தலவிசேடம்
:- எயினனூர் - அரிசொல் ஆற்றின்
தென்கரையில்
உள்ளது. கும்பகோணம் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து தென் கிழக்கில்
கற்சாலையில் 4 நாழிகையளவில் உள்ள அழகார்திருப்புத்தூரினின்று
(அழகாத்திரிபுதூர் என்பர். இது புகழ்த்துணை நாயனார் தலம்) தெற்கில்
ஒரு நாழிகையளவில் கரைவழியாய்ச் சென்றால் இதனையடையலாம். இது
இப்போது ஏனநல்லூர் என வழங்கப்படுகிறது.
பழைய சிவாலயம் உண்டு.
இவ்வாலயம் ஒரு வைணவப் பெண்மணியாரால் கருங்கற்றிருப்பணி
செய்யப்பட்டுள்ளது. நாயனாரது திருவுருவமும் அவரது தேவியாரது
திருவுருவமும் உட்புறத்தில் சந்நிதிக்கு எதிர்ப்புறமாக ஈசானதிக்கில்
வைத்துப்பூசிக்கப்பட்டு வந்தன. இப்போது இவை வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீ
மாணிக்கவாசக சுவாமிகள் திருவுருவத்தின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சுவாமி - பிரம்மபுரீசர்; தேவியார்
- கற்பகாம்பிகை. திருக்கோயிலுக்கு
மேற்கே அரை நாழிகையளவில் ஆண்டான் கரையில் அதிசூரனுடன்
போர்நடந்த களமும் இடமும் உள்ளன என்ப. அங்கு ஒரு குளமும் அதன்
கரையில் ஒரு பெரிய ஆலமரமும் தென் கரையில் பெரிய திடலொன்றும்
உள்ளன. இதுவே போர்க்கள மென்று கருதப்படுகின்றது. நாயனாரது
குருபூசையன்று சுவாமி இவ்விடத்துக்கு எழுந்தருளும் சிறப்பு இப்போதும்
நடைபெறுகின்றது. இந்த இடம் இப்போது சாலைக்கரை என
வழங்கப்படுகிறது. இத்தலத்தில் நாயனார் பேரால் ஒரு திருமடமும் உண்டு.
நாயனார் சரிதமுழுதும் சித்திரமாகக் கோயிற்சுவரில் எழுதப்பட்டுள்ளது.
கற்பனை
:- 1.
சோழர்களது அரசாங்கம் இமயமலை வரை ஒரு
காலத்தில் பரவியிருந்தது.
2.
குடிதழைத் தோங்குதல் நகரத்துக்குச் சிறப்பாம்.
3.
முன்னாளில் மன்னர்க்கு வாள்பயிற்றும் ஆசிரியத் தன்மையைத்
தாய உரிமைப்படி வழிவழி வரும் உரிமையாய்ச் சிலர் பெற்றிருந்தனர்.
4.
செய்தொழிலில் வரும் வளமெல்லாம் கடப்பாடு பற்றி
அடியார்களுக்கு ஆக்குதல் செல்வம் பெற்ற பயனும் உறுதிப் பொருளுமாம்.
5.
ஒருவனது நல்லொழுக்கத்தினை நள்ளார்களும் போற்றும்படி
இயல்பினொழுகுதல் தக்கது.
6.
கல்விமுதலிய பேறுகளில் தனக்கு மேற்பட்டாரில்லை என ஒருவன்
தன்னைத் தானே மதிக்கும் பெருமிதம் தீயது.
7.
அழுக்காறு பொல்லாதது. அதுபல தீமைகளுக்கும் உள்ளாக்கும்.
அதனை வாராமற் காத்தல் வேண்டும்.
8.
வலியாரே தாய உரிமை கொள்ளுதற்குரியார் என்பது நீதிக்குப்
பொருந்தாத வழக்கு. இங்கு நாயனார் இதிற் போர்க்கு அமைந்தது இசைவு
பற்றியதாம்.
9.
ஒருவன் போருக்கு அறைகூவி அழைத்தால் போரேற்று நிற்றல்
வீரர் இலக்கணம்.
10.
முன்னாளில் வாள் முதலிய படைகளின் பயிற்சி
மக்களிடைமிக்கிருந்தது. படைகள் தாங்கவும் அவைகொண்டு தம்மையும்
நாட்டையும் காவல் செய்யவும், தமது தோள்வலிமையாலே வெற்றி பெற்றுத்
தம் பொருள்களைக் காவல் செய்யவும், பொருள் பெறவும் உள்ள வீர
உரிமைகளை முன்னாளில் நம்நாட்டு மக்கள் பெற்றிருந்தார்கள். இச்சரிதத்தில்
குறித்தவாறு வீரச் சுவையுள்ள குடிமக்களின் போர் (621-636) கேட்டற்கும்
அரிதாய் இந்நாள் நம்நாட்டின் வீரநிலை தாழ்ந்து நிற்பது வருந்தத்தக்க
தொன்றாம். இதன் வகைகளை அறிந்து திருத்தி நந்தமிழ் நாட்டவரை
அவர்கட்குரிய முன்னைய உயர்ந்த வீரநிலைபெற்றோங்கச் செய்து, மக்களை
நல்ல வீரமக்களாக்கிடுதல் அரசியலார்க்கும் குடிமக்கட்கும் உரிய
கடமைகளிலொன்றாம்.
|