தாரகைகளுமாகி உலவாக்காட்சி அளிக்கின்றன. இத்தகைய துறையை உடையவன் தலைவன் என்பது இவ்வடிகளின் கருத்து. |
நித்திலத்தொகுதி - என்றது பலவாய்க் குழுமும் தன்மை பற்றியது; தாரகையுருக்காண்டற்குத் தொகுதி உதவிற்று. |
13. காளமாசுணம் - காளத்தையுடைய பாம்பு. காளம் - கரியவிடம்; காளம் - கருமை; அதனையுடைய விடத்துக் காயிற்று; கதிர்மதிக் குழவி - சிவந்து வளைந்து திரண்ட கழுத்தின்பகுதிக்கு உவமை. காள மாசுணம் - சிவனது கழுத்தில் தங்கும் கரியவிடத்துக்கு உவமை. கொள்கை - இஃது உருவும் வினையும் பற்றிய உவமை. பாம்பு மதியைப் பற்றுதல் உபராக நிகழ்ச்சியிற் காண்பது; உள்பொருளுவமம். மதி - கலைகள் நிறைந்த சந்திரன்; குழவி - ஈண்டு இளமை குறிக்காது உவமைப் பெயராய் நின்றது. மதியைப் பாம்பு கோளிழைப்பது நிறைமதியினன்றி நிகழலாமை காண்க; மாசுணம் - ஈண்டு ராகு என்னும் கரும்பாம்பு; ஆதலின் காளமாசுணம் என்றார்; ஞாயிற்றைக் கோளிழைக்கும் கேது செம்பாம்பு என்பர். |
15. வானவனும் - அண்ணலுமாகிய இறைவர் என உம்மை விரிக்க. மணி திகழ்மிடற்று வானவன் - “நீல மணிமிடற் றொருவன் போல” (புறம்). நனைதிகழ் என்பதும் பாடம். |
17. ஆர்கலி - கடல். இது கடன்முழக்குக்கு ஆகிவந்தது. கடல் முழக்குப் போல முழக்குடைய விழா என்க. |
18. அலர் - பழிச்சொல்; அலருரை; விழாவின் ஒலிபோல அத்துணைப் பேரொலியுடன் அலர்ச்சொல் பரவிற்று என்பது; பண்பும் வினையும் பற்றிய உவமம்; ஊர் - அலர் சிறந்தது என்க. 25 |
| வெண்பா |
| | ஊரெலாந் துஞ்சி யுலகெலாம் நள்ளென்று பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலா மாந்துறைவா யீசன் மணிநீர் மறைக்காட்டுப் பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள். 26 | |
(இ-ள்) ஊரெலாம்....பாயிருட்கண் - ஊரில் உள்ள உயிர்கள் எல்லாம் உறங்கி, உலகமெங்கும் நடு இரவில் அடங்கி, நிலமெங்கும் ஓசையடங்கிய பரவிய இருளிலே; சீருலாம்....புள் - சிறப்புடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவரது அழகிய நீரினையுடைய திருமறைக்காட்டின் பூந்துறையின்கண் புட்கள் இரை மேய்ந்து கண்ணுறங்காதிருக்கின்றன. |
(வி-ரை) திணை - கைக்கிளை; துறை - இரவுநீடு பருவரல்; பிரிவாற்றாத தலைவி கூற்று. |
ஊரெலாம்...பாயிருட்கண் - ஊரில், உலகில் பாரில் எல்லாவுயிரும் உறங்கிய நள்ளிருளிலும் தான் உறங்காது தனியிரங்கும் நிலை. புள் துறைவாய் மேய்ந்து உறங்கா - தனது நிலையினைப் புட்களின்மேல் வைத்துக் கண்டு கூறியது. மேய்ந்து; இரைமேய்ந்து; புள் - இரவில் இரைதேடும் புள்வகைகள்; மறைக்காட்டுப் பூந்துறை என்றதனால் கடற்றுறை என்பதாம்; நெய்தற்றிணைக்குரிய நிலமும் ஆயிற்று, நெய்தற்றிணை இரங்கற்குரித்து ஆகலான். பாடுஅவிந்த - ஓசையடங்கிய. |