பக்கம் எண் :


830 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     (இ-ள்.) வெளிப்படை. இந்தத் திருநாட்டிலே இவரது திருப்பதியாவது
யாது என்னில், முத்துக்களைக் கொழித்து வரும் அருவிகள் ஓடுதற்
கிடமாகிய சாரல்களை யுடைய நீண்ட மலைகள் சூழ்ந்த பக்கத்தில் மதம்
பொருந்திய யானைகளின் கொம்புகளால் வலிய தொடர்ந்த வேலியிட்ட
அதனால் ஒரே தன்மைத்தாகும் பெரிய மதிலரணாற் சூழப்பட்டு விளங்கும்
பழம்பதியாகிய உடுப்பூர் என்பதாம்.

     (வி-ரை.) திருநாடு - திருப்பதி - என்புழித் திரு என்பன நாயனார்
அவதரிக்கும் நலம் பெற்ற சிறப்புக் குறித்தன. பெரியவர்கள் அவதரித்தனால்
அந்நாடு பெருமை பெறும் என்றதனை "அறந்தருநா வுக்கரசும் ஆலால
சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ" என்று திருமுனைப்பாடி
நாட்டுக்கும், "ஐயர் நீரவ தரித்திட விப்பதியளவில் மாதவ முன்பு, செய்தவாறு"
- திருஞான - புரா - (179) என்று நகரத்துக்கும் சிறப்புக் கூறிய வகையில்
ஆசிரியர் அறிவித்திருத்தல் காண்க.

     நித்தில அருவி - மலையின் மூங்கில் - யானைக்கோடு
முதலியவற்றினின்று பிறக்கும் முத்துக்களை வாரிவரும் அருவிகள்.

     நீள்வரை சூழ்ந்த பாங்கர் - உயரத்தாலும் பரப்பினாலும் நீண்ட
மலைகளாற் சுற்றப்பட்ட பக்க இடங்களில். மத்த - மதத்தையுடைய;
வடசொல். "மத்தோன் மத்தனாக்கி" என்ற திருவாசகமுங் காண்க. இங்கு
மதம் யானைகளுக்கு இயற்கையடைமொழி. வெம்மை - கொடுமை.

     வன் தொடர் வேலி கோலி - யானைக் கொம்புகளை வரிசையும்
வலிமையும் பெறத் தொடாச்சியாய் நாட்டி வேலியாக அமைத்து.
மலைச்சாரலாதலின் புலி முதலிய கொடிய மிருகங்கள் மிக்கு வாழும்; அவை
பதியினுள்ளே புகுந்து மக்களையும் அவர்கள் கவர்ந்து வளர்க்கும் ஆனிரை
மான் முதலியவற்றையும் துன்புறுத்தாதபடி மதில்போல நகர்காவல்
செய்வதனைக் குறித்து வேலி கோலி என்றார்.

     ஒத்தபேர் அரணம் - புறப்பகையாகிய பகைவர் வாராது காப்பது
நீள்வரை சூழ்ந்த மலையரண்; உட்பகையாகிய ஏனை மிருகங்கள் வாராது
காப்பது யானைக் கொம்பின் வேலியாலாகிய இந்த மதிலரண்; இவ்விரண்டும்
ஒத்துச் சூழ்ந்து பெரிய அரண்களாய் இந்தப் பதியைச் சுற்றியிருந்தன என்க.
எனவே, இப்புராணத் தலைவராகிய நாயனார் புறப்பகை உட்பகை எனும்
இவ்விரு பகையும் வாராது முற்பிறப்பிலே தவம் புரிந்து காவல் செய்து இங்கு
வந்தவதரித்து இறைவனடி கூடியதாகிய இச்சரிதத்துக்கு ஏற்க நகர்வளப்
பொருளைக் குறித்த நயமும் காண்க.

     முதுபதி - பழம்பதி. பதி - மலை நாட்டு ஊர்களுக்கு வழங்கும்
பெயர்களில் ஒன்றாம். குறிஞ்சி நிலத்து ஊர்கள், சீறூர் (664) சிறுகுடி -
குறிச்சி என்பர். குறிச்சி வாழ்க்கை (657 - 687) என்றது காண்க. இந்நாளிலும்
மலைசர்பதி - இருளர்பதி என்னும் வழக்குக்கள் மலைநாட்டில் (கொங்கு
நாட்டில்) வழங்குவன காண்க. ஆகும் - உயிர்களுக்கு ஆக்கம் தரும் இடம்
என்ற குறிப்புமாம். 2

652.
குன்றவ ரதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யார்த்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியு மெண்குங் கடமையு மானின் பார்வை
யன்றியும் பாறை முன்றி லைவன முணங்கு மெங்கும்.   3

     (இ-ள்.) வெளிப்படை. அப்பதியில் வாழ்பவர்கள் மலைவாழ்நராகிய
குன்றவர்கள். அப்பதியின் இடமெங்கும் வளைந்த காதுகளையுடைய
நாய்களைக்கட்டிய வலிய கூட்டமாகிய விளாமரக் கிளைகளில்
வார்களையுடைய வலைகள் பக்கங்களில் தொங்க, காட்டுப் பன்றியும்,
புலியும், படியும், கடமை முதலிய மானினங்களும் என்றிவற்றின்
பார்வைமிருகங்களும், உள்ளன; அன்றி, இல்லங்களின் முன்னர்ப் பாறை
முற்றங்களில் ஐவன அரிசியும் அணங்கும் (உலரும்).