞாயிற்றின் முன் ஒளிமங்கும் மதிபோலழிந்து இவரை எதிர்த்துப்
போர்புரியத் துணிந்தனன். அதற்காகத் தன்பக்கம்