| | திடாஅ வாயமோ டுண்ணும் பொழுதில் திருந்திழைப் பிணைத்தோட் டேமொழி மாதே! விருந்தி னடியேற் கருளுதி யோ?வென, முலைமுக நோக்கி முறுவலித் திறைஞ்சலின் | |
| 15 | நறைகம ழெண்ணெய்ச் சிறுநுண் டுள்ளி பொங்குபுன லுற்றது போலவென் அங்க மெல்லாந் தானா யினளே. 28 | |
(இ-ள்) உலாநீர்....ஆரூர் - உலாவும் தன்மைகொண்ட நீரினையுடைய கங்கையாற்றினை ஒருசடையின் நுனியிலே தங்கும்படி ஒளித்துப், புலாலிற் குருதி ஒழுகும் போர் யானையினை உரித்த பூதநாதர் - ஆதிமூர்த்தி - முத்திக்கிறைவியாய் இளமையுடைய மலைமகளாகிய உமையம்மையாருக்குத் தமது திருமேனியில் ஒரு பாகம் கொடுத்துத் தமது அன்பினாலே அணைத்தவரது திருவாருன்கண்; நண்பகல் - பகல் உச்சிவேளையிலே; வலம்புரி....அமுதம் - வலம்புரிச் சங்குகளாகிய அடுப்பிலே பெருமுத்துக்களாகிய அரிசியைச் சலஞ்சலத்தில் நிறையப் பெய்து ஏற்றி, நன்மை விளங்கும் பவளமாகிய செந்தீயினைமூட்டி, அழகு பொருந்த இப்பியாகிய அழகிய துடுப்பினாலே ஒப்பத் துழாவி அடாமலே அடப்பண்ணிய அமுதத்தினை; வாய்மடுத்து...பொழுதில் - வாயில்வைத்து இடாமலே இட்டுத் தோழியர்களுடனே உண்கின்றபோதில்; விருந்தின்....என - விருந்தினனாக வைத்து அடியேற்கும் அன்புடன் கொடுப்பாயோ? என்று நான் கேட்க; முலைமுக நோக்கி.....இறைஞ்சலின் - தனது முலையின் முகத்தினைநோக்கி முகம் குனிந்து புன்முறுவலுடன் வணங்கினள் ஆதலின்; நறை.....போல - மணம் கமழும் எண்ணெயின் ஒருசிறு நுண் துளியானது பொங்கும் நீரினுள் வீழ்ந்ததுபோல; என்...ஆயினளே - எனது உடல் முழுதும் அவள் மயமாகவே நிறைவு பெறலாயினள். |
(வி-ரை) திணை - குறிஞ்சியிற் பாலை மயங்கியது. துறை - செவ்வியிலளாகிய தலைவியைக்கண்ட காட்சியிற் தலைவன் கூற்று. |
1-2. உலாநீர் - உலாவும் தன்மையுடைய நீர்; ஓடுகின்ற நீர்; வற்றாதநீர் என்றலுமாம். “நீரற வறியா” (புறம்); ஒரு சடை - ஒரு சடையின் நுனியில் தங்கும்; புலால்நீர் - புலால் பிளக்க அதினின்றும் வரும் குருதி - இரத்தம்; பொருகளிறு - பொருதற்குப் போந்த யானை; இருடிகள் யாகத்தினின்றும் ஏவிவிட்ட யானை. |
4-5. திரு - முத்தித்திரு; நண்பகல் - உச்சிப்போது; நண்பகல் பாலைக்குரிய பொழுதாகலானும், தலைவி சிறுசோறடும் பேதைப் பருவத்தளாதலானும் இஃது பாலைத்திணையாயிற்று. அதனுட் காட்சி நிகழ்தலின் குறிஞ்சி மயங்கியதாம். |
6-11. வலம்புரி....அமுதம் - சிறுமியர் சிறுசோறு சமைக்கும் நிலை கூறியபடி; வலம்புரி - வலம்புரி என்ற சங்குவகை; சலஞ்சலம் - சலஞ்சலம் என்ற சங்குவகை; வலம்புரி அடுப்பு - முத்து அரிசி - பவளச் செந்தீ - இப்பியந் - துடுப்பு - இவை உருவகம்; மாமுத்து - பெரியமுத்து. அடாஅது அட்ட அமுதம் - தீயினால் அடப்பண்ணாது பாவனையாற் சமைத்த அமுது; வாய்மடுத்து இடாஅ - வாயினிற் பெய்யாமற் பெய்து. பெய்ததுபோலச் செயல்காட்டி. இது விளையாட்டுவகை; ஆயம் - ஒத்த தோழியர் கூட்டம். அடாஅது - இடாஅ - செய்யுள் அளபெடைகள்; விளையாட்டின் உட்குறிப்பும் கொண்டன. |