இயல்பு பற்றிய ஆராய்ச்சியான் எழும் காலமும் நிகழ இடமில்லை; அவருட் சிவனைப்பாடினோரே இப்புலவர் என்று வரையறுத்தமையால் சங்கப் புலவரென்போர் பலரும் பாடியனவாகக் கிடைக்கும் பற்பலவேறு சமயத் திறம்படவரும் பாட்டுக்களின் பொருள் பற்றி எழும் பூசலும் நிகழ இடமில்லை. திருவாலவா யரன் சேவடிக்கே - கவி - பாடும் - சங்கமிருந்து தமிழாராய்ந்து பாடிய இடம் (உத்தர) மதுரையாதலானும், அவர் தலைச் சங்கத்துத் தலைப்புலவனாராதலாலும் ஆலவாயுடைய அவரைப்பாடும் என்றார். சேவடிக்கே - புலவர்களே - ஏகாரங்கள் பிரிநிலை; இதனை மலரடிக்கே (3939); “சடையார் தமையல்லாற் சொற்பதங்கள் வாய்திறவா” (3940); “மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர்” (3939) என்று விரிநூலுள் விரித்தமை காண்க. சேவடிக்கே......பாடும் - இவ்வியல்புகளுள், பொருளமைத்து இன்பக் கவிபாடும் என்பது “செய்யுணிகழ்” (3939) என்ற திருப்பாட்டிலும், சேவடிக்கே - பாடும் என்பது “பொற்பமைந்த” (3940) என்ற திருப்பாட்டிலும் விரிநூல் வரித்துரைப்பது காண்க. இன்பக்கவி - பேரின்பமாகிய வீடுபேறளிக்கும் கவி, சிவன் புகழ்பாடுதலால். புலவர் - புலம் - பேரறிவு. [குறிப்பு;- 49 பேர் புலவர்கொண்ட சங்கமதில் சிவனையேபாடிய புலவர்களைப் பற்றிய இப்பாட்டு திருவந்தாதியில் 49 வது பாட்டாக வருதல் திருவருட்குறிப்பாம்.] |
விரி;- 3939. (இ-ள்) செய்யுணிகழ்.....துணிந்து - செய்யுள்களாக நிகழவரும் சொற்களைத் தெளிதலையும், செம்மைதரும் பயனுடைய நூல்கள் பலவற்றை நோக்குதலையும் மெய்த்தவாறு உணர்கின்ற உணர்ச்சியின் பயனாவது இதுவேயாகும் என்று துணிந்து; விளங்கி......ஆளானார் - விளங்கி ஒளி வீசுகின்ற விடத்தினை அணிகின்ற கண்டத்தினை உடைய இறைவரது மலர்போன்ற திருவடிக்கே ஆளானவர்களே; பொய்யடிமையில்லாத.....மிக்கார் - பொய்யடிமையில்லாத புலவர் என்ற புகழான் மிகுந்தவர்கள். |
(வி-ரை) செய்யுணிகழ் சொல்தெளிவும் என்றதனால் சொல்லும், செவ்விய நூல்பல நோக்கும் - என்றதனால் பொருளும் உணர்த்தப்பட்டன; முன்னதில் எழுத்தும் சொல்லும் யாப்பும், அணியும் ஆகிய நான்கும், பின்னதில் பொருள் என்னும் பொருளிலக்கணம் ஒன்றுமாக தமிழிலக்கணமைந்தும் பெறப்பட்டமையும் காண்க. “உரையின் வரையும் பொருளி னளவும், இருவகைப்பட்ட எல்லை” (பட்டினத்தடிகள்). |
செய்யுள் - செய்யப்படுவது; “பல சொல்லாற் பொருட் கிடனாக வல்லோரணிபெறச் செய்வன செய்யுள்”; இவற்றினியல்பெல்லாம் தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்கலம் முதலியவற்றுட் காண்க. |
செய்யுள் நிகழ் சொல் தெளிவு - நிகழ்தல் - விளங்க நிலைத்தல்; சொல் தெளிதலாவது இடம் காலம் நுதலிய பொருள் முதலியவற்றுக்கேற்ற சொற்களைத் தெளிந்து கொள்ளுதல்; இதனாற் சொல்லிலக்கணமும் எழுத்திலக்கணமும் வரையறைபடத் தேர்தல் அடங்கியவாறு,. |
செவ்வியநூல் பலநோக்கும் - செவ்விய - செம்மை தரவல்ல; இதனால் விழுமியபொருளிலக்கண வரம்பும், அதனுள் சிறந்த இறைவன் புகழ்பாடும் நிலையும் கொள்ளப்பட்டன; நோக்குதல் ஊன்றிய கருத்தானுணர்தல்; இதனாற் பொருணூல் வகை கூறப்பட்டது; “பொருளமைத்து” என்பது வழிநூல். |
மெய்யுணர்வின் பயன் - தெளிவும் நோக்கும் மெய்யாக உணரும் உணர்வின் பயன். |