பக்கம் எண் :


822 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பலரையும் சேர்த்து இவரது மனைவாயிலினின்று "வாள்பயிற்றும்
தொழிலுரிமைத் தாயத்தைப் போரில் வலியாரே கொள்ளத் தக்கது" என்று
இவரைப் போருக்கு அறைகூவி அழைத்தான். இவரும் அவ்வொலி கேட்டுப்
"போருக்கழைத்தான் யாவன்?" என்று, ஆண்சிங்கம் போலக் கிளம்பிக், கழல்
கட்டி, வாளும் பலகையும் ஏந்திப், போர்முனையிற் புறப்பட்டார். அவர்பாற்
போர்த்தொழில் கற்கும் காளையர்களும் சுற்றத்தார் முதலியோரும் அவரோடு
சேர்ந்தனர். போருக்கழைத்த அதிசூரன் "வாள்பயிற்றும் தொழிலில் நமது
தாய உரிமையைக் கொள்வதற்காக இந்த வெளியிலே இருவர் படையும்
சந்தித்துப் போர் புரிந்தால் அதில் சாயாது நிற்பவரே அதனைக் கொள்ள
உரியார்" என்று கூறினன். இவர், "அது நன்று என உனக்கு வேண்டுவதாயின்
அவ்வாறே போருக்கு நண்ணுவேன்" என்று இசைந்து அவன் சொன்ன
போர்க்களத்துச் சேர்ந்தனர். இருவர் பக்கத்துப் படை வீரர்களும்
கைவகுத்துப் பொருதனர்.

     வாள்வீரர் வாள் வீரருடனும், வேல் வீரர், வில் வீரர் அவ்வவ்
வகையாருடனுமாக அக்களத்தில் வேறு வேறு பொருதனர். இருபக்கமும்
பலரும் பட்டனர். அதன்பின் ஏனாதி நாதர், படாது எஞ்சிய தமது படைக்கு
முன்வந்து வாளேந்தித் தாம் ஒருவராகவே சாரிகை சுற்றிப் பகைவனுடைய
படைஞரைக் கண்டதுண்டமாக்கி வீழ்த்தினார். பகைவன் படைஞர் பலரும்
பட்டனர். படாதார், மெய்யுணர்வு நேர்பட்ட போது ஆர்வ முதலிய
குற்றங்கள் ஒழிவது போல
அக்களத்தை விட்டொழிந்தனர். இதுகண்ட
அதிசூரன், அவர்களில் மீண்ட சில படைஞரைக் கொண்டு, தானே முன்வந்து
போரில் முனைந்தான். இவர்வாள் சுற்றிவரும் வட்டணையில் தாம்
தோன்றாவகையில் அவனைப் பற்றி வீசும் சமயம் வர அவன் இவர்க்குத்
தோற்றுத் தப்பிப் புறங்காட்டி ஒடினான்.

     அன்று இரவு முழுதும் மான மிகுதலினால் அவனுக்குத் தூக்கம்
வரவில்லை. பல முறையும் சிந்தித்தான். "ஈனமிகு வஞ்சனையால் வெல்வன்"
என எண்ணினான். விடியற்காலையில், "நாட்டார் பிறனூ நமது வாளின்
தாயங்கொள்ளும் போரிற் கொல்லாது வேறிடத்தில் நாம் இருவரும் போர்
செய்ய வருக" என்று இவர்க்குச் சொல்லிவிட்டான். இவரும் "அவ்வாறு
செய்தல் அழகிது" என்று உடன்பட்டு அவன் குறித்த தனியிடத்து யாவரும்
அறியாத வகையிலே வாளும் பலகையும் ஏந்தி முன்னே அவனை
எதிர்பார்த்து நின்றார். "திருநீறிட்டார்க்கு எவ்விடத்தும் இவர் தீங்கு
செய்யமாட்டார்" என்பதனை அவன் அறிந்தானாய், முன்னர்த் திரு நீற்றைப்
பயின்றறியாதானாயும் நெற்றி விரவப்புறத்திலே வெண்ணீற்றைப் பூசி,
மனத்திலே வஞ்சக் கறுப்பு முடன் வைத்து, வாளும் பலகையும் ஏந்திக்
குறித்த அந்தத் தனியிடம் புகுந்தனன். சிங்கம் தன் இரைப்பிராணியைப்
பார்த்து நிற்பது போல உயர்ந்து நின்ற இவர் நிலையைக் கண்டு அவன்
இவரைக் கிட்டி அணுகும் வரை, தனது நெற்றியைப் பலகையினால் மறைத்து
வந்தெதிர்த்தனன். இவர் விடையேறு போல அவனைத் தாக்கிக் கொல்லும்
இடைதெரிந்து தாள் பெயர்க்கும் போது அவன் தன் நெற்றியை மறைத்திருந்த
பலகையைப் புறம்போக்கினான். கடையவனாகிய அவன் நெற்றியிலே இவர்
வெண்ணீற்றினைக் கண்டார். கண்டபொழுதே "கெட்டேன்! இவர் மேல் முன்
காணாத திருநீற்றுப் பொலிவுகண்டேன். சிவபெருமானது சீரடியாராயினார்"
என்று உட்கொண்டு, இவர் குறிப்பின் வழிநிற்பேன் என நிச்சயித்துத் தமது
வாளும் பலகையும் போக்கக் கருதினார். பின்னர், நிராயுதரைக் கொன்றார்
என்னும்பழி இவர்பாற் சாரலாகாதென்று எண்ணி அவற்றை யேந்திப் போர்
செய்வார் போலக்காட்டி நேர் நின்றார். அந்தப் பாதகனும் தன் கருத்தே
முற்றுவித்தான்.

     சிவபெருமான் வெளிவந்து, பகைவன் கைவாளால் இவரது பாசமறுத்து,
இவர்க்கு என்றும் பிரியாது உடனிருக்கும் அன்புநிலையினை அருளிச் செய்து
எழுந்தருளினார்.