பக்கம் எண் :

பெரியபுராணம்199

     1-6. ஆலவட்டம் ஏய்ப்ப - மூந்நீர்க் குடரென - இவை மெய்பற்றிவந்த
உவமை அணி; சுரிமுக....காட்டும் - இவை உருவக அணி. கயம் - ஆழமுடைய;
முதுகு தெருவுபட - நீர்ப்பரப்பே தெருவுபோல வழிதர; முதுகு - முதுகுபோன்றதை
முதுகென்றதுபசாரம். திமில் - மீன் வலைஞரின் படகு; தடவுதல் - கைத்துடுப்பினால்
துழாவிச் செலுத்துதல்; நெய்ம்மீன் - கொழுப்புடையமீன்; (Cod Liver Oil - Shark
Liver Oil
முதலிய பண்டங்கள் காண்க.) கைம்மிகுத்து - கைவினைமிகக் காட்டி.
எறிஒளி நுளையர்
- என்றது மீன்கள் எளிதிற்றாமே வந்து அகப்படுதற்காகப் பரதவர்
இரவில் படகேறித் தீப்பந்தங் கொளுவிக் கடலிற் சேறலுடைமையினைக் குறித்தது.
நுளையர் - செம்படவர், நெய்தல் நிலமக்கள்; நெய் - கொழுப்புச் சத்து
மிகுதியுடைமை.
 
     ஆலவட்டம் ஏய்ப்ப - மேலே வலையை விரித்து வீசுதல் ஆலவட்டம் வீசுதல்
போன்றிருந்தது என்பது. முந்நீர்க் குடரென - கடலுள் வீசியலையை அதனுள்
அகப்பட்ட மீன் முதலியவற்றுடன் மெல்ல மேலே இழுத்தல் கடலின் குடரினை
வாங்குதல்போல இருந்தது என்பது. கடல் முதுகு - குடர் - ஏகதேசவுருவகம்.
கொள்ளைகொண்ட - ஒருவனது பொருளை உரிமையில்லாத மற்றொருவன் வலிந்து
கொள்ளைகொண்டதுபோல என்பது குறிப்பு. கொள்ளை - கொள் - பகுதி.
 
     7-8. சங்கு - பவளம் - நித்திலத்தொகுதி - இவை கடல்படு பொருள்கள்;
மீன் பிடிக்கும் வலையினுள் மீன்களோடு இவையும் அகப்பட்டுவரும். நுளையர்
வலைவீசிப் படுக்கக்ருதிய பண்டம் மீன்கள். ஆனால் சங்கு முதலிய இவை அவர்கள்
கருதாமலே வலையுள்ளே அகப்பட்டுவந்தன. வலிய அவர்க்குப் பயன்படுவன என்பதும்
கொள்ளை என்றதன் குறிப்பு. சுரி முகம் - உட்சுழிகளையுடைய முகம்.
 
     9. சங்கும் பவளமும் முத்துக்களும் முறையே மாலை நிலவும் செக்கர்ப்பொழுதும்
விண்மீன் உருவும் எனக்காணப்படுவன என்க. சங்கு கடைந்து உருவாக்கப்படாமுன்
கடலுணின்றும் எடுக்கப்படும்போது மங்கிய வெண்மை நிறமே காட்டுவன ஆதலின்
கதிரவன் ஒளி மங்கிய மாலை என்றார். விரிகதிர் - மேல் இரவு முற்றமுற்ற விரியும்
கதிரினை உடைய என்பது. மாலைமதியம் முதலில் ஒளிமங்கிக் காண்பதியல்பு. “புன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா” (306) என்றும், பின்னர் “நீற்றின் பேரொளி
போன்றது நீணிலா” (308) என்றும் கூறியவை இங்குக் கருதற்பாலன.
 
     தாரகை உரு - விண்மீன்களின் ஒளி; விரிகதிர் நிலவும், செக்கரும், தாரகையும்
ஒருங்கே மாலையிற் காண்பன; ஆதலின் வலையினுள்பட்டு ஒருங்கே வந்து துறையில்
கிடக்கும் சங்கு முதலியவற்றை உருவகிக்க உதவின. விண்ணிலுள்ள இவற்றை மண்ணில்
காட்டின என்றது உயர்வு நவிற்சி. இவை மூன்றும் மாலைப் பொழுது காட்டலின்
கைக்கிளைத் திணைக்கும், தலைவி வருந்தற்றுறைக்கும் உரிய காலமும் ஏற்பக்
கூறியதாயிற்று.
 
     10. உலவாக்காட்சி - இவை என்றும் அளவு பட்டுஒழித லில்லாத நிலை
கூறியபடி.
 
     12. கண்ணுறக்கண்டது - கண்ணினுள்ளே பொருந்த; சவிகற்பக் காட்சி; காண்டல்
- துறை. நுளையன் மீன்கவரப் படகிற் கடலின்மீது போய் வலைவிரித்து வீசுகின்றான்;
அது ஆலவட்டம் போல இருந்தது. வீசிய வலையினை மீன்படுத்துமேல்
இழுக்கின்றான்; அது கடலின் குடரினை வாங்குதல் போன்றது. அவ்வலையினுள்ளே
மீன்களுடனே, சங்கு - பவளம் - முத்து இவையும் அகப்பட்டு வந்து துறையிற்
சிதறுண்டு கிடக்கின்றன; இவை மாலை மதியமும், செக்கரும்,