பயன் இதுவே - கண்டத்தார் மலரடிக்கே யாளாகுந் தன்மை பெறுதலே பயன்; ஏகாரம் பிரிநிலை; “வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயி ரஞ்சம ணும்” (அரசு, பழையாறை - வடதளி ) என்றபடி தமிழ் படித்தும் ஆட்படாத நிலையன்றித் தமிழ்பாடுதல் இறைவன் புகழ்பாடுதற்கேயாம் என்று துணிதல். “தமிழ்கற்போர்”- “ஞானத்தமிழ்”;“தமிழ்நாதன்” என்பன வாதியாக வருவன இக்கருத்துடையன. |
விளங்கி ஒளிர் கண்டத்தார் - என்க. விளக்கமாவது செம்மேனியி னடுவிற் கருமணி பதித்தாற்போல மேல் விளங்கிக் காணப்படுதல்; ஒளிர்தல் - சிவனது எல்லாம் வல்ல தன்மையும் பேரருளுடைமையும் உணர்ந்து உயிர்கள் அடைந்துய்யக் காட்டி நிற்றல். |
மலரடிக்கே - ஏகாரம் பிரிநிலை. மேற்பாட்டிலும் “புரிசடையார் தமையல்லால்” என்பது காண்க; “அரன் சேவடிக்கே” என்பது வழிநூல். |
ஆளானார் - புகழ்மிக்கார் - எனப் பெயர்ப் பயனிலையாக முடிக்க. |
பயனிதுவே - மலரடிக்கே ஆளாம் தன்மையினால் வீடுபேறு பெறுதல்; எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்” என்றது ஈண்டு வைத்துணர்தற்பாலது. ஐவகை யிலக்கணமும் கற்றுப், பாடுந்தன்மை வல்ல புலவர் பொய்யடிமையில்லாராய் இறைவருக்கு ஆளாகி அடிமைத் திறம்படப் பாடுதலே பயனாக் கொள்வர் என்பது. |
பொய்யடிமை யில்லாத - பொய் - பொய்ப் பொருள்; பொய்யடிமை - பொய்யினுக்கு அடிமை என்று நான்கனுருபு விரிக்க; மேற்பாட்டில் “மெய்யடிமை” (3940) என்றவிடத்தும் இவ்வாறே மெய்யினுக்கு அடிமை என்க; பொய்யாவன அசத்தாகிய உலகம் பாசம். |
பொய்யடிமை யில்லாத - என்று எதிர்மறை முகத்தாற் கூறியது உறுதிபயத்தற்கு! இதனை உடம்பாட்டு முகத்தால் “மெய்யடிமை யுடையார்” என மேல்வரும் பாட்டில் இவர்தம் பெற்றிமையினை விளக்கி யருளினார்; பொய்க்கு அடிமை யில்லாதாராயின், பின் எப்பெற்றியில் யாருக்கு அடிமையாவார் எனின், அதனை விளக்க எழுந்தது மேல்வரும் பாட்டு. |
பயில்நோக்கும் - புலமிக்கார் - என்பனவும் பாடங்கள். 1 |
3940. | பொற்பமைந்த வரவாரும் புரிசடையார் தமையல்லாற் சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டுநெறி தலைநின்ற பெற்றியினின் மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர் மற்றவர்தம் பெருமையா ரறிந்துரைக்க வல்லார்கள்? 2 |
(இ-ள்) பொற்பமைந்த ....அல்லாமல் - அழகினையுடைய பாம்புகளை அணிந்த புரிசடையினை உடைய சிவபெருமானை யல்லாமல் (பிறரைப் பற்றி); சொற்பதங்கள்.....பெற்றியினின் - சொற்பொருள்களைச் சொல்லாத தன்மையிற் றிருத்தொண்டின் நெறியினில் முதன்மை பெற்ற பண்பினாலே; மெய்யடிமை.....புலவர் - மெய்யடிமை யுடையாராகும் பெரும் புலவர்களாவார் இவர்கள்; மற்றவர்தம்....வல்லார்கள் - மற்று அவர்களுடைய பெருமையினை அறிந்து உரைக்க வல்லார்கள் யாவர்? (ஒருவருமிலர்) |
(வி-ரை) மெய்யடிமை யுடையாராம் - புலவராம் பொதுவியல்பினைப்பற்றி முன்பாட்டிலும், பொய்யடிமையில்லாதாராகும் சிறப்பியல்பினைப் பற்றி இப்பாட்டி |