13. விருந்தின் - விருந்தினனாகக்கொண்டு; அருளுதல் - அன்புடன் கொடுத்தல். |
14. முலை...இறைஞ்சலின் - தன் முலையை நோக்கி நாணத்தால் தலைகவிழ்ந்து புன்முறுவல்செய்து வணங்கியமையாலே; முலைமுக நோக்குதல் - தலைவனைக் கண்டவழி நாணத்தாற் றலைகவிழ்தலினையும்; முறுவலித்தல் - ஒத்த அன்பின் விளைவையும்; இறைஞ்சுதல் - தலைவனாகக்கொண்டதனையும் காட்டுவன. இத்தன்மைச் செயல்களாலே. |
15. என் அங்கமெல்லாந் தானாயினள் - என் உடல் முழுதும் அவள்பாற் கொண்ட அன்புமயமாக அவளே இடங்கொண்டாள். எனது நிலை முழுதும் அவளே கவர்ந்துகொண்டனள். திருமடமலைமகட் கொரு கூறுகொடுத்துத் தன் - அன்பின் அணைத்தவன் - ஆரூர் இறைவன்; அவனது ஊரிலே யான் என் அங்கமுழுதும் கொடுத்தனன் என்ற நயமும் காண்க. |
15-16. எண்ணெய்ச் சிறு - துளி....புனலுற்றது போல - எண்ணெய்த் துளியினை நீரினுள் இட்டால் அது அந்நீர்ப்பரப்பு முழுதும் பரவி அதனை மறைக்கும்; அதுபோலச் சிறுபருவத்தின் இவளது சிறிய அன்பின் முளையாகிய செயல் என்மனத்தினுட் புகுந்து என் மனமுழுமையும் பரவி என்னைத் தன்னுள் அகப்படுத்தியது. வினைபற்றிவந்த உவமம். 28 |
| வெண்பா |
| | ஆயினவன் பாரே யழிப்பா ரனலாடி பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன் கண்ணாள னாரூர்க் கடலார் மடப்பாவை தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து. 29 | |
(இ-ள்) அனலாடி....கண்ணாளன் - அனலில் ஆடுபவனும், பேய்க்கணங்களையுடையவனும், உலகத்தைக் காக்கும் பேரருளை உடையவனும், தீயினை ஏந்தியவனும், கண்போன்றவனும் ஆகிய இறைவனது; ஆரூர்...மடப்பாவை - திருவாரூரில் உள்ள கடல்போன்ற இளைய பாவையினது; தண்ணாரும்....தாழ்ந்து - குளிர்ச்சி பொருந்திய முலையினுக்கே விருப்பம் கொண்டு; ஆயின அன்பு அழிப்பார் ஆரே - உளதாகிய அன்பினை அழிக்கவல்லவர் யாவர்? (ஒருவருமிலர்.)
|
(வி-ரை) திணை - கைக்கிளை; துறை - நலம்பாராட்டல்; கொங்கைக்கே தாழ்ந்து ஆயின அன்பு அழிப்பார் ஆரே என்று கூட்டுக.
|
தாழ்தல் - விரும்புதல்; தாழ்ந்து - பணிந்து என்ற குறிப்புமாம். கடலார் - கடல்போலப் பெரிதும் குணமுடையவள்; கொங்கைக்கே - கொங்கையினையே; நான்கனுருபு இரண்டனுருபின்பொருளில் வந்தது. பாவை - பாவை போன்றவள்.
|
ஆயின - உளவாயின; ஆக்க முடையன என்றலுமாம். அனலாடி - அனல் - தீயூழி; தீயினவன் - தீயை ஒரு கையில் ஏந்தியவன்; தீயைத் திருமேனியாக உடையவன்; எரிபோல் மேனியன்; பேயினவன் - பேய்க்கணமுடையவன். இனம் - கணம் கூட்டம். |
கண்ணாளன் - கண்போன்றவன்; அருமைப்பாடு குறித்தது; “மிக்குலக மேழினுக்குங், கண்ணாளா! ஈதென் கருத்து” (அற்புதத் திருவந்தாதி - 72) கண்போலுதலாவது உயிருக்குக் கண்போல வழிகாட்டுபவன்; உடனின்றுணர்த்துபவன்; கண்ணுதல் - உடனிருத்தல் என்றலுமாம்; “தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரன்” (தேவா); இத்திருப்பாட்டு முன்பாட்டின் கருத்தைத் தொடர்ந்து |