பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்248

     பயில்அரண் - பழகிய அரணிடங்கள்.
 
     நாற்கருவி - தேர் - கரி - பரி - ஆள் என்ற நால்வகைச்சேனை; சமம் -
போர். கருவி - ஆயுதம்; படைத்தொகுதி குறித்தது; நாற்கருவியும் - முற்றும்மை
தொக்கது.
 
     வெஞ்சமரம் - என்பதும் பாடம்.                                  18
 
3960.     வளவனார் பெருஞ்சேனை வஞ்சிமலர் மிலைந்தேற
அளவிளர ணக்குறும்பி னதிகர்கோ னடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி யுயர்காஞ்சி மிலைந்தேறக்
கிளர்கடல்க ளிரண்டென்ன விருபடையும் கிடைத்தனவால்.           19
 
     (இ-ள்) வளவனார்....மிலைந்தேற - சோழரது பெரிய சேனைகள் வஞ்சிமலர்
மாலைசூடிப் போர்க்குச் செல்ல; அளவில்.....மிலைந்தேற; அளவில்லாத
அரணங்களையுடைய குறுநிலமன்னனாகிய அதிகனுடைய வலியசேனையும்; உள்ளம்
நிறைந்த வெவ்விய சினத்தினாற் றிருகப்பட்டு உயர்ந்த காஞ்சிப்பூச் சூடிப் போர்க்கு
வர; கிளர்....கிடைத்தனவால் - சத்திக்கும் பெருங்கடல்கள் இரண்டும் தம்முட் கிளர்ந்து
எழுந்தாற்போல இருதிறத்தோரது படைகளும் கிட்டியன.
 
     (வி-ரை) வஞ்சி - காஞ்சி -புறத்திணை ஒழுக்கங்கள். புறத்திணைகள் வெட்சி
முதலாகப் பெருந்திணை யீறாகப் பன்னிரண்டாக வகுக்கப்படுவன. எழுத்துச் சொற்
பொருள் யாப்பு அணி என்னும் ஐவகைத் தமிழிலக்கணத்துட் சிறந்த பகுதி பொருள்
எனப்படும்; அது தமிழ்மொழிக்கே சிறப்பாயுரியது. அது அகம் - புறம் என்னும்
இரண்டு பிரிவினையுடையது. அகமாவது தம்முள் ஒத்த அன்புடைய தலைவன்
தலைவியர் கூட்டத்து நிகழ்ந்து, அவராலும் இவ்வாறென்று கூறப்படாத நிலையில்
உள்ளத்துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம்; அகத்தே நிகழ்தலின் அகம்
எனப்படும். புறமாவது முன் கூறியபடி ஒத்த அன்புடைய தலைவன் தலைவியர்
என்பதன்றி எல்லாராலும் அறியப்படுவதாய், உணரப்படுவதாய், இவ்வாறென்று
பிறருக்கும் எடுத்துச்சொல்லப்படுவதாய், அறனும் பொருளும் என்ற
இரண்டன்இயல்புடையதாய்ப் புறத்தே நிகழும் ஒழுக்கம். புறத்தே நிகழ்வதாற் புறம்
எனப்படும். புறத்திணை இயல்பும் பாகுபாடும் பற்றித் தொல்காப்பியம்
(புறத்திணையியல்), பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுட்
காண்க; இவற்றுள்ளே தொல்காப்பியத்துட் சிற்சில வேறுபாடுகள் உண்டு, முன்கூறிய
புறத்திணைகள் பன்னிரண்டாம். அவற்றுள், வெட்சி முதல் தும்பை யீறாக ஏழும் புறம்
என்றும், வாகை, பாடாண் பொதுவியல் என்ற மூன்றும் புறப்புறம் என்றும், கைக்கிளை
பெருந்திணை என்ற இரண்டும் அகப்புறம் என்றும் வகுக்கப்படும். அவற்றுள் புறம்
ஏழனுள் 3வது, 4வதாகக் கூறப்படுவன வஞ்சி - காஞ்சி என்ற திணைகள்; வஞ்சித்
திணையாவது
பகைவரது நாட்டினைக் கொள்வதற்கெண்ணி அவர்கள்மேற் செல்லுதல்;
“புறம்போந்து, கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார்” (3959);
இவ்வாறு செல்வோர் இதற்கறிகுறியாக வஞ்சிமாலை சூடிச் செல்வது மரபு; வஞ்சி
சூடுதலின் வஞ்சி எனப்படும்; ஏனைய வெட்சி முதலிய புறத்திணைகளும் இவ்வாறே,
சூடும் மாலையாற் பெயர் வழங்குவன; வஞ்சித்திணை, வஞ்சியரவம் முதலிய 20
துறைகளைக் கொண்டது. இஃது அகத்திணையாகிய முல்லையினது புறம் என்பர்;
காஞ்சித்திணையாவது அவ்வாறு போர் செய்தற்கு வந்த பகைவனுக்கு எதிரே சென்று
போர் குறித்து ஊன்றி வகுத்தல்; இதற்கு காஞ்சிமலர் சூடுதல்