பக்கம் எண் :

பெரியபுராணம்247

     புரிந்தவன் என்று புறநானூறு அறிவிக்கின்றது.1 இவனது மேற்கூறிய நகரமும்
மலைகளும் சோழரது தலைநகரமாகிய கருவூருக்கு அணிமையில் உள்ளன.
நெடுஞ்சடையன் என்னும் பாண்டியன் அதியமானை அயிரூர் -புகழியூர் - என்ற
இரண்டிடங்களிற் போரிற்புறங்கண்டான் என்று அறியப்படுகின்ற அவ்விரண்டு (அயிலூர்
புகழூர் - என வழங்கப்படுகின்றன) ஊர்களும் கருவூரின் பக்கத்தில் உள்ளன; அவன்
இப்போரிலும் உடைந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். (3970)
 
     அணித்தாக ஓங்கெயில் சூழ்மலை அரணம் - தகடூரும், கொல்லிமலை
குதிரை மலைகளும்; முன் கூறியவை காண்க.2
 
     நுமக்கு எதிர்நிற்கும் அரணுளதோ? - நுமக்கு - சேனைப் பெருவீரமும்
வலிமையும் வாய்ந்த உமது படையின் விறலுக்கு; எதிர்நிற்றல் - பகைத்து நிலை
நிற்றல்; அரணும் உளதோ - என்று உம்மை விரிக்க. ஓகாரம் வினா; எதிர்மறை
இன்மை குறித்தது. இஃது அரசர்கள் தமது சேனை வீரர்களைத் தேற்றி வீரம்
விளைக்கும் மரபுகளுள் ஒன்று. தமது படை வலிமையினை அமைச்சர்கள் மேல்
ஏற்றிக்கூறியது அரசாட்சித் திறமாகிய மதியூகம்.
 
     படைஎழுந்து....பற்றறுப்பீர் - இது அமைச்சர்க்கு அரசர் இட்ட கட்டளை;
“ஆணை” - (3958) துகளாக - துகளாகச் செய்து; பற்று - பற்றுக்கோடாக நின்ற
அரணத்தை; அரணம் - காவல் பொருந்திய இடம்.
 
     பற்றுவீர் - என்பதும் பாடம்.                                   17
 
3959.     அடல்வளவ ராணையினா லமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமு நெடுங்கிரியும் பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற வெஞ்சமத்தை மிகவிளைத்தார்.            18
 
     (இ-ள்) அடல்.....மேற்செல்வார் - வல்லமையுடைய சோழரது ஆணைப்படி
அமைச்சர்களும் புறத்தே போந்து கடல்போன்ற பெரும்படைகளை அணிவகுத்து
மேலே போருக்குச் செல்வார்களாய்; படர்வனமும்....மிக விளைத்தார் - படர்ந்து
மிடைந்த வனங்களும் உயர்ந்த மலைகளும் பயிலும் அரணங்களும் பொடியாகும்படி
வலிய நாற்பெரும் படைகளும் பொருந்த வெவ்விய போரினை மிகவும்
விளைவித்தார்கள்.
 
     (வி-ரை) ஆணை - படைஎழுந்து அரணம் துகளாகப் பற்றறுப்பீர் (3958) என்ற
கட்டளை.
 
     புறம் - நகர்ப்புறம்; சேனைகளுக்கு இடம் வகுத்த கூடம் முதலியன உள்ள
புறநகர்.
 
     கைவகுத்து - அணிவகுத்து; மேற்செல்லுதல் - போர் முகத்துப் புகுதல்.
பகைமேற் சேறல்.
 
     இது வஞ்சித் திணை: மேற்செல்வார் - முற்றெச்சம்; படர்வனம் - படர்தல் -
செறிந்து விரிந்து பரவுதல்.
- - - - - - - - - - -
 
     1 :- புறநானூறு 87 - 95, 97 - 101, 103 -104, 158 - 206, 208 - 231, 232 - 235,
310 - 315, 390.
இவனைப் பாடினோர் ஒளவையார், பரணர் முதலியோர்.
 
     2. குறிப்பு:- இவைபற்றி எனது சேக்கிழார் என்ற நூலில் அதிகன் என்ற
தலைப்பின் கீழ் 111 - 113 பக்கங்களிற் கூறியவற்றையும், அவற்றுட் கூறிய பழந்தமிழ்
நூல்கள் முதலிய வரலாறுகளையும் பார்க்க.